பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 405


ஓர் குடும்ப வாழ்க்கையில் மெய்யைப் பேசுவதும், பொய்யை அகற்றுவதும், சகல உயிர்களின் பேரிலும் அன்பை வளர்த்தலும், கொல்லா விரதங்கொள்ளலும், அன்னியர் பொருளை களவாடாதகற்றலும், பேரவாவை ஒழித்தலும், அன்னியர் மனைவிகளை தங்கள் சகோதரிகளைப்போல் பாவித்தலும், காமயிச்சையைப் பெருக்காமலகற்றலும், புத்தியை மயக்கக் கூடிய பானங்களை அருந்தாதகற்றலும், எக்காலும் நிதானவிழிப்பில் இருத்தலுமாகிய நற்செயலிலும், நன்முயற்சியிலும், நல்லூக்கத்திலும், நற்கடைபிடியிலுமிருந் தொழுகுவார்களாயின் அக்குடும்பச் சிறுவர்களும் குலப்பழக்கத்தினின்று சுகச்சீர் பெற்று சகல சம்பத்தமைந்த யோகத்தில் நிலைத்து சத்தியசங்கத்திற் சேர்ந்து நற்பழக்க விருத்தியால் கூடிய சீக்கிரம் நிருவாணசுகம் பெறுவார்கள்.

குடும்பப்பெண்கள் தங்கள் தாய்தந்தையரை விட்டு நீங்கி கணவரை அடுத்தபின் தங்கடங்கள் கணவர்களையே கண்ணவர்களாகவும், காக்குங் காவலராகவும், அவர்கள் விவேகமொழிகளையே மந்திரபோதமாகவும் அவர்களைப் பசிதீரச் செய்வதே தங்கள் பசியாற்றலாகவும், அவர்கள் சுகத்தைக் கண்ணாரக்கண்டு களிப்பதே தங்கள் சுகமாகவும், அவர்கள் விவேகமொழிக்கு எதிர்மொழி கூறாது அடங்கிநிற்றலே மடமாகவும், தன்னுருவத்தையும் முகதேஜசையும் அன்னியபுருஷன் கண்ணிற் பாராது மறைதலே நாணமாகவும், கணவர்பால் அடங்கி வார்த்தையாடலே அச்சமாவும், அன்னியர் விருந்தோம்பி அவர் பசியாற்றலே பயிர்ப்பாகவுமிருந்து விவேக முதிர்ந்து காமியம் அவிந்துவருமாயின் கூடிய சீக்கிரம் சத்தியசங்கஞ்சேர்ந்து நிருவாணசுகம் பெறுவார்கள்.

குடும்பத்துப் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் விவேக விருத்திப் பெறக்கூடிய போதனைகளையும் வித்தியாபிவிருத்தி அடையக்கூடிய சாதனங்களையும், ஈகை விருத்தி அடையக்கூடிய காருண்யத்தையும், அறிவுக்குள் மனமடங்கக்கூடிய சன்மார்க்கங்களையும் விருத்தி செய்துக்கொண்டே வருவார்களாயின் சிறுவர்கள் தாய்தந்தையரைக் கனஞ்செய்து ஆனந்தத்திலிருப்பதுடன் அன்னிய சீவராசிகளுக்கும் உபகாரிகளாய் விளங்கி நாளுக்குநாள் சுகம்பெருகி துக்கங்கெடும் வழியே சென்று சாதுசங்கஞ் சேர்ந்து பூரணசுகமாம் நிருவாணம் பெறுவார்கள்.

குடும்பிகள் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழும் சேர்க்கையே சகல சுகத்திற்கும் ஆதாரமாகும். மனையறவாழ்க்கையில், அன்பும் ஆறுதலும் பெற்று வாழ்பவர்களே கூடிய சீக்கிறந் துறவறவாழ்க்கையைப் பெறுவார்கள். மனையறத்தில் அன்பும் ஆறுதலுமற்ற துன்பும் தொல்லையும் பெற்றவர்கள் துறவறத்திற்கு அருக ராகமாட்டார்கள்.

துறவறப் பாதையே மனையறமாதலின் மனையறத்தின் ஒழுக்கம் வழாது வாழ்பவர்களே மானிகளாகும் மநுக்களின் வாழ்க்கை பெறுவர். மிருகங்களல்ல மக்களென்றும், மக்களல்ல மனுக்களென்றும் பெயர்பெற வேண்டியவர்கள் மனையறத்தையே மகத்துவப்படுத்தி மன அமைதிக்குக் கொண்டுவரல் வேண்டும். என்ற மனையறத்தையும் துறவறத்தையும் போதித்து முடித்த பகவனது நிருவாணமுடிவிற்கு சேணிபவரசன் விருந்தே கடைசி விருந்தாக முடிந்தது.

யாப்பருங்கலைக்காரிகை

வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக்
கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலால் வரன்முறையான் வந்தேத்த
சோலைதாழ்ப் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ் சொன்முறையான்
மனையறமுங் துறவறமு மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடு தட்டிவையுரைத்த தொன்மெய்சால்கழி குணத்தெந்
துறவாசை தொழுதேத்த நன்மெசால் வீடெய்துமாறு,

வீரசோழியம்

கொடுத்தலும் அளித்தலுங் கோடலு மின்மெயு
ஒழுக்கொடு புணர்தலும் புணர்ந்தோர் பேணலும்
வழுக்கில் பிறவு மனையறவகையே