பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 411


வீரசோழியம்

மணியிலகு செறிதளிரோ டலரொளிய / நிழலமர மருவியறவோர்,
பிணிவிரவு துயரமொடு பிறவிகெட / உரையருளும் பெரியவருளோன்,
றுணியிலகு சுடருடைய உடலமொடு / பிரமனெனுந் தலைமெயவர் மா,
வணியிலகு. கமலமல ரனையவெழி / லறிவனிணை யடிகடொழுவாம்.
போதிமேவினை பொய்மெயகற்றினை / சோதிவானவர்தொழவெழுந்தருளினை
ஆதிநாதநீனடியினை பரவுதும்.

சங்கத்தோர்களில் விவேகமிகுத்தவர்கட் சிலர் தங்கள் குருபரன் தனது தேகத்தில் பிணியொன்று அணுகாமலும், நரைதிறைவாய்த்து மூப்படையாமலும் குமரபருவ சுக தேஜசிலிருந்து பஞ்சாவஸ்தையாம் மரணவாதையின்றி ஆனந்தச் சோதிமயமாய் சகலருங்காண பரிநிருவாணமுற்றபடியால் ஆனந்தக் கூத்தாடி அருள் நிறைந்தோம் அருள் நிறைந்தோமென்றுபாடி பெருநிட்டையில் நிலைத்தார்கள்.

மற்றய சங்கத்தோர்கள் சித்தார்த்தர் பரிநிருவாணமடைந்த செய்தியை அவரது வம்மிஷவரிசை பேரர்களாகும் சாக்கையர்களுக்கும் தேகபாது காப்பாளராகும் மல்லர்களுக்கும் தருமப்பிரியவரசர்களுக்குந் தெரிவித்தார்கள்.

முக்கியமான ஏழு அரசர்கள் தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் வந்துசேர்ந்து பரிநிருவாணசயனத்திலிருக்கும் நிமலனைக்கண்டு பிணி மூப்பணுகா பெரியோன் தேஜசும், நரைதிரை காணா நாதன் வடிவுமே பிறவி சமுத்திரத்தைக் கடந்த பேரின்பசாட்சி என்று உணர்ந்து அருகபூதே அருளாழி வேந்தே நீவிராசை துறந்த பெருமெய் குமரபருவம் நீங்கா குறிப்பால் விளங்குகின்றது. யாங்களோ வீண்டம்ப அனுபோகத்தினின்று மாறாப் பிணியாலும் மூப்பாலுந் துக்கத்தைப் பெருக்கிக் கொண்டே வருகின்றோம். அரசர்களென்னும் பெயர்பெற்றும் அல்லலும் அவதியும் எங்களை விட்டகன்ற தில்லை. ஆறுதலுள்ள மனோதுக்க தேகதுக்க செயலால் சுகநித்திறையற்று திகைத்து நிற்கின்றோம். தாங்களோ ஆனந்த நித்திறையில் லயித்து சதா விழிப்பினின்று சருவசீவர்களுக்கும் சத்தியதன்மத்தை ஊட்டிய நாவானதயரவும் கருணா நோக்க விழியானது மூடவும் இன்றுதான் கண்டோம். இனியார் பால் அறவுரைக் கேட்போம். இனியாவரது கிருபாநோக்கம் பெறுவோமென்று அலறிவிழுந்து அறஹத்துக்களால் ஆறுதல் அடைந்து அறவாழி அந்தணன் தேக தகனத்திற்காய் ஏறாளமான சந்தனக்கட்டைகளையும் கற்பூரத்தையும் அகில் தைலங்களையுந் தருவித்தார்கள். சாக்கைய வம்மிஷவரிசையோரும் மல்லர்களும் மற்றுஞ் சங்கத்தோர்களும் வந்து சேர்ந்து பொன்மதில் வெள்ளிமதிலமைந்த சித்திரமாளிகையில் சயனித்த தேகம் மரத்தடி புழுதியில் இருகால்களை நீட்டி வலதுகையை சிரசிற்றாங்கி ஓலையின் பன்னகசயன அறப்பள்ளியுற்றிருப்பதைக் கண்டு தலைத்தார் வேந்தர் பதியைத் துறந்தசுகம் இதுதானோ, உலகச் சக்கிராதிபதியாகும் ஓர் மகவைத் துறந்த உல்லாசமிதுதானோ என்றவ ரடியில் வீழ்ந்து கதரி அவர் பரிநிருவாண ஆனந்தமறியாத அஞ்ஞான முற்றோர் சிலர் யாதா மொரு பிணியுமின்றி சுகதேகத்துடனிருந்தவர் எவ்வகையால் இறந்தார். யாது புசிப்பெடுத்தார், இவரது மரணத்திற்குக் காரணம் யாதென்று கண்கலங்கி நின்றார்கள்.

சாக்கையர் பிரிவாற்றா மூவடி வெளி விருத்தம்

உலக மிருண்டனவா லுள்ளொளி பிரிந்தனவா லென்செய்கோம்யாம்
இலகு மொளிகுளிர்ந்துயெங்கும் பரந்தனவா லென்செய்கோம்யாம்
சலமலிந்த கடலலைகள் சாலவமர்ந்தனவா லென்செய்கோம்யாம்.
கொண்டல் முழங்கினவாற் கோடற்பரந்தனவா லென்செய்கோம்யாம்
வண்டுவரிபாட வார்தவளம் பூத்தனவா லென்செய்கோம்யாம்
எண்டிசையுந்தோகை யிசைந்தகவியேங்கினவா லென்செய்கோம்யாம்.
குலமரபோர் கூடுமொரு கூக்கல் முழங்கினவா லென்செய்கோம்யாம்
கலகலெனுங்கிண்கிணியார காதல் நிறைந்தனவா லென்செய்கோம்யாம்
பலகலையுமீய்ந்த தொனிபாகல் மறைந்தனவா லென்செய்கோம்யாம்.
அமுதவாக்கின்மொழியாம் அறமுமறைந்தனவா லென்செய்கோம்யாம்
குமுதமலர்வீற்றிருந்த கோமான் மறைந்தனரே யென்செய்கோம்யாம்
சுமுகசுகவாருதியின்சூ ழலமர்ந்தனவா லென்செய்கோம்யாம்.