பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 415


வந்து குழவிக்கு அமுதூட்டிய ஆட்சரியங் கண்டு கௌதமரென்னும் காரணப்பெயரும், கலிவாகுச் சக்கிரவர்த்தியால் கணிக்கப்பெற்ற சித்தார்த்தி வருஷம் வைகாசிமீ பௌர்ணமியில் பிறந்து சித்தார்த்தி என்றும் பெயர்பெற்ற பெரியோன் பிறந்த காலவாட்சரியக் குறிப்புகளைக் கண்டும் அவரை தரிசிக்கவேண்டி தூரதேசத்தினின்று தவழ்ந்துவந்த இருசப்பாணிகளாகிய ஆனந்தன், பிருங்கி என்னும் இருவர்கள் எழுந்துநின்று நடக்க ஆரம்பித்த ஆட்சரியத்தைக் கண்டும், அவரது வாலவயதில் போதித்த நீதிமொழிகளின் ஆட்சரியங்களைக் கண்டும் தனது அரியமனைவி அசோதரையையும் அரிய புத்திரன் இராகுலனையும் விட்டு மாசிமாதம் பௌர்ணமியில் துறவுபூண்ட ஆட்சரியத்தைக் கண்டும், அத்தகையத்துறவினிலையால் சகல பற்றுக்களுமற்று கல்லாலடியில் வீற்று பங்குனி மாதப் பௌர்ணமியில் நிருவாண சுகநிலைபெற்று காமமென்னும் மன்மதனையும், மரணமென்னும் காலனையுஞ் செயித்து சகலமுமுணர்ந்து தான் மறுபிறவிக்கேகாது பிறவி நிலையை ஜெயித்த வழிகளையும், தேக சுகஈனமடையாது பிணியை ஜெயித்த வழிகளையும், தேகந் தளராது மூப்பை ஜெயித்த வழிகளையும், பஞ்ச அவத்தைக்குள்ளாகாது மரணத்தை ஜெயித்த வழிகளையும் உலக மக்களுக்கு அநுபவக் காட்சியாகப் போதித்து வந்த ஆட்சரியங்களைக் கண்டும், உலகெங்கும் சத்தியதன்ம சங்கங்களை நாட்டி மெய்யறத்தையூட்டி, உண்மெயறியும் வழிகளைக் காட்டி நட்சேத்திரமாம் தனது புத்தேளுலகநிலை பெறுகுவதற்காக மார்கழிமாதப் பௌர்ணமியில் சுயம்பிரகாசமாகப் பரிநிருவாணமடைந்த ஆட்சரியங்களைக் கண்டும் வந்தவர்களாகும் உலகமக்களுக்கு என்றுங்காணா ஈதோர் புதுமெயும் முத்திய நிலயுமாகக் காணப்பட்டபடியால் இவரே முத்திக்கு முதல்வனென்றும், ஞானத்தின் வழிகாட்டி என்றும் உலகெங்கும் சங்கங்களை நாட்டி அறத்தைப் போதித்துள்ளபடியால் இவரே ஜகத் குருவென்றும் சக்கரவாளமெங்கணும் அறக்கதிர் விதைத்துள்ளபடியால் உலகுக்கு நீதி போதமளித்த உலகநாத னென்றும் உலகிலுள்ள சருவசீவர்களையும் தனது தருமச் சக்கரநெறியில் நிறுத்தியவராதலின் திருமாலென்றும் அவர் பரிநிருவானம் அடையும் வரையில் நரைதிறை காணாது கருணாகரமுகமும் தேஜசும் நிறைந்த வடிவாய் நின்றபடியால் திருமூர்த்தியென்றுங் கொண்டாடி அவர் பரிநிருவாணமுற்ற அயனமாம் ஆறாவது மாதத்தில் பௌத்த அரசர்களும், குடிகளும், சங்கத்தோர்களும் ஒன்றுகூடி அவர் பரிநிருவாண முற்றப் பேரானந்த ரகசியத்தை விளங்க போதித்து பகவன் பன்றியின் இறச்சியைத் தின்றதுங்கிடையாது, அவர் பஞ்ச அவஸ்தையால் மற்றய மனுக்களைப்போல் மரணமடைந்ததுங் கிடையாதென்று அநுபவங்களை ஊட்டி அறவாழியான் மறைவிற்குத் துக்கமடையாதீர்கள் ஆனந்தத்தில் வீற்றிருங்கோள் ததாகதர் தன் வினையை ஜெயித்து ஏனையோர் வினைகளையும் ஜெயிக்கத்தக்க வழிகாட்டியிருக்கின்றார். நீங்கள் யாவரும் அவர் போதித்த வழியில்நடந்து அவரடைந்த பரிநிருவாண மடையுங்கோள் என்று தென்புலத்தோராம் விவேக மிகுத்தோர்கள் கூறினார்கள்.

அவற்றைக் கேட்டிருந்த விவேகமற்றப் பெருங்குடிகளும் சில அரசர்களும் விவேகிகளின் கூற்றை மறுத்து மாமிஷ பட்சணம் என்றும் செய்யாதவரும், திடகாத்திரமும், சுகதேகியுமாயிருந்தவருக்கு பன்றியின் இறைச்சியைப் புசிக்க வைத்துக் கொன்றுவிட்டார்கள். அவரது மரணத்திற்குப் பன்றியினிறைச்சியே காரணமாதலின் வருடந்தோரும் அவர் மரணமடைந்தநாளிற் பன்றி எய்து பெரியாண்டவனை பூசிக்கவேண்டுமென்று ஓர் வகுப்பார் பிரிந்து கொண்டார்கள். இவர்களே ஈனாயன பௌத்தர்களென்று அழைக்கப் பெற்றவர்களாகும்.

மற்றுமுள்ள சங்கத்தோர்களும் விவேக மிகுத்தோர்களும் அகிம்சா தன்மத்தை ஆதியில் ஊட்டிய அப்பனுக்கு இம்சாதுதி ஏற்காது, அது சாது சங்கத்தோரைக் கார்க்காது, அவரை சிந்தித்து நீதிமார்க்கத்தைக் கொண்டாட வேண்டியவர்கள் அஹிம்சா தருமத்தில் நிலைத்து வைகாசிமாத பருவத்தில்