பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 33

சாந்திட்டுக் கொள்ளுவதால் விஷக்கிருமிகள் அகலும் என்பதேயாம்.

- 1:11; ஆகஸ்டு 28, 1907 –

எங்கெங்கு மழை குறைந்து புழுக்கந்தோன்றுகிறதோ அவ்வவ்விடங்களில் பதின்மூன்று வகை வைசூரியும் மூன்றுவகை பேதியுந்தோன்றி சீவர்களைக் கொள்ளைக்கொள்ளுவதற்கு கண்ணுக்குத் தோற்றா சாமளை என்னும் சிறுப் புழுக்கூட்டங்களே காரணமாயிருந்தது. அப்புழுக்கூட்டங்கள் அகலுவதற்கு வேப்பிலை கற்பூரப்புகை, மட்டிப்பால் புகை, அவுரிப் புகை இவைகளை வீடுகள், வீதிகளெங்கும் கமழச்செய்து சீவராசிகளின் நாசியிலும் நாவிலும் புழுக்கள் நுழைந்து கொள்ளைக் கொள்ளுவதால் பல தானியங்களை உப்பிடாமல் அவித்துப் பச்சரிசிமாவு இடித்தும் அதில் வேப்பிலையைக் கலந்து சகலரையுஞ் சாப்பிடும்படி தானஞ் செய்வதால் உள்ளுக்கு நுழைந்த புழுக்கள் கழிந்து மாறி தோன்றாமல் நிற்கவும் போதித்து கொடியமாறி என்னும் கொள்ளைநோய் வெப்பத்தை ஆற்றினவளாதலால் கொடுமாறியை ஆற்றிய மாறியாத்தாள் மாறியாத்தாள் என்று கொண்டாடி வந்தார்கள்.

அம்மன் வாக்கில் தோன்றும் திரிகாலக்கியானங்களுக்கும் மகிழ்ந்து அரசர்கள் முதல் பல தேசக்குடிகளும் வந்து சூழ்ந்துக்கொண்டதும் அல்லாமல் சிம்மம், யானை, பாம்பு முதலிய ஜெந்துக்களுஞ் சூழ்ந்து அறவுரைக் கேட்பதுடன் அவரவர்களுக்குள்ள அந்தரங்கக் குறைகளையும் கேழ்க்கும்படி நெருங்கிய கோஷத்திற்கஞ்சி ஆகாயத்தில் எழும்பி சோதிரூபமாக அந்தரத்தில் நின்றுவிட்டாள்.

ஞானவெட்டி

வானத்தெழுந்த வாலாம்பிகைதன்னை / மதியாலறிந்து கதியடையாமலும்
ஏனந்தனின் முளைத்தெழுந்த கொழுந்தை / யிறுக்கினா னினிமுறுக்கிக் கிள்ளியே
ஞானப்பிரகாச மெய்ஞானவித்தாகையால் / நாடிக் கருவூரில் நாதத்துடன்கூடி
மீன மேஷ மறியாமல் குருவந்து வீணதாம் / பூசைவிருதாவிற் செய்யவும். (பூசை.)

அவற்றைக்கண்ட குடிகளும் அரசர்களும் அந்தரத்துள்ள அம்மனை சரணாகதிக் கோரி வந்தித்ததின்பேரில் அம்மன் மறுபடியும் வேம்பு மரத்தடியில் வந்து உட்கார்ந்து அரசர்களை வரவழைத்து திரிபிடக வாக்கியங்களாகும் திரிசீலமே - தத்துவம், திரிசீலமே சத்தியம், திரிசீலமே - உத்தமம். அதுவே உங்களைக் கார்க்குந் தெய்வம் என விளக்கி திரிசீல ஜாக்கிரதம் ஜாக்கிரதம் என்று அருளி கொல்லா நோன்பு - குறளா நோன்பு, கள்ளாநோன்புகளாகிய திரி நோன்புகளையும் பதித்து வாக்குக் காப்பு, மனோக்காப்பு, தேகக்காப்பாகுந் திரிவிரதங்களையும் ஓதி தான் பரி நிருவாண மடையும் காலத்தையுஞ் சகலருக்குந் தெரிவிக்கச்செய்து ஆடிமாதம் பதிநெட்டாநாள் ஆதிவாரம் பௌர்ணமி திதியில் அம்மன் பதுமாசனத்திருந்து இருவிழிகளை மூடி சுகசமாதியுற்றக்கால் சுயம்பிரகாசசோதி உச்சியின் வழியாய் தீபம்போல் ஒளிர்ந்தது. அதைக்கண்ட அரசர்களும் குடிகளும் பதறிப் பிரலாபித்து தங்கடங்கட் கண்களில் தாரை தாரையாய் நீர்வடிய சிரமீது இருகரங்களைக் கூப்பி அம்ம வடிவுடையாட்டி - வால அம்பிகை - அறமுதற்செல்வி - ஆதி தேவி - உற்ற எண்ணமுறைக்கும் ஆயி - உள்ளக் குறையை அகற்றுஞ் சீலி - பச்சைப்பருவ பகவதி அம்பா உச்சியில் வளர்ந்த உள்ளொளிகண்டு நிட்சயமாக நிலைகுலைந்தோம் யாம் இனி யாவரால் அறவுரைக்கேட்டு ஆனந்திப்போம், யாரைநாடி ஆபத்து பந்துவென்போம், அம்மே எங்கள் வீடுகடோருங் குலதேவதையாயிருந்து கார்ப்பதுடன் கிராமதேவதையாக நின்று தோன்றும் இடுக்கங்களை நீக்குவதற்கு ஊர் காவற்காரியாகவும் காவலூர் அம்மனாகவும் விளங்கவேண்டும் அங்ஙனங் கார்க்குங் காப்பு நிட்சயமாயின் சிரசிற் தோன்றிய தீபம் ஓங்கி வளரவேண்டுமென்று கதறினார்கள். அவர்கள் கோரிக்கையின்படி உச்சியின் சோதி வளர்ந்து மறைந்தது.

வடநாட்டிற் சாக்கா என்றும், தென்னாட்டில் வள்ளுவர் என்று வழங்கும் கர்ம்ம குருக்களும், அரசர்களுங் குடும்பத்துடன் வந்து அவ்வை என்னும் அம்பிகா தேகத்தை தகனஞ்செய்து சாம்பலைக் காவிரிநீரில் விடுத்து தாங்களும் நீராடித் தங்கடங்களில்லஞ் சேர்ந்து,