பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 421


வீடுபேற்றை அதர்வண பேதவாக்கியமெனக் கூறி நான்கு பேதவாக்கியங்களென வகுத்துள்ளார்கள்.

இன்னான்கு பேதவாக்கியங்களின் அந்தரார்த்தம் சகலருக்கும் விளங்காமல் மறைபொருளாயிருந்தபடியால் ஒவ்வோர் பேதவாக்கியங்களுக்கும் எவ்வெட்டந் தரார்த்தங்கள் கூறி, நாலெட்டு முப்பத்திரண்டு உபநிட்சையார்த்தங்களை வகுத்து உபநிடதங்களென்னும் பெயரை அளித்துள்ளார்கள்.

முன்கலை திவாகரம்

உபநிடத்தின் பெயர் - உபநிடதம் வேதத்தினுட்பொருள் நுட்பம்

பேதவாக்கியங்களின் உட்பொருள் சகலருக்கும் விளங்காதது கண்டே திருவள்ளுவ நாயனார் முப்பாலென்னுந் திரிக்குறளாலும் விளக்கியிருக்கின்றார்.

நரிவெருத்தலையார்

இன்பம் பொருளறம் யீடென்னு மின்னான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழி நூன் - மன்பதைகட்
குள்ளவரிதென்ற வைவள்ளுவ ருலகங்
கொள்ள மொழிந்தார் - குறள்.

மாங்குடிமருதனார்

ஒதற்கெளிதா யுணர்தற்கரிதாகி
வேதப்பொருளாய் மிகவிளங்கி - தீதற்றே
ருள்ளுதொ ருள்ளுதொ ருள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

வேதவாக்கியத்தினுட் பொருளை விளக்கு மொழிக்கு மகடபாஷையில் உபநிடதமென்றும், சகடபாஷையில் உபநிட்சையார்த்தம் என்றும், திராவிடபாஷையில் வேதத்தினுட்பொருள் என்றும் வழங்கிவந்தார்கள்

நான்கு பேதவாக்கியங்களின் 32 உட்பொருணுட்பம்.

1. கன்மபாகையுட்பொருளஷ்டகம் பாபமென்பதென்னை

1.அன்னியப்பிராணிகளின் மீது கோபங்கொண்டு துன்பஞ் செய்தல் பாபம்.

2. அன்னியர்ப்பொருள் எவர் அனுமதியின்றி அபகரித்தல் பாபம்.

3. அன்னியரைக் கெடுக்கவேண்டும் என்று தீங்கு நினைத்தல் பாபம்.

4. அன்னியருடைய ஸ்திரீகளை அபகரித்தல் பாபம்.

5. அன்னிய சீவப்பிராணிகளைக் கொலைச் செய்தல் பாபம்.

6. அன்னியர் மனம் புண்பட வார்த்தையாடுதல் பாபம்.

7. அன்னியர்களை வஞ்சித்து வருந்தச் செய்தல் பாபம்.

8. அன்னியரறிவை மதுவூட்டி மயங்கச் செய்தல் பாபம்.

2. அர்த்தபாகை உட்பொருளஷ்டகம் நன்மெய்க்கடைபிடித்தல் என்பது என்னை

1. அன்னியப்பிராணிகளுக்கு உண்டாகுந் துன்பங்களை நீக்கி ஆதரித்தல் நன்மெய்.

2. அன்னியருக்கில்லாப் பொருளீய்ந்து தன்னைப்போல் சீர்பெறச் செய்தல் நன்மெய்.

3. அன்னியர்களைத் தன்னவர்போல் நேசித்து ஆதரிப்பது நன்மெய்

4. அன்னியர் மனைவிகளை தாய்தங்கையர்போல் பாதுகாத்தல் நன்மெய்.

5. அன்னிய சீவப்பிராணிகளை கொலை செய்யாமலும் கொலைக் கேவாமலுமிருத்தல் நன்மெய்.

6. அன்னியர் மனமும் உடலும் பூரிக்கும் மிருதுவான வார்த்தையாடுதல் நன்மெய்.

7. அன்னியர்களுக்குபயோக முண்டாகும் வார்த்தைகளைப் பேசி விருத்திபெறச்செய்தல் நன்மெய்.

8. அன்னியர்களின் அறிவைப் பெருகச் செய்து அமுதுண்ணச் செய்தல் நன்மெய்.

3. ஞானபாகையுட்பொருளஷ்டகம். இதயசுத்தமென்பது என்னை

1. தன்னிடத்துண்டாங் கோபத்தை அகற்றி சாந்தத்தை நிறப்புதல் இதய சுத்தம்.