பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 427

மூன்றாம் பேதவாக்கியப் பொருளையுஞ் சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஸைவஸமயமென்னுந் தன்னைத்தானறியுங்காலம் ஐரோப்பியனுக்கு வரினும், அமேரிக்கனுக்கு வரினும், சீனனுக்கு வரினும், பர்மியனுக்கு வரினும், அவனே சைவனாவன். மற்றுமோர் கூட்டத்தோரை சைவக்கூட்டத் தோரென்பது பொருளறியாப் பொய்க் கூட்டத்தோர் என்னப்படும்.

- 6:17; அக்டோபர் 2, 1912 –

88. ம-ா-ா-ஸ்ரீ சுந்தரராமனென்பவர் கூறியக்கூற்று தர்மமா அன்றேல் அதர்மமா?

ஆராய்வோமாக. “லோகாபகாரி” என்னும் பத்திரிகையில் “தர்மம்” என்னும் மகுடமிட்டு கி.சுந்தரராமனென வெளிதோன்றியவர் தர்மமென்னு மொழி புத்ததர்மதத்தினின்று தோன்றியதா ஆரிய தர்மத்தினின்று தோன்றியதா என்பதை அறிந்திலர் போலும்.

அறிந்திருப்பரேல் புத்ததர்மத்தை நாஸ்திகமென மறந்துங் கூறார். அறியாதவரென்பது அவர்கூறி வெளிதோன்றிய ஆரியதர்மமே போதுஞ் சான்றாம்.

அதாவது புத்தரென்பவர் ஒருவர் இருந்தார் அவர் போதித்த நீதிநெறிகளுக்கு புத்ததர்மம் என்றும், கிறிஸ்து என்பவர் ஒருவர் இருந்தார் அவர் போதித்த நீதிநெறிகளுக்கு கிறிஸ்து தர்மம் என்றும், மகமது என்பவர் ஒருவரிருந்தார் அவர் போதித்த நீதிநெறிகளுக்கு மகமது தர்மம் என்றும் வழங்கி வருகின்றார்கள். ஆனால் நமது சுந்தரராமனவர்கள் வெளிதோன்றி கூறிய ஆரியர் என்பவர் யார், அவர் எத்தேசத்தார், எங்கு உதித்தவர், அவர் போதித்த தர்ம நூலின் பெயரென்ன. அதன் அனுபவகாட்சிகள் எவை சரித்திர ஆதாரத்துடன் கூறத்துணிவரோ ஒருக்காலுந் துணியார். யாதுக்கென்பரேல் முந்த முந்த இந்து தர்மமெனத் தோன்றினார்கள். இந்து என்பவர் யாவரென்றபோது அம்மொழியை வழுவவிட்டு பிரமதர்மமெனத் தோன்றினார்கள். பிரமர் என்பவர் யாவரென்றபோது அதனையும் நழுவவிட்டு ஆரியதர்மமென் வெளிதோன்றியுள்ளார்கள். அவற்றிற்கும் ஆளில்லை என்றறியா சொன்னதைச் சொல்லுங் கிள்ளைபோன்ற சுந்தரராமன் எள்ளி, எள்ளி அறியா தர்மத்தை ஆரியதர்மமெனக் கூறவந்தது அதர்மம், அதர்மம், அதர்மமேயாம்.

ஓரிடத்து ஆரியதர்மம் என்றும் மற்றோரிடத்து ஆர்யதர்மம் என்றுங் கூறியுள்ளவை காலநேர்ந்த சமயபுறட்டாம் தர்மபுறட்டாகுமன்றோ. மொழிக்குமொழி பேதிக்கும் தர்மமும் ஓர் தர்மமாமோ. இவர் கூறிவரையும் ஆரியக்கூட்டத்தோருள் முதற்காலத்தேனுந் தற்காலத்தேனும் ஒற்றுமெ யுண்டென்பதைக் கண்டேனுங், கருத்திலுணர்ந்தேனுங் கூறவல்லரோ, துணிந்துங் கூறவல்லார். ஆரியரென்போரால் ஒற்றுமெயும் ஒழுக்கமுங்கெட்டு தேசஞ் சீர்கேடடைவது அநுபவக்காட்சியாயிருக்க ஆரியரால் ஒற்றுமெயும் ஒழுக்கமும் பாதுகார்த்து வருகின்றது என்பதும் அதர்மமேயாம்.

ஆளுள்ள சத்தியதர்மமாம் புத்ததர்மம் முந்தியதா, ஆளில்லா அசத்தியதர்மமாம் ஆரியதர்மம் முந்தியதா என்னும் சரித்திர ஆராய்ச்சியின்றி உலக சீர்திருத்தத்திற்கே ஆதியாகத் தோன்றியுள்ள புத்ததர்மத்தின் பேரில் அபுத்ததர்ம அஸ்திபாரமிட்டு மதக்கடை பரப்பி அதனாற் சீவித்துவரும் ஆரியர்கள் கதையை பௌத்தர்களுக்கு முந்தியதென வியாபித்து கூறியது அதனினும் அதர்மமேயாம்.

க்ஷணத்திற்கு க்ஷணந் தோற்றி தோற்றி மாறுதலடையும் பொருட்கள் யாவும் அநித்தியமென்றும் பொய்யென்றும் அங்ஙனந்தோன்றாததுங் கெடாததுமாகியப் பொருளே மெய்ப்பொருளென்றும், அம்மெய்ப்பொருளைக் கண்டு ஓதியவர்களையே மகடபாஷையில் புத்தரென்றும், சகடபாஷையில் சத்தியரென்றும், திராவிடபாஷையில் மெய்யரென்றுங் கூறியுள்ளதைக் கற்றுணராதும் அவரது யதார்த்த சத்தியதன்மத்தைக் கேட்டுணராதும் புத்ததர்மத்தை நாஸ்திகமென்பதும் அதர்மமேயாம்.