பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428 / அயோத்திதாசர் சிந்தனைகள்


புத்தரைக் கர்மயோகியென்பது தனது நற்கர்மத்தால் நிருவாணவதிஷ்டம் பெற்றவர் என்பது கருத்து. அவற்றிற்கு மாறாக துற்கர்மமுடையோர் தங்கள் துற்கர்மங்களை நீக்கிக் காப்பதற்கு ஓர் ஈசுரன் உண்டெனத் தங்கள் தங்கள் மனோசிருட்டீ செய்துக்கொண்டு மாளா துற்கர்மஞ்செய்து மயானம் போமளவும் துக்கவிருத்தியி லிருப்போருக்குக் கர்மயோக லட்சணம் விளங்குமோ, ஒரு ஈசுரன் உண்டென உருவேற்றுக் கொண்டு படைத்தலுக் கொருவன், காப்பதற்கொருவன், அழித்தலுக்கொருவன் என மூவரை சிருட்டி செய்துக்கொண்டு நாம் செய்ய வேண்டிய முயற்சி யாதுமில்லையெனச் சோம்பித்திரிவோருக்கு துற்கர்மம் ஈதீதென்றும், அதனாலுண்டாங் கேடுகள் இன்னவை என்றும், நற்கர்மங்கள் ஈதீதென்றும், அதிலுண்டாம் சுகங்கள் இன்னவை என்றும் விளங்குமோ. படைப்பவன் பாம்பையுந் தேளையும் சிருட்டித்து மக்களையும் சிருட்டித்து அவனைக் கொட்டவும் கடிக்கவும் விடுவது படைப்போன் திருவிளையாட்டோ. அவ்வகை படைப்போன் உஷ்ண தேசத்தில் பாம்பையும் தேளையும் படைத்து குளிருள்ளதேசத்தில் படைக்காது விடுவது பட்சபாதமோ. அழித்தலுக்கென்றே ஒருவன் உண்டெனில் காணும் பொருட்களில் அழியாதது ஏதேனும் உண்டோ . காப்பவன் ஒருவன் உண்டெனில் ஊருக்குளுள்ள மக்களை உவாந்திபேதி கண்டு மடிக்கும் போதும், பிளேக்நோய் கண்டு மடிக்கும்போதும், அக்கினிமலை எரிந்து மடிக்கும் போதும், வெள்ளம் பெருகி மடிக்கும்போதுங் காக்காதவர் மற்றும் எக்காலத்தில் காப்பார். இவ்வகை வற்புறுத்தி வினாவில் அவரவர்கள் கர்மத்துக்கு ஈடா அநுபவிப்பரெனத் தோன்றுவர். கர்மத்துக்கு ஈடாய அநுபவமும் காட்சியுமிருக்க ஈசுரன் ஒருவன் உண்டென்றும், அவனன்றி படைப்பவன் காப்பவன் அழிப்பவன் வேறு மூவருண்டென்றும் மக்களே சிருட்டித்துக்கொண்டு மற்றோரை மயக்கி மாள்விப்பதும் போதாது, நற்கருமங்களை செய்யுங்கோள் நல்லசுகமடைவீர்கள் என்று கூறிய கர்மயோகியாம் கமலாசனனை நாஸ்திகரென நாத்தழும்பக் கூறுவது மன்றி இவர்கள் சிருட்டித்துக் கொண்ட ஈசுரன் ஒருவனை இவர்களே சிருட்டித்துக்கொள்ளவில்லை என்பதும் அதர்மமேயாம்.

தோல்ஷாப்பின் வேலைக்காரனுக்கு அத்துர் நாற்றந் தோன்றாதது போலும், சாக்கடைவாருவோனுக்கு அக்கெட்டநாற்றம் புலப்படாதது போலும் தங்கள் மதங்களிலுள்ள ஊழல்களையுங் கேடுபாடுகளையுந் தாங்களே உணராது கல்வியையுங் கைத்தொழில்களையும் விருத்திசெய்து மக்களை சீர்திருத்தம் செய்துவரும் மிஷநெரி கிறிஸ்தவர்களை போலிக் கிறிஸ்தவர்களெனக் கூறவந்ததும் அதர்மமேயாம்.

இராமாவதாரம், கிருஷ்ணனவதாரம், சங்கரனவதாரமென்னும் வழிகாட்டிகள் தாங்களாயிருந்தும் அவ்வழியைப் பின்பற்றி தோன்றிய ஆனிபீசென்டம்மனைப் பழிப்பது தங்களுக்கு இழிவாக முடிந்ததாதலின் அதுவும் அதர்மமேயாம்.

ஓர் பழமொழியைப் பகுத்தறிந்து எழுத வகையற்றவர் முதுமொழி யாளனாம் மூவுலகுணர்ந்த முநிவனையும் அவரது தர்மத்தையுங் குறைகூற வந்தது விந்தையே.

அதாவது முழுப்பூசினிக்காயை சோற்றில் மறைப்பதென்பது பழமொழி பிசகு. முழுபூசிணிக்காயை இரண்டுபானை சோற்றில் மறைத்து விடலாம். ஆனால் முழு பூசணிக்காயை பிடி சோற்றில் மறைக்கலாகாது. ஆதலின் "முழு பூசணிக்காயைப் பிடி சோற்றுள் மறைப்பதுபோல்" என்பது பழமொழி.

இதனைத் தெரிந்தேனும் வரைய முயல்வாராக. அன்னோர் எழுத ஆரம்பிக்கும் அனாரியர் இத்தேசத்தில் எத்தனை பேரிருக்கின்றார்கள், ஆரியர்கள் இத்தேசத்தில் எத்தனைபேர் இருக்கின்றனரென்று ஆராயாது இத்தேசத்தை ஆர்யர் தேசமெனக் கூறி அதன்பின்னரே தமது தர்மத்தை வரைந்திருக்கின்றார். இவர் குடகம் வேங்கடமென்னுந் தமிழ்நாட்டெல்லைக்கு உட்பட்டவராயின் இத்தேசத்தை ஆரியர்தேசமென மறந்தும் வரைந்திருக்க மாட்டார். ஓரிடத்தில் ஆர்யரென்றும், மற்றோரிடத்தில் ஆரியரென்றும் வரைந்திருக்கின்றார். அவை ஏதுக்கென்னில் ஆரியரென்பதற்குப் பொருள்