பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இத்தகைய சாதிக் குருக்களையும் பின்பற்றுவோர் சுகம்பெறுவார்களோ, பெறார்களென்பது திண்ணம் திண்ணமேயாம்.

மற்றுமுள்ள நீதிசாஸ்திரங்களேனும் நீதியையேனும் ஓர் உருவாகப் பெற்றுளரோ, அதுவுங் கிடையாவாம். அச்சாஸ்திரத்திற்குரிய சாதியோன் திருடிவிடுவானாயின் அந்தப் பொருளுடன் அவனை ஊரைவிட்டகற்றி விடவேண்டது. அவன் யாகத்திற்கென்று திருட அதிகாரமுண்டு, ஏனைய சாதியான் அவனது பசியின் வாதையால் ஒன்றைத் திருடிவிடுவானாயின் அவனைக் கண்டிதமாக தண்டித்தே விடவேண்டியது. அச்சாஸ்திரத்திற் குரிய சாதியோன் ஒருவனைக் கொன்று விடுவானாயின் அவனுக்குரிய சொத்துக்களையும் அவனுக்களித்து ஊரைவிட்டகற்றி விட வேண்டியது. ஏனைய ஒருவன் கொன்றுவிடுவானாயின் அவனைக் கொலைச்செய்தே தீரல் வேண்டும். இத்தகையச் செயல்களை ஏந்தியுள்ள நூலையும் நீதிசாஸ்திரமென்னலாமோ. இத்தகைய சாஸ்திரங்களைப் பின்பற்றி ஒழுகும் மக்களும் சீர்பெறுவார்களோ ஒருக்காலும் சீர்பெறமாட்டார்களென்பது திண்ணம்.

ஆதலின் தேசமக்கள் பிரிட்டிஷ் துரைத்தனத்தோரால் அன்பும் ஆறுதலுமடைந்து விவேக விருத்திபெற்ற ஒவ்வோர் புருஷர்களும் கருணையற்றக் கடவுளைக் கனவிலுங் கருதாமலும், கருணையற்ற வேதத்தைக் கடைக்கண்ணினாலும் பாராமலும், கருணையற்ற குருக்களைக் கண்டும் பேசாமல் ஒதிங்கியும், அவர்கள் நீதியாம் நூற்களை அருகில் வைத்திராமலும் அகற்றி கருணைமிகுத்த பிரிட்டிஷ் ஆளுகையோரையே கடவுளரென சிந்தித்தும், அவர்களால் ஓதிவரும் கலை நூற்களையே சீர்திருத்த வேதமென வந்தித்தும் அவர்களது ஆளுகையாம் நடுநிலைச் செயல்களையே நீதிசாஸ்திரங்களெனப்பந்தித்தும் அவர்களால் போதித்துவரும் வித்தியா விருத்திபோதம், விவசாய போதங்களையே குருபோதங்களாக தொந்தித்தும் வருவதே மக்கள் சீர்திருத்தத்திற்கும் சுகவாழ்க்கைக்கும் ஆதாரமாயுள்ளபடியால் அவர்களது ராஜவிசுவாசத்திலயித்து அன்பை வளர்த்து கருணையைப் பெருக்க வேண்டியதே அழகாம்.

- 6:19; அக்டோபர் 16, 1912 -

90. கருணை கருணை கருணை

கருணை என்பது கரடிக்கும், புலிக்கும், பாம்புக்கும், தேளுக்கும் இருக்குமோ என்பாருமுண்டு. அவைகளின் குட்டிகளிடத்தில் அவைகளுக்குங் கருணையுண்டு என்பது அனுபவமாகும். கருணை என்பதில்லாவிடில் அதனதன் குட்டிகள் சீவிக்க முடியாவாம்.

ஆதலின் சருவசீவப்பிராணிகளிடத்துங் கருணையுண்டு என்பது நிட்சயம். அச்சீவராசிகள் யாவற்றினும் மக்களென்னும் மனிதவகுப்போர்க்கே அக்கருணை கிஞ்சித்துப் பெருகியிருக்கின்றது என்பது அவர்கள் பிள்ளை பெண்டுகளிலுள்ள கருணையும் தங்கள் பந்துக்கள் மீதுள்ளக் கருணையும் தங்கள் நேயர்கள் மீதுள்ளக் கருணையும் தாங்கள் வளர்க்கும் சீவப்பிராணிகளின் மீதுள்ளக் கருணையுங் கண்டு, கலை நூலார் சகல சீவராசிகளுக்கும் உயர்ந்தவன் மனிதனே என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இத்தகைய மனுமக்களுள் நாங்களே உயர்ந்த சாதியினர், நாங்களே உலகத்திற் சிறந்தவர்கள், நாங்கள் மிக்க வாசித்தவர்கள், நாங்களே மிக்க அறிவாளிகள் எனக் கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு எத்தகையானக் கருணை நிறைந்திருத்தல் வேண்டும். தன்னைப்போல் பிறரை நேசித்தலும் சகல சீவராசிகளையுந் தன்னுயிர்போல் காத்தலுமாகியப் பெருஞ்செய்கைகளேயாம். இக்கருணை நிறைந்த பெருஞ்செயலோர்களே அக்கருணாகரக்கடவுளையுஞ் சார்வர்.

அங்ஙனம் மனுக்களே கருணை உடையவர்களென்று வகுத்திருக்க அம்மனுக்களுள் உயர்ந்த சாதியோரென வகுத்துக்கொண்டும் உலகத்தில் உயர்ந்தோரென சொல்லிகொண்டும், யாங்களே மிக்கக் கற்றவர்களெனப் பலுக்கிக்கொண்டும், யாங்களே மிக்க அறிவாளிகளென நடித்துக்கொண்டும்