பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பௌத்தர்களின் அறிகுறிகளாகும்.

துயிலெழும்போதே இம் மந்திரத்தை சிந்தித்து எத்தொழிலுக்குச் செல்லினும் அத்தொழில் சுகமாக நிறைவேறுவதுடன் மனவாறுதலுடனும் ஆனந்தத்துடனும் வீடுவந்து சேரலாம். இதையே சத்திய மந்திரமாகவும் இதையே நித்திய மந்திரமாகவுங்கொண்டு நேசிப்போருக்கும், பூசிப்போருக்கும் யாது துன்பமும் அணுகாதென்பது சத்தியம். அங்ஙனம் அணுகினும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகுமென்பது நிட்சயம், ஆதலின் பௌத்தர்களுக்குக் கழுத்திற் கட்டும் அடையாளமும், நெற்றியிற் பூசும் அடையாளங்களாம் அறிகுறிகள் ஏதுமின்றி குருவிசுவாசம், இராஜவிசுவாசம், பெற்றோர் விசுவாசமாய நல்லொழுக்க பீடமே அறிகுறிகள் என்னப்படும். இதுவே சகல சுகங்களுக்குங் கொண்டுபோகும் சத்தியமார்க்கமுமென்னப்படும்.

- 6:21; அக்டோபர் 30, 1912 –

92.சீலம் சீலம் சீலம் பஞ்சசீலம்

சீலம் என்பது தேகசுத்தஞ் செய்து தலைமயிராற்றி வெண்ணுடை உடுத்தி சாராயக்கடை, கள்ளுக்கடைக்குள் நுழைவது சீலமாகுமா இல்லை, முழுகக் குளித்து கஸ்தூரி புனுகுபூசி தாசிவீட்டுக்குள் நுழைவது சீலமாகுமா இல்லை, தேக சுத்தஞ்செய்து குறுக்குபூச்சு நெடுக்குபூச்சு பூசி ஊரான் சொத்துக்கு உலைவைக்கலாமா, ஊர் குடிகளைக் கெடுத்துப் பணம் சம்பாதிக்கலாமாவென்றெண்ணி, மந்திரமோதி மணிகுலுக்குவது சீலமாகுமா இல்லை. முழுகக்குளித்து சோமவார விரதம் சுக்கிரவாரவிரதமெனக் கூறி, சோம்பித்திரிந்து அன்னியன் பொருளை அபகரிக்க வழிதேடுதல் சீலமாகுமா இல்லை. தேகசுத்தம் உடைசத்தத்துடன் திண்டுபோட்டு உழ்க்கார்ந்துகொண்டு ரூபாயிற்கு ஓரணா இரண்டணா வட்டிவாங்கி ஊரார் சொத்தை அபகரிப்பது சீலமாகுமா இல்லை. தேய்த்துக்குளித்து தூளிதம்பூசி அரிசிகளிற் கலப்பும் நெய்களிற் கலப்பும், தானியங்களிற் கலப்புங்கலந்து ஏழைமக்களை வஞ்சித்துப் பொருளை சேர்ப்பது சீலமாகுமா இல்லை. காவிவஸ்திரந் தரித்து காதுகுண்டலமிட்டு கண்கள் சிவக்க கஞ்சாகுடித்து கைம்பெண் சொத்துக்களைக் கண்டுங் காணாது அபகரிப்பது சீலமாகுமா, இல்லை .

ஐயா! சுத்தமுடன் குறுக்குபூச்சு நெடுக்குப்பூச்சுபூசி பாட்டுபாடும் போதும் அழுவார், கூத்தாடும்போது அழுவார், பஜிக்கும்போதும் அழுது தனக்குந் தெரியாப் பொய்ப் புராணங்களைப் போதித்துப் பொருள்பரித்து சீவிப்பது சீலமாகுமா, இல்லை. இவைகள் யாவும் பஞ்சபாதகம் மிகுத்தச் செயல்களேயாம். குளிப்பதே சீலம், வீடுவாசல் மெழுகுவதே சீலம், சுத்தவுடை தரிப்பதே சீலம், உயர்ந்த ஆபரணமணிவதே சீலம், நார்மடி கட்டுவதே சீலம், ஒருபொழுதென்று கூறி மூன்று பொழுதுண்பதே சீலமென்று திரிவது யாவும் அசீலங்களேயாம்.

சீலங்கள் என்பது யாதெனில் அன்னியப் பிராணிகளைத் துன்பஞ் செய்யாதிருத்தல் சீலம், அன்னியர் பொருளை அபகரிக்காதிருத்தல் சீலம், அன்னியரைப் பொய்சொல்லி வஞ்சியாதிருத்தல் சீலம், அன்னியர் மனையாளை இச்சித்து அவர்கள் குடியைக் கெடுக்காதிருப்பது சீலம், அன்னியருக்கு மதுவூட்டி அவர்கள் குடிகளைக் கெடுக்காமலுந் தானுங் குடித்துக் கெடாமலிருப்பது சீலம்.

இத்தகைய சீலம்பெற்று பௌத்தர்களான சத்தியதன்மப்பிரியர்கள் யாவரும் பகவனருளிய நீதிநெறி ஒழுக்கத்தில் நடந்து பௌத்தர்களென்னும் அறிகுறியைக் காட்டுவார்களென்று நம்புகிறோம்.

- 6:27; டிசம்பர் 11, 1912 –

93. ஆன்மா என்னும் மொழி

வினா: ஆன்மாவென்றும், ஆத்துமாவென்றும் வழங்குகின்ற மொழியை சிலமதத்தோர் சீவான்மனென்றும் பரமான்மனென்றும் வழங்குகின்றார்கள். அவர்களை யணுகி ஆன்மமென்பது வடமொழியா தென்மொழியா அதன்