பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 35

வானோர் தலைவி மண்ணோர் முதல்வி
யேனோ ருற்ற விடர்களை வாயென.

சீவக சிந்தாமணி

செந்தா மறைக்குச் செழுநாற்றங்கொடுத்ததேங்கோ
ளந்தா மரை யாளகலத்தவன் பாதமேத்திச்
சிந்தாமணியின் சரிதஞ் சிதர்ந்தேன் நெருண்டார்
நந்தாவிளக்குச் சுடர் நன் மணி நாட்டப்பெற்றே

பல்பெயரிட்டு சேரிகடோரும் அம்மன் வியாரங் கட்டிவைத்து அக் கட்டிடங்கள் வீதியிலிருக்குமாயின் திருவீதி அம்மனென்றும், மத்திய எல்லைக்குள்ளிருக்குமாயின் எல்லம்மன் என்றும் கழிகளின் ஓரங்களில் இருக்குமாயின் திருக்கழி அம்மன் என்றும், முல்லைநிலத்து இருக்குமாயின் துளிர்கானகத்தம்மன் என்றும், பனைமரச் சோலை களிலிருக்குமாயின் கருக்கம்மன் என்றும் தண்டுகளிரங்குமிடத்தில் இருக்குமாயின் பாளையத்தம்மன் என்றும், நந்தவனத்தில் இருக்குமாயின் பூஞ்சோலையம்மன் என்றும் ஒவ்வோர் பெயர்களை வைத்து அம்மன் நிருவாணமுற்ற ஆடிமாதம் பௌர்ணமி திதி வருங்காலம் பத்துநாளைக்குமுந்தி அத்திருநாளில் அம்மனை உச்சாகப்படுத்தி ஆனந்திப்பதற்கு சேரிக்குள் வந்துள்ளவர்கள் வெளியேறாமலும் வெளியேறி உள்ளவர்கள் ஊர்வந்துசேரவும் கொலை, களவு, காமம், கள்ளருந்தல், பொய் முதலிய பஞ்சபாதகங்கள் அணுகாமலிருக்கவேண்டும் என்று காப்புக்கட்டி அம்மன் கழுத்தில் பொட்டுக்கட்ட வேண்டிய குடும்பத்தான் கரத்திலும் ஓர்காப்புக்கட்டி அவன் கையினால் அம்மன் பீடங்களை சுத்தி செய்துவைத்துக்கொண்டு ஒன்பதுநாள் வரையில் நீதியிலும் தருமத்திலும் உச்சாகமுண்டுசெய்து பத்தாநாள் குடிகள் யாவரும் புதுப்பானைகள் கொண்டு பொங்கல் வைத்து எல்லோர் சாதத்தையும் ஒரேயிடத்தில் கும்பமிட்டு ஏழைகளைப் பசிதீரவுண்ணும்படிச் செய்து காவிரி நதியில் சேலை, குங்குமம், சந்தன தாம்பூலங்கள் விடுத்து ஏழைகளை எடுத்துக் கட்டிக்கொள்ளும்படிச் செய்து வந்தார்கள். அதைய நுசரித்துக் குடும்பத்தோர்கள் குலதேவதையாகக் கொண்டாடி வந்ததுமன்றி மற்றுங்கிராமவாசிகளும் அந்தந்த சேரிகளில் அம்மன் வியாரங்கட்டி பகவன் உட்கார்ந்து நிருவாண திசையடைந்த அரசமரத்தையும் அம்மன் உட்கார்ந்து பரிநிருவாண திசையடைந்த வேம்புமரத்தையும் நாட்டி மெய்யறமாகும் புத்த தருமத்தை சகலருக்கும் ஊட்டி அம்மனால் ஓதிய முப்பத்தி ரண்டறங்களையும் பரவச்செய்து வந்தார்கள்.

- 1:13; செப்டம்பர் 11, 1907 –

பின்கலை நிகண்டு - அம்பிகா தருமம்

ஆதுலர் சாலைஐயம் அறுசமயத்தோர்க் குண்டி
ஒதுவார்க் குணவிணோடாண் வத்திரமுடனே சேலை
மாதுபோகம்மகப்பால் மகப்பேறு மகவளர்த்தல்
வேதைநோய் மருந்துக்கெல்லாம் விலைகொடுத் துயிர்நோய் தீர்த்தல்.
கண்ணாடி பிறரில்கார்த்தல் கன்னிகாதானங்காவே
வண்ணார் நாவிதர் பெண்காத்தல் மடந்தடங்கண் மருந்து
தண்ணீர் செய் பந்தல் சோலைதலைக்கெண்ணெய் சிறைச்சோறோடு
பண்ணான விலங் கூணலகல் பசுவின் வாயிறை கொடுத்தல்.
அறவையாம் பிண மடக்கல் அறவைத்தூரியம் வகுத்தல்
நிறுவியோர்க்கிடங் கொடுத்தல் நிரையத்தீம் பண்டனல்கல்
உறுதியா யுண்மெய்வாய்ந்த வுத்தமமாகுமெண்ணான்
கறநிலை யன்பாலோது மம்பிகை தானமாமே.

இவ்வகை சிறப்புற்ற அம்மனைத் தமிழ்நாடெங்கும் உள்ள அரசர்களும் குடிகளும் சிந்தித்து வந்ததுமல்லாமல் சோழநாட்டுள் உம்பள கிராமமென்னும் வண்டுவாஞ்சேரியில் அவ்வை வியாரமென்றோர் மடமும் நாகைநாட்டில் வேற்கண்ணி வியாரமென்றும் வேலாங்கண்ணி மடமென்றுங் கட்டி அதில் நாகைநாட்டாருக்குற்ற இடுக்கணாகும் கொடுமாறி என்னும் கொள்ளை நோயை அகற்றி ஆரோக்கியம் பெறச்செய்தவளாதலின் அன்னாட்டார் அம்மனை விசேஷ உற்சாகமாக கொண்டாடி வந்தார்கள், இவற்றுள்,