பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 443

அதியாவலும் ஏழை மக்களை யீடேற்ற வேண்டுமென்னும் ஆசையுமுள்ளக் கிறீஸ்தவரில் ஒருவரையேனும் மகமதியரில் ஒருவரையேனுங் கண்டு நியமித்துக்கொள்ளலாம் மற்றப்படி பௌத்த தன்மத்தில் அன்பில்லாமலும் அதன் விசாரணையில்லாமலும் சாதி பேதமில்லா ஏழை மக்கள் படுங்கஷ்டங்களைக் கண்டு கருணை வையாமலும் தங்கள் ஓர் பெருத்த உத்தியோகஸ்தர்களென்றெண்ணி, செருக்குற்று இருமாப்படைந்து நானும் ஓர் இந்துவென நடித்துத் திரியும் போலிகளை சபா நாயகராக நியமித்து விடுவீர்களாயின் அவர்களது பூர்வமிலேச்சச் செயலும் பொறாமெ குணமும் வஞ்சின நிலையும் அகலாது சங்கத்தோர் எடுத்த கருத்தை உபபலமான விவேகங்கூறி தொடுத்து முடிக்காது சீர்திருத்தக் கருத்தைக் கெடுக்கத்தக்க வழிவகைகளேதேதோ அவற்றையே பேசி முடிப்பார்கள்.

அதாவது ஒர் கோழிக்கு விரல்களெல்லாம் பொன்வளயமிட்டு இறக்கைகளுக்கெல்லாம் முத்து, இரத்தினக்குஞ்சங்கள் கட்டி கழுத்தில் வைரசரமிட்டு முகத்திற் பொன்கண்ணாடி பூட்டி சருவாலங்கிருத நிறைந்தவரண் மனைக்குக் கொண்டுபோய் அவ்விடமுள்ள நவரத்தின ஆசனத்தில் விட்டபோதிலும் அக்கோழியானது பூர்வக்குப்பைத்தீத்துங் குணமாறாது, நவரத்தினங்களிழைத்த ஆசனத்தையுந் தன்கால் விரல்களால் தீத்தேதீரும். ஆதலின் ஜெனன முதல்வஞ்சினம் சூது குடிகெடுப்பு நிறைந்தவர்களும் தன்மமென்பதே தலைமுறைதலை முறையாய் அறியாதவர்களுமானோர் சபைக்கு ஆள்டம்பமாகக் காட்டிய போதினும் அவர்களது அதர்மகுணம் அவர்களை விட்டு மாறவேமாறாது. விவேகசிந்தாமணியார் “ஈயாரையீய வொட்டானிவனு மிய்யான் எழுபிறப்பினுந் கடையா மிவன் பிறப்பே" யென்றோதிய நீதிபோதம் மலைவுபடாவாம்.

ஆதலின் சாக்கையபுத்த சங்கசிகாமணிகள் யாவரும் சங்கசபாநாயகர்களைக்கொண்டே காரியாதிகளை நடத்தி வரும்படி வேண்டுகிறோம்.

- 7:10; ஆகஸ்டு 13, 1913 –

103. மனுதருமசாஸ்திரம் என்பதென்னை

மனுடரென்றும் மனிதரென்றும் வழங்கும் படியான மக்கள் நீதிநெறி வழுவா ஒழுக்கத்தினின்று மனுட சீவர்களை மனுட சீவர்களாக பாவித்து சருவ சீவர்கள் மீதுங் கருணை வைத்து வாழ்க்கைத் துணை நலமுற்று பஞ்சசீலத்தில் நடக்கச் செய்வதே மநுதரும சாஸ்திரமாகும்.

அம்மனுதரும சாஸ்திரமென வழங்கற்குக் காரணம் யாதெனில் மனித சீவர்களானோர் தங்கடங்கள் குடும்பங்களில் விரோதமின்றியும் பொறாமெயின்றியும் பேராசையின்றியும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்க்கையை சீர்திருத்திக் கொள்ளுவார்களாயின் அக்குடும்பமானது ஆறுதலுற்று ஆனந்தவாழ்க்கையைப் பெறும். அதுபோல் ஒர்கிராமத்தோரும் இருப்பார்களாயின் அக்கிறாமமும் ஆறுதலுறும். தேசமும் அதுபோலிருக்குமாயின் சகல சுகமும் பெற்று மக்கள் ஆறுதலுற்று வாழ்வார்கள். இத்தகைய சுகநலங்கோறியே விவேக மிகுத்த சாஸ்திரிகள் மனுக்கள் சீர்பெற்று வாழ்கவேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் மனுதன்ம சாஸ்திரங்களை ஏற்படுத்தினார்கள்.

அதையே புத்ததன்மமென்றும், சத்திய தன்மமென்றும், மெய்யறமென்றுங் கூறப்படும். இத்தகையாய் மனுக்களுக்கு வேண்டிய தருமசாஸ்திரம் இந்திய தேச முழுவதும் பரவியிருந்த காலத்தில் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் பெருகி வித்தியாவிருத்தியும், விவசாயவிருத்தியும், வியாபார விருத்தியுமோங்கி சகல சீவர்களும் ஒற்றுமெயுற்று சுகவாழ்க்கையில் ஆறுதலுற்றிருந்தார்கள்.

அதன் விருத்திக்கேட்டிற்கு மூலமாக அன்னிய தேசத்திலிருந்து இந்திய தேசத்திற்குக் குடியேறி பிச்சையிரந்து கொண்டு சீவித்துவந்த ஓர் வகை மனுக்கூட்டத்தோர் தங்கள் மித்திர பேதத்தாலும் வஞ்சினத்தாலும் கருணையென்பதே கனவிலுமற்றக்கரவிடத்தாலும் நூதன சாதிவேஷங்களையும்