பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இல்லறத்தோர் கிரியைகளீதென்றுந் துறவறத்தோர்க்கிரியைகளீதென்றும் அறியாது தங்கடங்கள் மனம்போனவாறு செய்து வருங்கிரியைகளுடன் பூர்வ பௌத்தத்தன்மக் கிரியைகளையும் அநுசரித்தே நடாத்திவருகின்றார்கள். ஆதலின் பௌத்தர்கள் யாவரும் வீணாய வீரியக் கிரியைகளை ஒழித்து வேணுமாயக் காரியக் கிரியைகளைமட்டிலும் நடத்திவர வேண்டியது அழகாம்.

- 7:15; செப்டம்பர் 17, 1913 -

105. ஓம் நமசிவய

வினா: சமணமுநிவர்களாம் சித்தர்களால் வரைந்து வைத்துள்ள வைத்திய நூற்களில் ஓம் நமசிவய, வென்றும், ஓம் ஐயுங்கிலியும் சவ்வென்றும் மந்திரங்களை வரைந்து வைத்திருக்கின்றார்களே அதன் பொருள் என்ன அதன் பயன் என்ன .

நா. பஞ்சனாதன். வேலூர்,

விடை: முதலாவது மந்திரம் என்னும் வார்த்தையின் பொருளை அறிதல் வேண்டும். அதாவது மந்திரமென்பதின் பொருள் ஆலோசித்தலென்னப்படும், மந்திரி என்பதற்குப் பொருள் ஆலோசிப்பவனென்னப்படும் அவ்வகை சத்தியதன்ம ஆலோசனையில் ம, ந, சி, வ, ய, மனதை வயப்படுத்தும் ஆலோசனையே மேலாயதாம் அவற்றுள் ஓம் நமசிவய, என்பதினிலக்கணம் அறிவோம். மநசிவய, ப்படுதலை யென்பதேயாம். இவற்றையே நமசிவய, வென்றும், சிவயநம வென்றும் மாறி மாறி சொல்லிக்கொண்டிருக்கின்றார்களன்றி மநசிவய, ப்படும் வழிவகைகளை அறிந்தாரில்லை.

ஓம் ஐயுங், கிலியும், சவ்வு மென்பதில் ஐயுறுபுமனோ சுத்தத்தையும், கிலியுறுபு வாக்கு சுத்தத்தையும், சவ்வுறுபு, உடல் சுத்தத்தையும், ஓம், அறிவோமென்பதேயாம் இவற்றையே வடநூலார் திரிகாயமந்திரமென்றும், காயத்திரிமந்திரமென்றும் வகுத்துள்ளார்கள். தென்மொழியார் திரிகரண சுத்தமென்பர். இத்தகையாய பரிபாஷை மொழிகளை சித்தர்களால் அனந்தம் வரையப்பட்டிருக்கின்றது. அதனந்தரார்த்தங்களை உசாவியுந் தெளிவோர்களே அதனதன் பலனை அனுபவிப்பார்கள். அங்ஙனம் ஆலோசியாமலும் உசாவாமலும், வரைந்துள்ள மொழிகளை சொல்லிக்கொண்டே திரிவது உமிகுத்தி கைசலிப்பதுபோலாம்.

- 7:18; அக்டோபர் 8, 1913 –

106. குடிகளுக்கு மழையும் மழைக்கு தவத்தோரும் தவத்தோருக்கு அரசனும் அரசனுக்கு குடிகளும் ஆதாரமென்னப்படும் சத்தியதன்மம்

மழையின்றி மானிலத்தார்க்கில்லை / மழையும் தவமிலாரில் வழியில்லை
தவமும் அரசிலாரில் வழியில்லை / அரசனும் இல்வாழ்வாரில் வழியில்

பூமியில் வாழும் மக்களுக்கு ஏதேனும் தனசம்பத்து, மனைசம்பத்து, மக்கட் சம்பத்து, உத்தியோக சம்பத்திருப்பினும் மழை ஒன்றில்லாமற் போமாயின் சகல சம்பத்தும் அழிந்து மக்களும் நசிந்து போவார்களென்பதே திண்ணம். அத்தகைய மழைகாலந் தவராது பெய்வதற்கு ஆதாரம் எவரென்னிலோ பஞ்சசீலத்தில் நிலைத்து சருவ சீவர்களையுந் தன்னுயிர்போல் காத்து, அஷ்டசீல சாதனம் புரிந்து, தபோபலம் பெற்ற மகா ஞானிகளின் தோற்றத்திற்கு ஆதாரமோவென்னில் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயமும் சகல மக்களையும் ஒரு குடை நிழலில் காக்கும் வல்லபமும், பொய்யர்களை அடக்கி மெய்யர்களை சீர் தூக்கலும் பொல்லார்களை தண்டித்து நல்லோர்களாக்குதலும், அஞ்ஞான மகற்றி மெஞ்ஞானம் பெருகும் வழிவகைகளைத் தேடலும் நீதிநெறி ஒழுக்கங்களை நிலைநிருத்தச் செய்தல் கூடிய அரசரே என்னப்படும். அரசருக்காதாரமோவென்னில் வித்தையில் விருத்தியுள்ளக் குடிகளும் புத்தியில் விருத்தியுள்ளக் குடிகளும் சன்மார்க்க முள்ளக் குடிகளும் இராஜ விசுவாசமும் உள்ளக் குடிகளே என்னப்படும்.