பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

448 / அயோத்திதாசர் சிந்தனைகள்


விடை: கே. மீறையய்யா வென்னு மன்பரே, தாம் சுட்டி வரைந்துள்ள (உ) இச்சுழியை பண்டை கால தெய்வப்புலவர்களால் ஓலைச்சுவடிகளின் முகப்பில் வரைந்துவருவதேயாகும். இதனந்தரார்த்தம் பொய்ப்புலவர் போலிப்புலவர், புராணப்புலவர்களுக்கு விளங்காவிடினும் வழக்கமாகக் கீரிவருகின்றார்கள். அஃது பௌத்த தன்மக் கீரலேயாம். அதாவது மனிதன் தன்னைக்கொண்டு தானே சீர்திருத்தி தானே தானாகி பரிநிருவாணமடைய வேண்டியவனாதலின் தனது புருவமத்திய சுழிமுனை லயிக்கவேண்டியது கொண்டு, புருடனுக்கு சுழிமுனை நாடியே பீடமாகக்குறிப்பிடுமாறு சமண முநிவர்கள் வரைந்துவரும் நூற்களின் முகப்பில் (உ) இச்சுழியை நாட்டி வந்தார்கள். இவற்றிற்கு சுழிமுனை யென்றும், மோனநிலையென்றும், பேசாவெழுத்தென்றும் பெயர். பைரவி, சாம்பவி, கேசரி, என்னும் ஞான முத்திறைகளில் (உ) இச்சுழியையே சாம்பவியென்றுங் கூறுவர். இஃது ஞானிகளுக்கு ஒளியாகவும் அஞ்ஞானிகளுக்கு இருளாகவுமே விளங்கும்.

புத்தகம் என்னும் மொழியோ பூர்வ பௌத்தர்கள் காலத்தில் வழங்கி வந்ததன்றி தற்கால மொழியன்றாம் அதாவது புத்ததன்மங்களை வரைந்துக் கட்டிவைத்துள்ள சுவடிகள் யாவையும் புத்தகமென்றே வழங்கி வந்தார்கள். அதனந்தரார்த்தம் அறியாது தற்கால காகிதக் கட்டுகளுக்கே பொதுவாகப் புத்தகமென வரைந்து வருகின்றார்கள்.

பூர்வ புத்ததன்மச் செய்யுளைக் காண்க:

நாலடி நானூறு

புத்தகமே சாலத்தொகுத்தும் பொருடெரியா
ருய்த்தகமெல்லா நிறைப்பினு மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

- 7:37; பிப்ரவரி 18, 1914 –

108. மனுதன்மநூல்

பூர்வ இந்திய தேச பௌத்தர்கள் மனுமக்கள் சீர்பெறுமாறு வரைந்து வைத்துள்ள நூலுக்கு மனுதன்ம நூலென்று கூறப்படும். அவற்றுள் வாக்கால் போதிக்குந் தன்மமும் கரங்களால் ஈயுந் தன்மமும் ஆகிய இருவகையுண்டு. முதலாவது மனுமக்களுள் வஞ்சினம், பொறாமெய், பொருளாசை, கொலை, களவு, பொய், மதுவருந்தல், விபச்சாரம் முதலிய துற்கிருத்தியங்களே நிறைந்துள்ளக் கூட்டத்தோருக்கு நன்மார்க்கங்களைப் போதித்து நல்வழியில் நடத்தி நல்ல சுகவாழ்க்கையாம் நித்திய சுகம் பெறச் செய்யுந் தன்மத்திற்கு போதனா தன்மமென்றும், இரண்டாவது கூன், குருடு, சப்பாணி, பிணியாளர், திக்கற்றோர், உழைத்து சீவிக்க சத்தியற்றோர், பசியாளர், இல்லந்துறந்த பெரியோர் முதலியோருக்குப் பொருளுதவி செய்து அன்னமிட்டு ஆதரிப்பது ஈயுந் தன்மமென்றும் கூறப்படும்.

இத்தகைய தன்மத்தையே மகட பாஷையில் புத்ததம்மாவென்றும் சகட பாஷையில் சத்தியதருமமென்றும் திராவிட பாஷையில் மெய்யறமென்றும் வழங்கிவந்தார்கள். இத்தன்மத்தை மனுமக்களுக்கே போதித்து அவரவர்கள் இதயத்தில் நன்கு பதியுமாறு ஒலைகளிலும் செப்பேடுகளிலும் பொன்னேடுகளிலும் சிலைகளிலும் வரைந்துள்ளவற்றிற்கு மனுதன்ம நூலென்றும் மனுதரும் சாஸ்திரமென்றும் மனுநீதியென்றும் வழங்கலாயிற்று.

அதாவது ஓர் மனிதன் எக்காலும் பொய்யை சொல்லிக்கொண்டே பொருள் பறித்து சீவிக்க முயலுவானாயின் அவனைக்காணும் விவேகிகள் யாவரும் அவன் வார்த்தையை நம்பாது அகற்றிக் கொண்டே வருவார்கள். அதனால் அவன் பொய்யனென்னும் பெயரைப் பெறுவதுடன் உண்ண உணவிற்கும் உடுக்க உடைக்குமின்றி ஆதுலனாய் அலைவதற்கு ஏதுண்டாகி விடுகின்றான். அத்தகையோனுக்குப் பொய்பினால் உண்டாங் கேடுபாடுகள் யாவற்றையுந் தெள்ளற விளக்கி நன்மதியூட்டி பொய்யினை அகற்றுந் தன்மத்தைப்