பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 449

போதிப்பதாயின் அவன் மெய்யனாகி சுகச்சீர் பெறுவதுடன் சகலராலும் நன்கு மதிக்கப்படுவான். அதுபோல் கொலையினாலேயே சீவிப்போனைக்காணும் சீவகாருண்ய மிகுத்தோர் அவனுக்கு பயந்து தூர விலகுவதுடன் சருவ சீவர்களும் அஞ்சுவதியல்பாம். கொல்லுவா னென்னுங் கருணையற்ற செயலே அதற்குக் காரணமென்னப்படும். அக்கொலை பாதகனை அணுகி உம்முடைய காலில் ஓர் முள்ளு தைக்குமாயினும் தேகத்தில் சொற்ப காயப்படுமாயினும் உணர்ச்சியால் எவ்வளவு துன்பப்படுகின்றீர், அவைபோல் மற்ற சீவராசிகளுக்கும் அத்தகைய துன்பமுண்டாம் என்றுணரலாகாதா, ஓர் சீவனைக் கொல்லுங்கால் அவை துடிப்பதும் பதருவதும் கதருவதுமாயச் செயல்களைக் கண்டேனும் உமக்கு இதக்கம் உண்டாகவில்லையா, ஒவ்வோர் சீவராசிகளும் நாளுக்குநாள் வளர்ந்து மேனோக்குவதே இயல்பாதலின் அவற்றை மத்தியிற் கொன்று பாழ்ப்படுத்துவது பாபமல்லவா என்று பலநாளும் தன்மத்தைக்கூறி அவனிதயத்தில் அன்பை வளரச்செய்து சீவகாருண்யம் அடைவானாயின் அன்றே கொலைத்தொழிலை விட்டகன்று சகலருக்கும் அருகனாவான். சகலருக்கும் நல்லவனாக விளங்குவதுடன் நல்வாழ்க்கையாம் அழியா பேரின்ப சுகத்தையும் பெறுவான். ஓர் கள்ளனை அணுகி உம்முடையப் பொருளை ஒருவன் அபகரித்துக் கொள்வானாயின் நீரெவ்வளவாய ஆயாசத்தையும் துக்கத்தையும் அடைகின்றீர், அவைப்போல் அன்னியர்ப் பொருளை அபகரிப்பதாயின் அவர்கள் இதயத்தில் எத்தகையாய ஆயாசத்தையுந் துன்பத்தையும் அடைவார்களென்று உணரலாகாதாவென்று மெய்யறத்தை நாளுக்குநாள் போதித்து அவன் களவு தொழிலை அகற்றி கஷ்டப்பட்டு சீவிக்கும் கைத் தொழிலில் முயல்வானாயின் அவனைக் காண்போர் யாவரும் அன்புடன் நேசிப்பதுடன் அவன் எக்காலும் பயந்து பயந்து சீவித்துவந்த களவின் சீவனம் ஒழிந்து பயமற சீவிக்கும் கைத்தொழிலில் முயன்று சுகசீவியம் பெறுவான். ஒருவன் காமிய இச்சையில் ஏதொரு கைத்தொழில் வித்தையுமற்று அன்னிய தாரங்களை இச்சித்துக் திரிவானாயின் அவனைக் காணும் விவேகிகள் ஆ ஆ இவன் துற்காமியென்றுன்னி வீடுகளுள் சேரவிடாமலும் ஏதொரு தொழிலிலும் அணுகவிடாமலும் அகற்றி புறக்கணிப்பதால் பல தொழிலும் அற்று பல பிணியுமுற்று பாழடைந்து போகின்றான். அத்தகைய துற்காமியை அணுகி உம்முடைய காமத்தீயை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொள்ளுதலால் தேகமெங்கும் வியாதியால் புண்புரைகள் தோன்றி உபத்திரமடைவது திண்ணமாவதுடன் உம்முடைய தாரத்தை ஒருவன் இச்சிப்பானாயில் நீரெவ்வளவு கோபமும் ஆயாசமுங் கொள்ளுவீர், அவை போல் அன்னியன் தாரத்தை நீர் இச்சிப்பதாயின் அவன் எத்தகைய துக்கத்தில் ஆழ்வான், அதனால் அவன் குடும்ப விருத்தியே பாழடைந்து குலகோத்திரமும் அழிகின்ற தல்லவாவென்று சத்தியதன்மத்தை ஊட்டி காமிய சேட்டையை ஓட்டி நல்வழிக்குக் கொண்டு வருவதாயின், அவன் குடும்ப விருத்தியடைவதுடன் ஏனைய குடும்பங்களும் சுகவிருத்திப்பெற்று நல்வாழ்க்கையை அடைவார்கள். ஓர் சுராபானமாம் கஞ்சா, அபினிகலந்த நீர்களையேனும், கள்ளு சாராய முதலியப் பானங்களையேனும் அருந்தும் பழக்கத்தால் ஏதொரு தொழிலுமற்று பெண் சாதி பிள்ளைகளை காப்பாற்ற விதியின்று நிலை தவறி தாயும் தந்தையும் வெறுக்க, விவேகிகள் சேர்க்காது ஒதுக்க, மனிதனென்னும் பெயரற்று மிருகத்திற்கு ஒப்பாயிருப்போனை அடுத்து, உமது மதுபான பழக்கத்தால் அறிவு மயங்கி நீர் செய்துவருஞ் செயல்களை உன் தாய் தந்தையரே வெறுப்பாராயின் மற்றய மனுக்கள் உன்னை யென்ன மதிப்பார்கள், உன் சுகங்கள் யாவையுங் கெடுக்கும் இம்மது பானத்தால் யாது சுகமடைகின்றீர், தன் சுத்த நிலையிலிருக்கும் மனிதனே தவருதலடைகின்றான், நீரருந்தும் மதுவின் மயக்கத்தால் என்னென்ன தவருதலடைந்து துக்கத்தை அனுபவிக்கின்றீர், இம்மதுபானமே சகல கேட்டிற்குங் கொண்டுபோகும் வழியாச்சுதே, மனிதனாகப் பிறந்துங் கேட்டிற்குப் போகும் வழியில் நடக்கலாமா. மனிதனாகத் தோன்றியவன் எக்காலுஞ் சுகவழிகளைத் தேடல்வேண்டும், அவ்வகை