பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

460 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இவ்வகையாக பௌத்தர்களை இழிவடையச் செய்ததுமன்றி பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் குடியேறிய காலத்தில் சில வேஷப்பிராமணர்களே முநிஷிகளாகச் சென்று தமிழ் கற்பிக்குங்கால் இப்பறையர்களையே முன்பு இழிவடையக் கூறி அருவெறுக்கச் செய்துவிட்டு பின்பே இவர்கள் பாடங்கற்பிப்பது வழக்கமாம்.

அதற்குப் பகரமாய் தமிழுக்கு இங்கிலீஷ் மொழிபெயர்ப்புள்ள ராட்ளர் டிக்க்ஷநெரியில் 352-ம் பக்கம் 34-வது வரியில்,

1. வள்ளுவப் பறையர், 2. தாதப்பறையர் 3. தங்கலான் பறையர்,4 துற்சாவி பறையர், 5. குழிப் பறையர், 6. தீப் பறையர் 7. முரசப் பறையர், 8. அப்புப் பறையர், 9. வடுகப் பறையர், 10. ஆலியப் பறையர், 11. வழிப் பறையர், 12. வெட்டியாரப் பறையர், 13. கோலியர் பறையர்களெனப் பதின்மூன்று வகைப் பறையர்களைப் பரக்கவெழுதி பிரிட்டிஷாருக்குக் கொடுத்துவிட்டு பார்ப்பானில் இத்தனை வகைப் பார்ப்பான் இருக்கின்றானென்று எழுதிக் கொடுக்காமல் விட்டிருக்கின்றார்கள்.

காரணம் யாதென்பீர்களேல் - பிரம்மாவின் முகத்திலிருந்து வந்தப் பார்ப்பானில் நூற்றியெட்டுவகைப் பார்ப்பான் ஏதென்று கேட்பார்கள் அதினால் தங்களுக்கு இழிவுண்டாமென்றஞ்சி விடுத்து பௌத்தர்களை மட்டும் பாழ்படுத்தி வந்தார்கள்.

அக்காலத்தில் பிரிட்டிஷ் இராஜாங்கத்தில் சிவில் சர்விசில் தேர்ந்துவந்த மிஸ்டர் எலீஸ் துரையவர்கள் 1825-ம் வருடத்திற்குப் பின்பு ஓர் தமிழ்ச்சங்கம் சென்னையிலேற்படுத்தி அதனை விருத்தி செய்தற்கு பலரிடங்களிலுமுள்ள ஓலைப் பிரிதிகளைக் கொண்டு வரச்செய்து அச்சிட்டு தமிழ் நூற்களைப் பரவச்செய்து வந்தார்.

அதையறிந்த ஜர்ஜ் ஆரிங்டன் துரை பட்லர் கந்தப்பனென்பவரால் தன்னிடமிருந்த ஓலைப்பிரிதி திரிக்குறள் மூலமும் திருவள்ளுவர்மாலையும் நாலடி நா நூறுங் கொண்டுபோய் மேம்பட்ட துரையிடம் கொடுக்க அவரும் சந்தோஷித்து அக்கால் தன்னிடமுள்ளத் தமிழ் வித்வான்களாகும் தாண்டவராய முதலியாராலும் மானேஜர் முத்துசாமிப்பிள்ளை அவர்களாலும் 1831 வருஷம் அக்குறளை அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றார்.

ஆனால் திருவள்ளுவர்மாலையில் மட்டும் நூதனமாக நான்கு பாடல்களை சேர்த்திருப்பதாய் கந்தப்பனவர்கள் மேம்பட்ட துரையிடம் முறையிட்டிருப்பதாய் சூரியோதயப் பத்திரிகையில் வரைந்திருக்கின்றார்கள்.

இவ்வகையாய் 1831 வருஷம் வெளிவந்தக் குறளில் திருவள்ளுவநாயனார் பார்ப்பானுக்குப் பிறந்தார் ஏய்ப்பானுக்குப் பிறந்தார் என்னும் கட்டுக்கதைகள் யாதொன்றும் கிடையாது. அக்குறளை வாசிக்கும் பெரியோர்களும் துரைமக்களும் மிக்க ஆனந்தங்கொண்டதுமன்றி அதே தமிழ்சங்கத்து அதிபராகும்மிஸ்டர் எலீஸ்துரையவர்கள் நாயனார் குறட்பாக்களும் சில சார்புநூற் பாக்களுஞ் சேர்த்து தன்பெயரால் இன்னொரு குறள் புத்தகமும் வெளியிட்டிருக்கின்றார். அப்புத்தகத்திலும் நாயனார் பார்ப்பானுக்குப் பிறந்தார் பறைச்சிக்குப் பிறந்தாரென்னும் கட்டுக்கதைகள் யாதொன்றும் கிடையாது.

இத்திரிக்குறளுக்கு நிகரான நீதி நூல் தமிழ் பாஷையில் ஏதொன்றும் இல்லாததாலும் வேஷப்பிராமணர்களை அறியாமலே தமிழ்ச்சங்கத்தினின்று குறள் வெளிவந்துவிட்டதினாலும் உள்ள வேஷப்பிராமணர்கள் நிதானித்து ஆ, ஆ, நாம் வள்ளுவர்களை முதற் பறையர்களாகக் கூறி பலவகை இழிவுபடுத்தி இராஜாங்கத்தாருக்கும் மற்றவர்களுக்கும் போதித்திருக்கின்றோமே இன்னீதிநூலை அவர்கள் பார்வையிட்டு இத்தகைய விவேக மிகுத்தோர்களை பறையர்கள் என்றும் தாழ்ந்தோர்கள் என்றும் கூறுகின்றீர்களே அதன் காரணம் யாதென்று கேட்பார்களாயின் வேஷப்பிராமண விபச்சாரன் கதையால் மூடலாம் என்று எண்ணி அடியில் குறித்தக் கட்டுக்கதையை அடுக்கிவிட்டார்கள்.