பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 461

அதாவது - நாயனார் புத்தபிரானை சிந்தித்துள்ள முதற்பாடலில் ஆதி என்றும், பகவன் என்றும் வந்துள்ள வாக்கியங்களை எடுத்துக் கொண்டு ஆதி என்னும் பறைச்சியும், பகவன் என்னும் பிராமணனும் இருந்ததாகவும் அவ்விருவர் விபசாரத்தால் ஏழு பிள்ளைகள் பிறந்ததென்றும் அவர்களில் நாயனார் மயிலாப்பூரில் தங்கி ஓர் வைசியகுலப் பெண்ணை மணந்து இல்லறம் நடத்துங்கால் இக்குறளைப் பாடினார் என்றும் ஓர் சிறிய அகவற்பா பாடி அதைப் பாடினவர் இன்னாரென்றும் குறிக்காமல் விசாக பெருமாளையர் 1835 வருஷம் அச்சிட்டக் குறள் புத்தகத்தின் கடைசியில் அச்சிட்டு வைத்துவிட்டார்கள்.

இவ்வகையாக நாயனார் சீவியசரித்திரத்தை அவர் புத்தகத்தின் முதலில் அச்சிடாமல் கடைசியில் சேர்த்து அச்சிட்ட காரணம் யாதென்பீரேல் - இத்திரிக்குறளை மிஸ்டர் எலீஸ் துரையவர்களும், தாண்டவராய முதலியார், முத்துசாமி பிள்ளை இவர்கள் அச்சிட்ட இரண்டு புத்தகங்களிலும் இல்லாதக் கட்டுக்கதைகள் பார்ப்பார்கள் அச்சிட்ட புத்தகத்தில் எங்கிருந்து வந்ததென்று யாவரேனும் கேட்பார்களாயின், சரிதை அங்கு கிடைத்தது இங்கு கிடைத்ததென நழுவவிடலாம் யாவரும் கேட்காதிருந்துவிடுவார்களாயின் கதையை விரித்து வலுத்துவிடலாம் என்று எண்ணி 1837 வருஷம் விசாக பெருமாளையரிளவல் சரவணபெருமாளையர் அச்சிட்ட புத்தகத்தின் முகப்பில் இப்பொய் சரித்திரத்தை விரித்து பொருந்தாப்பொய்களைப் பொருத்திவிட்டார்.

அப் பொருந்தாப் பொய்கள் யாதெனில் - விசாக பெருமாளையர் செய்துவைத்துள்ள பொய்க்கதா அகவலில் ஏழு பிள்ளைகள் பிறந்ததென்று நிறுத்திவிட்டார்.

2:4, சூலை 8, 1908

சரவணப்பெருமாளையர் நான்காவது அச்சிட்ட புத்தகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒவ்வோர் பிள்ளை பூமியிற்பிறந்தவுடன் ஒவ்வோர் வெண்பாக்களைப் பாடிவிட்டதென்றும் அப்போது இச்சரவணப் பெருமாளையர் அருகினின்று ஓலை எழுத்தாணி கொண்டு உடனுக்குடன் எழுதிக் கொண்டது போலும் ஏழு வெண்பாக்களைப் பாடி சேர்த்துவிட்டார். விசாகபெருமாளையர் அச்சிட்ட புத்தகத்தில் நாயனார் வைசியகுலப்பெண்ணை மணந்தாரென்று வரைந்திருக்கின்றார். அதன்பின் சரவணப்பெருமாளையர் அச்சிட்ட புத்தகத்தில் நாயனார் வேளாளகுலப்பெண்ணை மணந்தாரென்று வரைந்திருக்கின்றார்.

விசாகப்பெருமாளையர் அகவலில் ஆறுபிள்ளைகள் பிறந்தயிடங் களையும் தங்கிய இடங்களையும் காண்பிக்காமல் நாயனார் பிறந்தயிடம் மட்டும் மயிலை என்று குறித்திருக்கின்றார். சரவணப்பெருமாளையர் அச்சிட்ட புத்தகத்தில் ஏழுபிள்ளைகளுக்கும் இடங்களைக் குறித்துவிட்டதுமன்றி ஊரிலில்லா வேதாளக் கதை ஒன்று விபரீதமாகச் சேர்த்துவிட்டார். இவ்வகையாய் இருவர் எழுதியுள்ளப் பொய்க்கதைகளுக்கு இன்னும் பெருத்தப் பொய்யாதரவுகளை 1847 வருஷம் திண்டிக்கல் முத்துவீரப்பிள்ளை உத்திரவின்படி வேதகிரி முதலியாரவர்கள் விரித்துவிட்டார்.

அதாவது விசாகப்பெருமாளையர் அச்சிட்டப் புத்தகத்திலிருக்கும் அகவலில் சோழநாட்டுள் ஓர் அந்தணனுக்கு தனது உயர் குல மனைவியால் பகவன் என்னும் மைந்தன் பிறந்து அப்பகவன் வளர்ந்து கருவூர் புலைமகள் ஆதி என்பவள் தன்னை வந்தடுக்க அவளை அடித்துத் துறத்திவிட்டுப் போய் மறுபடியும் வருங்கால் அவளே சந்தித்து இருவரும் கூடிக்கொண்டு போய் ஏழுபிள்ளைகளைப் பெற்றதாக வரைந்திருக்கின்றார்.

1847 வருஷம் முத்துவீரப்பிள்ளை உத்திரவின்படி வேதகிரி முதலியாரவர்கள் அச்சிட்டபுத்தகத்தில் பிரமன் ஓர் யாகஞ் செய்து அதில் கலைமகள் உற்பத்தியாக அவளையே பிரமன் விவாகஞ்செய்துக்கொண்டு மறுபடியும் அகஸ்தியராகத் தோன்றி சமுத்திர கன்னிகையை மணந்து பெருஞ் சாகரனென்பவரைப்