பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 463

இவ்வகையாய்த் தென்னாட்டில் பரவிய ஓர் பாஷைக்கு எழுத்து லட்சணம், சொல்லிலட்சணம், பொருளிலட்சணம், யாப்பிலட்சணம் அணியிலட்சணமாகும் பஞ்ச லட்சணங்களையும் புத்தசங்கத்தோராகும் சமண முனிவர்கள் வகுத்துக் கூறியவைகளுள் யாப்பிலட்சண விதியில்,

மங்கலஞ் சொல்லெழுத்தெண்ணியதானம் வருமிருபாற்
பொங்கிய உண்டி வருணம் பகுத்திடி நாட்பொருத்தம்
தங்கிய நாட்கதி யெண்கண மென்று தமிழ் தெரிந்தோ
ரிங்கிவை பத்து முதல் மொழியாமென்றியம்புவரே.

என்னும் (சீர்கொண்ட) (சீர்பூத்த) மணி கொண்ட எனுமொழியில் பத்துபொருத்தம் அமைந்திருத்தல் வேண்டும் என்றும், அத்தகைய முதன் மொழியில் நஞ்செழுத்து கலவாமல் அமுதெழுத்து சேரவேண்டும் என்று உண்டியின் பொருத்தத்தை அதிஜாக்கிரதையில் பொருத்தவேண்டும் என்றும் குறித்திருக்கின்றார்கள்.

யாப்பிலட்சணம் கூறும் முதல் மொழி ஐந்தெழுத்துள், யா, யோ, ரா, ரோ, லா, லோ, என்னும் மூவொற்றெழுத்தும் இரண்டௗபடை மகரக் குறுக்கமும் ஆய்தமுமாகிய நஞ்செழுத்துக்கள் அமைந்துள்ளதால் தென்மொழியை திராவிட பாஷை என்றும், அ, இ, உ, எ, க, ச, த, ந, ப, ம, வ. என்னும் அமுதெழுத்துக்களுள்ளதால், தென்மொழியை தமிழென்றும், இருபெயரால் அழைத்து வந்தார்கள். இவற்றுள் திராவிடம் என்னும் பெயர் வடநாட்டாராலும் தமிழென்னும் பெயர் தென்னாட்டாராலும் பெரும்பாலும் வழங்கலாயினர்.

நஞ்செழுத்தைக்கொண்டு திராவிடம் என்றும் அமுதெழுத்தைக் கொண்டு, தமிழென்றும் வழங்கிவந்த பாஷையை மலையாளு வாசிகள் வழங்குவதை கொடுந்தமிழென்றும், மண்ணாளுவாசிகளுள் தென்மேற்கு வாசிகள் வழங்குவதைக் கருந்தமிழென்றும், தென்கிழக்கு வாசிகள் வழங்குவதை செந்தமிழ் என்றும் ஆக முத்தமிழென வழங்கி வந்தார்கள்.

இம்முத்தமிழும் பௌத்த சங்கத்தோராகும் சமணமுநிவர்கள் இத்தேச முழுவதும் நிறைந்துள்ள வரையில் தமிழ்மணம் எங்கும் வீசி புலவர்கள் முயற்சி சிறப்புற்றிருந்தது, பௌத்த சங்கங்கள் அழிந்தவுடன் தமிழ்மணம் குன்றி புலவர்களும் முயற்சி இழந்தார்கள்.

தற்காலமோ பௌத்ததேசமாகும் பிரம்ம தேசத்தில் வாசஞ்செய்யும் புலவர் பெருமாள் இராயாபாதூர் பெ.மா. துரைப்பிள்ளை அவர்கள் பூர்வத்தமிழ் மணம் வீசவும் புலவர் சிறப்பவும் தனது சுயமுயற்சியால் சேகரித்த திரவியங்களில் அரையே அரிக்கால்பாகம் தமிழ் வித்வான்களுக்கே அளித்து தமிழை விருத்தி செய்து வருகின்றார்.

இத்தகைய விருத்தி பூமான் இருப்பிடஞ் சென்ற பூ. முத்துவீர உபாத்தியாயரவர்கள் ஸ்ரீமான் சபாமண்டபத்தில் சகல வித்துவான்களும் புடைச்சூழ அவதானங்களில் தச அவதானஞ்செய்து புலவர் புகழ்கோன் பெ.மா. மதுரைப்பிள்ளை அவர்களால் நாமதானம், நாவலரென்றும், ஆடைதானம் காசி பட்டாடையும், ஆபரணதானம் தங்கக்காப்பும், கழுத்தணியும், சுவர்ணதான தாம்பூலமுமளித்து சகல வித்வான்களையும் வந்துள்ள அன்பர்களையும் களிப்புறச் செய்திருக்கின்றார்.

இம்மேறைக் கட்டுப்பட்டால் கவரிமான் மயிரால் கட்டுப்படல் வேண்டும். குட்டுப்பட்டால் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்னும் பழமொழிக்கிணங்க சகல வித்துவான்கள் மத்தியில் நாவலரென்னும் பெயர் பெற்றதே பேராகும். அங்ஙனமின்றி யாரடாவிட்டது மானியமென்றால் நான்தான் விட்டுக்கொண்டேன் என்னும் பழமொழிக்கிணங்க தன்னைத்தானே நாவலர் என்று கூறித் திரிவது நகைப்புக்கிடம் உண்டாவதுமன்றி தமிழ்மணம் இருப்பதும் குன்றிப்போம்.

2:7, சூலை 29, 1908