பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464 / அயோத்திதாசர் சிந்தனைகள்

3. ஞானத்தாய் ஔவையார் அருளிச் செய்த திரிவாசகம்

முதல் வாசகம்

காப்பு

ஆத்திச்சுவட்டில் அமர்ந்த தேவனை / ஏத்தி யேத்தித்தொழு வோமியாமே

ஆத்தி - கல்லாத்தி, சுவட்டின் - நீழலின்கண், அமர்ந்த-வீற்றிருந்த, தேவனை - ஆதிதேவனாம் புத்தபிரானை. ஏத்தியேத்தி-புகழ்ந்து மகிழ்ந்து, தொழுவாம் வணங்குவாம் யாம்-யாங்களென்றவாறு.

திராவிட பாஷையில் கல்லாலம், கல்லாத்தி என்று வழங்கி வந்தமரப்பெயர், அரசன் மரத்தடியில் வீற்றிருக்கின்றார், வீற்றிருக்கின்றார் என்னும் காரியப் பெயர்க்கொண்டு அரசமரமென வழங்கலாயிற்று.

கல்லாலங் கல்லாத்தியென்று வழங்கிவந்தப் பெயர்களை தாயுமானவர்க் கூறியுள்ள, “கல்லாலடிக்குள் வளர்சித்தாந்த முத்திமுதலே” எனும் வாக்கியத்தினாலும், மணிமேகலையில் கூறியுள்ள ‘ஆலமர்ச்செல்வன் மதன்விழாக்கோல்கொள்,’ எனும் வாக்கியத்தினாலும்,

அருங்கலைச்செப்பு - கல்லாலப்பத்து

ஆத்தியடியமர்ந்து வாகமங்களீய்ந்து / சாத்தனமக்களித்தசீர்

எனும் செய்யுளாலும் அறிந்துக் கொள்ளுவதன்றி தேவனென்னும் மொழி ஆதிதேவனையே சிந்தித்துள்ளதாதலின் அவ்வாதி தேவனென்னும் பெயர்புத்தபிரானுக்குரிய ஆயிர நாமங்களில் ஒன்றென்பதை அடியில் குறித்துள்ள தெய்வப் பெயர்ச் செய்யுளாலும் அறிந்துக் கொள்ளலாம்.

பின்கலைநிகண்டு

தரும ராசன்முன்னிந்திரன் சினன் பஞ்சதாரைவிட்டே
யருள்சுரந்தவுணர்க் கூட்டுந் ததாகதன் ஆதிதேவன்
விரவு சாக்கையனேசைனன் விநாயகன் சினந்தவிர்ந்தோன்
அரசுநீழலிலிருந்தோன் அறி அறன் பகவன்செல்வன்

இத்தகைய கலைவாசகத்தை தமிழ்மொழியால் அமைக்க ஆரம்பித்த ஞானத்தாய், புத்தபிரானாம் ஆதிதேவனை காப்புக்கு முன்னெடுத்தக்காரணம் யாதென்பீரேல் உலக சீர்திருத்தமக்களுள் ஆதிபகவனெனத் தோன்றி தமிழ் பாஷையை இயற்றி அதனிலையால் சத்தியதன்மத்தைப் பரவச் செய்து தமிழர் பெருமானெனக் கொண்டாடப்பெற்றவராதலானும், “காப்புக்குமுன்னெடுக்குங் கடவுடான் மாலேயாகும்,” எனப்பின்கலைநிகண்டு புகல்வதாலும், தான் கூறிய தமிழ் வாசகநூலுக்குத் ததாகதரையே காப்பாக சிந்தித்துள்ளாள்.

வீரசோழியம்

ஆவியனைத்துங் க,ச,த,ந,ப,ம,வ், வரியும் வவ்வி
லேவிய வெட்டும் யவ்வாறு ஞந்நான்கு மெல்லாவுலகு
மேவியவெண்குடை செம்பியன் வீரரா சேந்திரன்றன்ஷ
நாவியல் செந்தமிட் சொல்லின் மொழி முத னன்னுதலே

யாப்பருங்கலக்காரிகை

திறந்திடுமின்றீயவை பிற்காண்டுமாதர் / இறந்து படிற்றெரிதாமேதம் உறந்துயர்கோன்
தண்ணாரமார் பிற்றமிழர் பெருமானை / கண்ணாறக்காணக்கதவு.

நூல் 1. அறன் செயல்விரும்பு

அறன் - அறக்கடவுளாகும் புத்தபிரான், செயல் - செய்கைகளாம், நற்காட்சி, நற்சிந்தை நல்மனம் நற்செய்கை, நல்வாழ்கை, நல்லூக்கம், நற்கருத்து, நல்லமைதி இவைகளை, விரும்பு - ஆசை கொள்ளுமென்பதாம்.

இச்செயலானது ஏழைகள் முதல் கனவான்கள் வரையிலும், பெரியோர்கள் முதல் சிறுயோர்கள் வரையிலும், பிணியாளர்கள் முதல் சுகதேகிகள் வரையிலுஞ் செய்யக்கூடியபொது தன்மமாதலின் இவற்றை முதலில் விளக்கியுள்ளாள்.

அறனென்னும் வல்லினறகரமமைந்த தெய்வப்பெயர் உண்டோ என்பாருமுண்டு.