பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

466 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இயல்பில் கண்டடைந்த வித்தையை ஏனையோர்க்கு உதவாமல் ஒளிப்பதானால் உள்ள வித்தையும் கெட்டு விருத்தி கெடுமென்பதாம். அதுவே அன்புமிகுத்தவர்களின் செயலாகும்.

அறநெறி தீபம்

ஐயெனத் தாம் பெருகுவதும் அறிவினால் விளங்குவதும்
உய்தவங் கேட்டுணர்வதுவும் உணர்ந்தவற்றைப் பிர ருளத்திற்
செய்தவ நன்றாக்குதலுஞ் சிறந்தார்சொற் றேருதலும்
மெய்யன்பை யுள்ளத்தில் மேவியவன் பயனாகும்.

4. ஈவதைவிலக்கேல்

ஈவதை - ஒருவருக்கொருவர் கொடுப்பதை, விலக்கேல் - தடுக்காதீரென்பதாம்.

மக்கள் ஒருவருக்கொருவர் உபகாரங் கருதியே சேர்ந்து வாழ்பவர்களாய் இருக்கின்றார்கள். அத்தகைய உபகாரச் சேர்க்கையை ஒருவருக்கொருவர் தடுத்து கெடுப்பதானால் மநுகுல விருத்திக் கெட்டுப்போ மென்பதாம்.

உனக்குள்ள உலோபகுணத்தை எதிரிக்குங் கற்பித்து உனக்குள்ளக் கேட்டில் எதிரியையுஞ் சேர்த்துக் கெடுத்தல் இழிவேயாகும்.

கொடுக்கும் யீகையுள்ளோன் குணத்துடன் கெடுக்கும் லோபியின் குணம் கலக்குமாயின் பொன்னுடன் பித்தளையும், சோற்றுடன் மலமும், பாலுடன் மூத்திரமுங் கலந்ததுபோல் அதன் பெருந்தகைய குணமுஞ், சிறந்தமதிப்பும், பரந்த கீர்த்தியும் நாசமடைந்துப்போம்.

ஆதலின் ஒவ்வோர் புருஷனும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமென்னும் நான்கிலும் நிலைத்தல் வேண்டும். அத்தகைய உயர்ந்தோர் மாட்டே உலகமும் எனப்படும்.

எழியோர்க்கு ஈவதை விலக்குவோனின் குணாகுணகதி.

விவேகசிந்தாமணி

நாய்வாலை யளவெடுத்துப் பெருக்கித்தீட்டி நற்றமிழை யெழுத வெழுத்தாணியாமோ
பேய்வாழுஞ் சுடுகாட்டைப் பெருக்கித்தள்ளி பெரியவிளக் கேற்றிவைத்தால் வீடதாமோ
தாய்வார்த்தைக் கேளாத ஜகசண்டிக்கென் சாற்றிடினு முலுத்தகுணந் தவிரமாட்டான்
ஈயாரை யீயவொட்டா னிவனுமீயா னெழுபிறப்பினுங்கடையா மிவன்பிறப்பே.

பற்பல இடுக்கங்களினால் இழிய நிலைமெய் அடைந்தவர்களுக்கும் யாதொரு தொழிலுஞ் செய்ய சக்த்தியற்றவர்களுக்கும் ஈதலே பேருபகாரம். அவைகளைத் தடுத்தலே இழியநிலையைத் தரும்.

விவேகசிந்தாமணி

இடுக்கினா லிழிமெய் யெய்தி யிரப்பவர்க் கிசைந்துதானங்
கொடுப்பதே மிகவுநன்று குற்றமே யின்றிவாழ்வார்
தடுத்துகை விலக்குவோர்க்கு தக்கநோய் பிணிகளுண்டாய்
உடுக்கவுந் துணியுமற்று வுண்ணுஞ்சோ றுதவாதாமே.

இத்தகை ஈகையை வீணருக்கும், சோம்பேரிகளுக்கும், பொய்யர்களுக்கும் கொடுப்பதானால் ஈவோர்களுக்கே இடுக்கணுண்டாய் இழிய நிலைபெற வேண்டும் ஆதலின் பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதே பாக்கியபெருக்க வழியாகும்.

குறுந்திரட்டு

பொய்யைச்சொல்லி பிதற்றிடும் பேயர்க்கும் / அய்யமேற்கவே அஞ்சாமிலேச்சர்க்கும்
துய்யஞான சுகுணசெல்வாதிபர் / இய்யுந்தான மிடுக்கத்திழுக்குமே.
ஊனமின்றி யுருபெருத்தோருக்குங் / கானமற்றுமெய் காணாகசடர்க்கும்
மோனரென்னு முழுமோசக்காரர்க்குந் / தானமீவது தப்பரையாகும்மே.


5. உடையதை விளம்பேல்

உடையதை - உன்னிடத்துள்ள திரவியத்தை, விளம்பேல் - பிறருக்குரையாதே. டம்பத்தினால் உனக்குள்ள ஆஸ்தியை பிறரறியக் கூறுவாயாயின் உன்னையொத்த திரவியவான் அவற்றைக் கருதமாட்டான். வன்னெஞ்சனும் கள்ளனும் அறிவார்களாயின் உன்னை வஞ்சித்துக் களவாடியும் துன்பப்படுத்துவார்கள்.