பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

483 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஆதியட்சரமாம் அகாரமே அறிவின் விருத்திக்குக் காரணமாகி உகாரமாம் உண்மெயொளிகண்டு மகாரமாம் காமவெகுளி மயக்கங்கள் அற்று சிகாரமாம் அன்பில் நிலைப்பதே நிருவாண சுகமாகும்.

சிவவாக்கியர்

அகாரகாரணத்துளே அநேகனேக ரூபமாய்
உகாரகாரணத்துளே வொளிதரித்துநின்றனன்
மகாரகாரணத்ததின் மயக்கமற்று வீடதாம்
சிகாரகாரணத்துளே தெளிந்ததே சிவாயமே.

ஞானக்கும்மி

கட்டுப்படாதந்த வச்சுமட்டம் - அதின் / காலே பன்னிரண் டாகையினால்
எட்டுக்கயிற்றினால் கட்டிக்கொண்டால் அது / மட்டுப்படுமோடி ஞானப்பெண்ணே.

எட்டென்னும் கணிதாட்சரமாகவும், எழுத்தென்னும் இலக்கிய முதலட்சரமாகவும் விளங்கும் குறியெழுத்தாம் அகராட்சரத்தை அவமதியாதே என்பது அறிவுருத்தப் பலனாம்.

ஒளவையார் ஞானக்குறள்

கூடகமானக் குறியெழுத்தைத் தானறியில் / வீடகமாகும் விரைந்து.

இத்தகைய சிரேஷ்டமாம் அகராட்சரத்தை ஒவ்வோரில்லந்தோரும் வழங்கிவருதற்கு அப்பா, அம்மா, அண்ணா , அண்ணி, அக்கா, அத்தை, அத்தான், அப்பி என்று அழைப்பிலும் உச்சரிக்கும்படி செய்திருக்கின்றார்கள்.

8. ஏற்பதிகழ்ச்சி

ஏற்பது ஒருவர் சொல்லும் வார்த்தையை விசாரிணையின்றி ஏற்றுக்கொள்ளுவது, இகழ்ச்சி - இழிவைத்தரு மென்பதாம்.

அதாவது ஒருமனிதன் முன்னில் வந்து நான் பிரமாமுகத்திலிருந்து வந்தவன் நானே பெரிய சாதியினனென்று கூறுவானாயின் அவன் வார்த்தையை மெய்யென்று ஏற்றுக்கொண்டு யாதொரு விசாரிணையுமின்றி அவனைப் பெரியசாதியோன் பெரியசாதியோனென்று உயர்த்திக் கொண்டு தன்னைத் தாழ்ந்தசாதியாக ஒடுக்கி சகலத்திலும் முன்னேறுவதற்கில்லால் ஒடுங்கி தானே சீர்கெட்டு இழிவடைந்துபோகின்றான்.

இத்தகையோன் ஒருவன் வாய்மொழியை ஏற்காது அவனை நோக்கி நீவிர் பிரம்மா முகத்தினின்று பிறந்தவரானால் அப்பிரம்மா எங்கிருக்கின்றார், அவர் முகம் எவ்வகைத்தானது, உமது மனைவியார், யாவர் முகத்தில் பிறந்துள்ளார், மநுகுலத்தோருள் நீவிர் எவ்வகையால் பெரியசாதி யானீர், பெரியசாதியோர் அடையாளமென்னை சிறியசாதியோர் அடையாள மென்னையென்று விசாரிணைச் செய்வானாயின் பிரம்மாவும், பிரம்மாவின் முகத்தில் தோன்றியதும், பெரியசாதி என்னும் படாடம்பமும் பின்னிடைந்துபோம்.

அதினால் இவன் தன்னை சின்னசாதியென விசாரிணையின்றி தாழ்ச்சியடையும் இகழ்ச்சி நீங்கி சகல விஷயங்களிலும் முன்னேறி புகழ்ச்சி பெறுவான்.

இத்தகைய நிகழ்ச்சி நேர்ந்து மக்கள் இகழ்ச்சி பெறுவார்களென்று வருங்காலமறிந்த ஞானத்தாய் ஏற்பதை இகழ்ச்சி என்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

சுவர்ண தானமேனும், வஸ்திர தானமேனும் ஒருவன் கேழ்க்காமல் மற்றொருவன் யீவதை ஏற்பது இழிவாகமாட்டாது.

எவ்வகையதென்னில்:- யதார்த்தபிராமணர்களுக்குரிய அறுவகைத் தொழிலாம் ஓதல், ஓதிவைத்தல், வேட்டல், வேட்பித்தல், யீதல், ஏற்றல் என்பவற்றுள் அந்தணர்கள் ஏற்றலும் ஒருதொழிலாகும். அரசன் வரி இறை ஏற்றலும் ஒரு தொழிலாகும். ஆதலின் இத்தகைய ஏற்பு இழிவடையமாட்டாது. சுயப்பிரயோசனமுள்ளோர் சொற்களைவிசாரிணையின்றி ஏற்றுக்கொள்ளுவதே இழிவைத் தருமென்பது அநுபவக்காட்சியாகும்.

9. ஐயமிட்டுண்

ஐயம் - புலன் தென்பட ஒடுங்கினோராகும் தென்புலத்தோர்க்கு,