பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 471

அக்குமரதானமே மூப்புதான நிலைப்பெற்று மரணத்திற்கு உள்ளாக்கும் என்பது கருத்து.

நாம் புசிக்கும் பதார்த்தங்களை மிதாகாரமாய் அதிகமுமின்றி கொஞ்சமுமின்றி புசிப்பதே சுகாதாரமாகும். அங்ஙனமின்றி அதிகப்புசிப்பினும் தேகம் தடிப்பேறிக் கெடும். புசிப்பை அதிகச்சுருக்கினும் சப்த தாதுக்களொடுங்கி கெடும். ஆதலின் மரணத்திற்கேதுவாம் அஃகஞ்சுருக்காது மரணத்தை ஜெயிப்பதற்கேதுவாம் மிதாகாரம் புசித்து சதாஜாக்கிரமையினின்று அறிவை விருத்தி செய்ய வேண்டுமென்பதே ஆப்தர்களின் கருத்தும் ஆசீருமாதலின் அஃதை அறிந்துரைத்தலே அரும் பொருளாகும்.

அறநெறிச்சாரம்

மெய்மெய் பொறையுடைமெய் மேன்மெய் தவமடக்கம்.
செம்மெ யொன்றின்மெய் துறவுடைமெய் நன்மெய்
திறம்பாவிரதந் தரித்தரோடின்னும்
அறம்பத்து, மான்ற குணம்.

மேற்கூறிய, தேகக்காப்பு, மனோகாப்பு, வாக்குக்காப்பாம் விரதங்களை நோக்காது சோமவார விரதம், அது போல் மங்களவார விரதம், சுக்கரவார விரதம், சனிவார விரதமென்று விருந்தினரை ஏமாற்றிப் பணஞ் சேர்க்கும் விரதம் வாரத்திற்கு நான்கு நாளிருப்பதினால் தேகங்குன்றி சீர்கெட்டு குமரபருவத்துள் நரை தோன்றி நசிப்பார்களென்று திரிகாலமுணர்ந்த ஞானத்தாய் செய்யுளிற் கூறாது வாசகத்தில் விளக்கியுள்ளாள்.

அருங்கலைச்செப்பு - இழிவொடுக்கப்பத்து

சோற்றைக் குறைத்து சொரூபத்தை தானடக்கல் மாற்றான் மதியென்றுணர்.
உன்னைச்சுருக்கி வுடம்புரிக்கித் தானிருத்தல் பேணப்படுமாம் பிழை.
கூற்ற னுடம்பின் குறிப் பறியாதே குறைத்தல் சீற்றச் சிறை யென்றறி
நாதனொடுங்கி னனவழிந்த முற்றுறவைப் போத முணர்ந்து புணர்.


14. கண்டொன்றுசொல்லேல்

கண்டொன்று - கண்ணினாற் பார்த்த ஒன்றைவிட்டு, சொல்லேல் மற்றொன்றை சொல்லாதே என்பதாம்.

கண்ணினாற் பார்த்ததொன்றிருக்கக் காணாத மற்றொன்றை சொல்லுவதானால் அதைவிடப் பொய் வேறில்லை என்பதாம்.

ஞானத்தாய் கண்டொன்றுசொல்லேல் எனும் மொழியை வற்புருத்திக் கூறியுள்ளக் காரணம் யாதென்பீரேல்:-

செல்காலம், நிகழ்காலம், வருங்கால மூன்றினையும் உணர்ந்தவளாதலின் வருங்கால சம்பவங்களில் சத்தியதன்மமாம் மெய்யறம் நிலைகுலைந்து அசத்திய தன்மமாம் பொய்யறம் நிலைத்து காணாததையே கண்டதுபோல் பிதற்றிப் பொய்யைச் சொல்லி போசனத்திற்கலைவார்கள்.

ஆதலின் கண்ணினாற் கண்டதைவிட்டு மற்றொன்றைக் கூறாதேயென்று வற்புருத்திக் கூறியுள்ளாள்.

விவேகசிந்தாமணி

மெய்யதைச் சொல்லுவாராகில் விளங்கிடு மேலுநன்மெய்
வையக மதனைக்கொள்வார் மனிதரிற் றேவராவார்
பொய்யதைச் சொல்வாராகிற் போசன மற்பமாகும்
நொய்யவ ரிவர்களென்று நோக்கிடா ரறிவுள்ளோரே.

வளையாபதி

கல்வியின்மெயுங் கைப்பொருட்போக
நல்லில செல்லர்களானலியுற்றலும்
பொய்யில் பொய்யொடு கூடு தற்காகுந்
.........யது கடிந்தோம்புமின். (வரிகள் தெளிவில்லை)


15. ஙப்போல்வளை

ஙப்போல் - தன்னைப்போல, வளை - மற்றவர்களையுஞ்சூழ வாழ்க்கைச்சுகந் தருவாயென்பதாம்.