பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 473

ஓர் நியாயமுள்ளோன் கள்வனைநோக்கி அன்னியர் பொருளை அபகரிக்காதேயென்பானாயின் அக்கள்ளன் நியாயத்தை உட்கொள்ளாது கோபமீண்டு கூறியவன் களவாடானோ என்பான்.

அதேநியாயத்தைக் கள்வனைநோக்கி அப்பா நீவிர் மிக்க கஷ்டத்துடன் சம்பாதித்தப்பொருளை மற்றொருவன் அபகரித்துக் கொள்ளுவானாயின் உன் மனம் ஆறுதலடையுமோ, பொருண்மீதுற்ற அவா விடுமோவென்றால்,

விடாது ஆறுதலுமடையாதென்பான். மீண்டும் அவனை நோக்கி அதுபோல் அன்னியன் பொருளையும் கருதி அவற்றை அபகரிக்காதிருப்பது அழகன்றோ என்பானாயின் அழகென்றும், சரியென்றும் தனதுள்ளத்தில் பட்டு களவு தொழிலை அகற்றுவான்.

ஆதலின் ஓதும் நியாயமானது ஒவ்வொருவர் உள்ளத்தில் படும்படி உரைக்கவேண்டும் என்பதாயிற்று.

திரிக்குறள்

நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று / பண்பிற்றலை பிரியாச்சொல்.

18. இடம்படுவீடிடேல்

வீடு - மனைக்கோலுங்கால், இடம் - அதனுள்ளமையுமில்லம், படு வீணேகெடும்படியாக, இடேல் - அமைக்காதே என்பதாம்.

வீண்டம்பத்தினால் வீட்டைப் பெருக்கக்கட்டி அதற்குத்தக்க செலவு செய்யாவிடினும் இல்லம் பாழ்படும். அதனை ஆளும் மக்களில்லாவிடில் சீர்கெடும்.

இதனை அநுசரித்தே “சிறுகக் கட்டி பெருக வாழவேண்டும்” என்பதுஉம் ஓர் பழமொழியேயாம். ஆங்கிலேயர்கள் பெருகக்கட்டி பெருக வாழ்கின்றார்களே அவ்வில்லம் பாழ்படுவதற்கேதுவில்லையோ என்பாருமுண்டு. தனத்தின்பேரில் வளைவென்பது போல் வரவுக்குத்தக்க செலவு செய்யுங் கனவான்களுக்கு அஃது பொருந்துமேயன்றி செலவிற்கே போதாத வரவுள்ள ஏழைகளுக்குப் பொருந்தாவாம்.

உலகத்தில் நூறு கனவான்களிருப்பார்களாயின் லட்சம் ஏழைகளிருப்பார் களென்பது திண்ணம். ஆதலின் பகவனது சத்ய தர்மத்தைப் பின்பற்றிய சங்கத்தோர்கள் யாவரும் தங்கள் சீர்திருத்தப்போதங்களை செல்வமற்றோர் கூட்டி சிறப்புப்பெறச் செய்வதியல்பாம்.

வீதியில் போக்கு வருத்துள்ளவர்கள் பார்த்து மெச்சவேண்டிய டம்பங்கொண்டு வீதியின்பெருந்திண்ணை, சிறுந்திண்ணை, நடைத்திண்ணை, சார்புத்திண்ணை முதலியவைகளைக் கட்டிவிட்டு உள்ளுக்கு நுழைந்தவுடன் உட்காருவதற்கிடமின்றி ஓலைகுடிசைகள் போட்டுக் கொண்டிருப்பவர்களும் உண்டு. இதனனுபவம் கண்டோர் உட்சுவரிருக்கப் புறச்சுவரும் பூசுவோரென்று கூறும் பழமொழியும் உண்டு.

இத்தியாதி டம்பச் செயல்களை அநுபவத்தில் அறிந்துள்ள ஞானத்தாய் வீணேயிடம்படும்படி வீடிடேலென்று விளக்கியுள்ளாள்.


19. இணக்கமரிந் திணங்கு

இணக்கம் - ஒருவரை யடுத்து வாழ்கவேண்டுமாயின், அறிந்து அவரது குணாகுணங்களை நன்காராய்ந்து, இணங்கு நேசஞ்செய்வா யென்பதாம்.

குடும்பம் ஒன்றாயினும் அவனவன் தொழிலுக்குத்தக்க புத்தியாம் குணங்கள் வேறுபட்டு குடும்பம் மாறுபட்டுப்போவதையும் கண்டு வருகின்றோம்.

அதுபோல் ஒரு குடும்பத்தில் பலபேதகுணமுண்டாய் பல குடும்பமாவதைக் கண்டுள்ளோமாதலின் துற்குணமுற்ற குடும்பத்தையேனும் நேயனையேனும் அடுத்து சேர்வோமாயின் அவர்களுக்குள்ள துற்குணச் செயல்களே நம்மெயும், நம்மெய் அடுத்தோர்களையும் பற்றி நாசத்திற்குள்ளாக்கி விடும்.

அவரவர்களின் குணாகுணங்களில் நற்குணமுற்றோர் குடும்பத்தையேனும், நேயனையேனும் அடுத்து சேர்வோமாயின் அவர்களுக்குள்ள நற்குணச் செயல்களே நம்மெயும், நம்மெயடுத்தோர்களையும் சுகம்பெறச் செய்யும்.