பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 477

நாலடி நாநூறு

குஞ்சியழகுங் கொடுத்தானைக்கோட்டழகு / மஞ்சளழகு மழகல்ல - நெஞ்சத்து
நல்லம் யாமென்னு நடுவுநிலையாமெய்க் / கல்வி யழகே யழகு.

முகத்தழகு, அகத்தழகு, மயிரழகு, யாவும் வெயில்பூர்க்கும், மஞ்சள் போலும், புல் நுனி நீர்போலும் மறைவது திண்ணமாதலின் எத்தேசத்துள்ளோருங் கண்குளிர வாசித்துணரவேண்டிய அழகும் எக்காலும் அழியா உண்மெய் உணர்த்தும் மெய்க்கல்வியாம் கலைநூற்களின் அழகே மிக்க சிறப்புற்றதாதலின் அத்தகைய அழகினை உலகோர்க்கு சிறக்கச்செய்யாது அழகலாதனவற்றைச் செய்தல் வீணே என்பது கருத்தாம்.

29. இளமெயிற்கல்

இளமெய் - தேகம் இளத்தையாம் பச்சை பருவத்திலேயே, கல் கலை நூற்களை உள்ளத்துணர்த்து மென்பதாம்.

பச்சை பருவத்தினின்று பாலப்பருவம், குமரப்பருவம் வளருவதுபோல் கல்வியாம் கலைநூல் கற்றலாம் கலையென்னும் சந்திரன் நான்காம்பிறை ஐந்தாம்பிறை என வளர்ந்து பூரணச்சந்திரன் என்பதுபோல் தேகம் வளரும் போதே கலைநூற்களாம் நீதிநூற்களின் பழக்கத்தால் சிற்றறிவென்னும் பெயரற்று பேரறிவு வளர்ந்து பூரணம் பெறுவானென்னும் அன்பின் மிகுதியால் இளமெயாம் பச்சைப்பருவத்திலே கலைநூற்களைக் கல்லென்று கூறியுள்ளாள்.

கல்லாடம்

நிலைதனிற்சலியா நிலைமெயானும் / பலவுலகடுத்து வொருதிறத்தானும்
நிறையும் பொறையும் பெறுநிலையானும் / குறையாவள்ளற் கொடுகரத்தானும்
தவமு மன்பும் சைலத்தருளி / வவுமுந் திருவு முந்தினோன்றானும் பலதுறை முகத்தொடு பயின்ற கோனும் / தலமுறை சீலந்தாக்கிய வளனுந்
தருதலிற் சீல முகத்தொடு தாகிய / வருபவர்க் குலகோ பிறை மூன்றருளி
திருமகள் முடித்த சிலையின்னும் / புண்ணியக் கல்வி வுண்ணுணர் மாக்கன்
கண்ணுஞ் செவியுங் காரணங்கொண்டு / குடக்குசேரர்க் கிடைத்த மதிநிதி
யுடைத்த பதிமலி திருமுகங் கூறி / யன்புருத்துதவி னின்புறுபாணன்
பொன்னிதி கொடுகென புறவிடுத்தருளு / மாதவர் முதல்வன் வள்ள லிறைவன்
னிருசரண் பெறுகுனர்போல / பெருமதி நீடுவர் சிறுமதி நுதலே.

(ஓரிரு வரிகள் தெளிவில்லை)

30. அறனைமறவேல்

அரனை - அறவாழிக்கடவுளாம் புத்தபிரானை, மறவேல் - என்றும் மறவாதேயென்பதாம்.

புத்தபிரான் புவியில் உலாவியகாலத்தில் தன்னைத் தொழுவுங்கள் என்றாயினும், தன்னை மறவாதிருங்களென்றாயினும் அவர் நாவினாற் கூறாதிருக்க,

நமது ஞானத்தாய் ஒளவையார்மட்டிலும் அறனை மறவாதிருங் கோளென்று கூறியக் காரணம் யாதென்பீரேல்,

அறனை சிந்திக்குங்கால் அறன் மொழிந்த பொருள் முற்றுஞ் சிந்திக்க யேது உண்டாகும். அத்தகைய சிந்தனா முயற்சியால் உண்மெய்ப் பொருள் விளங்கி துக்க நிவர்த்தி உண்டாகி சுகவாரி என்னும் நிருவாணத்தை அடைவார்கள் அப்பரிநிருவாணமே பிறவிச் சமுத்திரத்தைக் கடந்து நித்திய சீவினராய் சதானந்தத்திலிருப்பார்கள். என்பது சத்தியமாதலின், சத்தியமாம் அறனை என்றும் மறவேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

அருங்கலைச்செப்பு - அறனார் பத்து

அறனன் றவித்த வாய்மெயாம் நான்கும் / பிறவி கடல் கடக்கும் பேழ்.

சீவகசிந்தாமணி

வந்துதான் கூறிய விவ்வாய்மொழியுமன்றி
முந்து வறன் மொழிந்த பொருண்முற்றும் கைநாடி
பந்துபுடைப்பாணியெனப் பாயுங்கலிமான்றே
ரெந்தை திறமுள்ள முணர்ந்தின்னணம்விடுத்தேன்.