பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478 / அயோத்திதாசர் சிந்தனைகள்

31. அனந்தலாடேல்

அனந்தல் - அதிக வெள்ளப்பெருக்கத்தில், ஆடேல் - நீ நீந்திவிளையாடாதே.

ஆறுகளில் உண்டாகும் பெருவெள்ளப்போக்கில் நீந்திவிளையாடுவதினால், அனந்தலாம் நீர் ததும்பலிலும், சுழலிலும் சிக்குண்டு கைகால்கள் உயர்ந்து உதவியற்று வீணே மடிவதற்கேதுவாகும். ஆதலின் அனந்தலாம் வெள்ளப் போக்கில் விளையாடலாகாதென்பது கருத்து.

அனந்தனென்பதின் பொருள் சிவன், மால், மிக்கோன், நிராயுதன், அருகனென்றுங் கூறத்தகும்.

அனந்த மென்பதின் பொருள் மிகுதி, சேடமெனக் கூறத்தகும். அனந்தலென்பதன் பொருள் நீர் ததும்பிய வெள்ளப்போக்கென்று கூறத்தகும்.

பாலிபாஷையில் அனந்தலென்னும் மொழிக்கு வெள்ளம், பேரலை, நீர்வேகமெனப் பொருளளித்திருக்கின்றார்கள்.

திரிபிடகம், திரிக்குறள், திரிமந்திரம், திரிகடுகம், திரிவாசகம் முதலிய நூற்களில் பாலிமொழிகளே மிக்க மலிவுள்ளது கொண்டு, அனந்தலென்னும் மொழிக்கு வெள்ளமென்னும் பொருளை விவரித்துள்ளோம்.

அனந்தல் என்பதற்கு நித்திறை என்னும் பொருள் கூறுவாராயின், அனந்தலாடேலென்னும் வாக்கியத்திற்கு நித்திறை வாடாதே என்னும் பொருளைத் தரும் அங்ஙனமின்றி அதி நித்திறை செய்யாதே, கொஞ்ச நித்திறை செய்யென்னும் பொருள் மொழிக்கு முற்றும் பேதமேயாகும்.

32. கடிவதுமற

கடிவது - ஒருவரைக் கொடுமொழியால் கடிந்து பேசும் வார்த்தையை, மற - நீ எக்காலும் பேசாதே என்பதாம்.

முகம் கடுகடுத்தும் வாக்கால் சிடுசிடுத்தும் பேசுவதானால் தனது மனைவிமக்களுக்கு வெறுப்புண்டாவதன்றி, குடும்பத்துவேஷியென்னும் பெயர்பெற்று திருவென்னும் அருளும் அகலும் என்பது கருத்தாம்.

ஆதலின் ஒருவரைக் கடிந்து பேசவேண்டிய காலம் நேரினும் அவ்வாக்கை மிருதுவாகவும் நியாயவாயலிலும் உபயோகிப்பதாயின் மாநுஷீக தருமத்தையும் அதன் சிறப்பையும் விளக்கும்.

அறப்பளீசுரசதகம்

மெய்யொன்றிலாமலே பொய்ப்பேசியேதிரியு மிக்கபாதகரிடத்தும்
கதியொன்று மிலர்போல மெலினங்கொளும் பழய கந்தை யணிவோரிடத்தும்
கடிநர்யெனச்சீறி யெவரையுஞ்சேர்க்காத கன்னிவாழ் மனையகத்தும்
ததிவார்த்தையின்றி மிகு கடிவார்த்தைகொண்டுலவு தண்மெய்றோ ரிடத்துஞ்
சாம்பிண முகத்திலுஞ் சோம்பியப்பீடைமு தேவிவர் ழிடமென்பர்காண்
அதிரூப மலைமங்கை நேயனே யெழைதொழு மழகனெம் தருமமெய்மதவேள்
அநுதினமு மனதிநினை தருசதுர கிரிவள ரறப்பளீசுர தேவனே.

நீதிவெண்பா

மென்மதுரவாக்கால் விரும்புஞ் சகங்கடின
வன்மொழியினாலிகழு மண்ணுலகு - நன்மெசே
ரோதுகுயி லேதங் குதவியது கந்தபந்தா (தெளிவில்லை)

33. காப்பது விரதம்

காப்பது - உனக்குள்ள நல்லொழுக்கங்களை நிலைக்கச் செய்தல், விரதம் - உடற்காப்பேயாம்.

அதாவது ஒவ்வோர் மனிதனும் உலகத்தில் சுகமாக வாழ்கவேண்டுமாயின் தேகக்காப்பு, வாக்குக் காப்பு, மனோகாப்பென்னும் தன் தேகத்தால் மற்றய சீவராசிகளுக்குத் துன்பஞ் செய்யாமல் காப்பதும், தன் வாக்கினால் மற்றோரை மனநோகப் பேசுதலும், தீங்குண்டு செய்தலுமாகிய சொற்களைச் சொல்லாது காப்பது, தன் மனதில் மற்றவர்களுக்குத் தீங்கு விளையக்கூடிய எண்ணங்களை எண்ணாமலும். உள்ளத்தில் கபடு சூது வஞ்சினமிவைகளை அணுக விடாமலும் காப்பதும் விரதமென்னப்படும்.