பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 39

வஞ்சகபோதத்தை அறியா பேதைமாக்கள் சாந்ததேவியின் சுத்தசீல மெய்யறத்தை மறந்து தாங்கள் செய்யுந் துற்கன்ம தீங்குகட்காய்த் தோன்றுந் தீவினைகளைத் தீர்க்க ஆடுகளையும் கோழிகளையும் அறுத்து தங்கள் கிராமங்களைப் பாழடையச் செய்வதுடன் தாங்களும் பாழடைந்து போகின்றார்கள்.

இவ்வகைப் பாழுக்கெல்லாம் பராய சாதியோர்களே காரணமாயிருந்து செய்ததுமல்லாமல் சோழனுடைய நாட்டில் செத்த மாடுகளைத் தின்னும்படிச் செய்தும் வதைத்திருக்கின்றார்கள்.

ஞானவெட்டி

இந்தவிதமென்றறியாருலகினி / லெந்தன் குலத்தையிகழ்ச்சிகள் பேசினார்
வந்தவிதி யென்றறியாத மாந்தர்கள் / மாலப்பறையனென்றே சோழனூரினில்
மாடுகள் செத்து மடிந்ததை கண்டவ / ரோலமென்றேயதை யுண்ணும்படிச் செய்தார்
பாடு பட்டுப்பலன் காணா தழியுமிப் / பாவிகளெங்கள் பரநிலை காண்கிலர். (சாதியை )

தங்கள் தீவினையை மாற்றிக்கொள்ளுவதற்கு ஆடுகளையும் கோழிகளையும் பலிகொடுப்பதினால் முன்செய்த தீவினையுடன் சீவர்களைக் கொல்லுந் தீவினையுங்கூடி குடிகெடுக்குமென்று விவேகமிகுத்தோரால் கூறியுள்ள சிலேடைப்பா.

பெருந்திரட்டு

உங்கள் மக்களும் நீங்களும் நோய்பட / எங்கள் மக்களும் யாங்களுமென் செய்தோம்
உங்கள் தீவினை யோடு முதலிடாய் / எங்கள் தீவினை யேற்பது திண்ணமே.

- 1:16; அக்டோபர் 2, 1907 –

மனிதர்களையும் மாடுகளையும் குதிரைகளையும் சுட்டுத்தின்றுச் சோம்பேரிகளாய்த் திரிந்த மிலேச்சர்கள் மேன்மக்களாயதும் ஒழுக்கஞ், சீலம், ஞானம், விடாமுயற்சி, கருணை, யீகை முதலிய நற்குணமிகுத்த விவேகிகள் கீழ்மக்களாயதுங் காரணம் விசாரிணைக் குறைவேயாம்.

ஆடிமாத ஆதிவாரப் பௌர்ணமியில் சிந்திக்கும் ஔவையார் இயற்றியுள்ளத் திரிவாசகமாகும் நீதி நூலில் புலையுங்கொலையுங் களவுந்தவி ரென்று கூறியிருக்க அவ்வம்மையை சிந்திக்கும் நாம் ஆடுமாடுகளை அவளுக்கு பலிகொடுத்தால் ஏற்பளோ, ஒருக்காலும் ஏற்காள்.

பௌத்தமார்க்க சுத்தசீலர்களின் குலதேவதையாக விளங்கிய சாந்த தேவிக்கு புட்பார்ச்சனையை விடுத்து உயிர்வதையாகும் பலி கொடுப்பதினால் அம்மன் நிருவாண காலத்தில் கொடுத்திருந்த வாக்கும் மயங்கி கிராமங்களுஞ் சீர்குலைந்து உள்ளக் குடிகளும் நாளுக்குநாள் பாழடைந்து வருகின்றார்கள்.

மணிமேகலை

சிந்தாதேவி செழுங்கலை நியமத்து / நந்தா விளக்கே நாமிசைபாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி / யேனோ ருற்ற விடர்களை வாயெனத்
தான்றொழுதேத்தித் தலைவியை வணங்கி.

இவ்வகைத் தொழுகையில் சற்குருவையும், அம்மனையும் சீலத்தொழுகையால் சிந்திக்குந்தோறும் புட்பங்களைக்கொண்டே அர்ச்சித்து வந்தார்கள்.

மணிமேகலை

விரைமல ரேந்தி விசும்போடிழுந்து / பொருவறு பூங்கொடி பூமியிற்பொலிந்தென
வந்து தோன்றிய மணிமேகலாதெய்வ / முந்தை பிறப்பெய்தி நின்றோள் கேட்ப.

சீவக சிந்தாமணி

தண்ணந்தீம்புன லாடி யதண் மலர் / வண்ணவார் தளிர்ப் பிண்டி யினானடிக்
கெண்ணியாயிர மேந்து பொற்றா மறை / வண்ணமா மல ரேற்றிவணங்கினாள்.

சற்குருநாதனையும், ஔவையையும் தாமரை புட்பத்தைக்கொண்டு அர்ச்சித்துவந்தபடியால் மடங்களைச்சார்ந்தக் குளங்களில் எல்லாம் தாமரை புட்பத்தையே விசேஷமாக விளைவு செய்து வந்தார்கள்.

புத்ததன்மத்தினின்று ஔவையைப்போல் ஓடேந்தி மடத்திற் சேர்ந்து பிட்சுணி நிலை அடைந்த மாதவியின் மகள் மணிமேகலை என்பவள் நிருவாணதிசை அடைந்தபின் சாந்ததேவிகளில் ஒருவளாக விளங்கியபோது கம்பன் மகன் அம்பிகாபதி என்பவன் மணிமேகலை யை சிந்தித்த பாடல்.