பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 481

வேண்டிய காரணம் யாதெனில் தனக்குள் தோன்றுங் கெடு எண்ணத்தின் விரிவே தன்னுள்ளத்திற் கொதிப்பேற்றி சுடுவதுடன், தன்னை அறியாமலே வாழைப்பழத்தில் ஊசி நுழைவதுபோல் நுழைந்து கெடுத்துவிடும். தன் சுகத்தை நாடுகிறவன் தனக்குள் தோன்றுங் கெடு எண்ணத்தினரிவே தன்னுள்ளத்தில் (சிலவரிகள் தெளிவில்லை) எதிரியின் சுகத்தையும் கோறல் வேண்டும். அங்ஙனமின்றி தன் சுகத்தை நாடி எதிரியின் சுகத்தைக் கெடுப்பதாயின் அக்கேட்டின் பலனே தனக்குங்கேட்டையுண்டு செய்யுமாதலின் கெடுப்பதொழி யென்னும் வாசகத்தை சுருக்கி கூறியுள்ளான். (பாடல்கள் தெளிவில்லை)

39. கேள்விமுயல்

கேள்வி - உனது செவிகளால் அறநெறி வாக்கியங்களைக் கேட்பதற்கு,

முயல் - முயற்சியிலிருமென்பதாம்.

பூர்வம் வரிவடிவாம் அட்சரங்கள் இல்லாத காலத்தில் புத்தபிரானால் போதித்த திரிபேத வாக்கியங்களென்னும் திரிபீடமாம், சப்பரபஸ்ஸ அகரணம், குஸலஸ வுபசம்பதா, சசித்தபரியோதபனம், எனும் பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்திசெய்யுங்கோள் என்னும் மூன்று பேதவாக்கியங்களையே ஒருவர் சொல்லவும் மற்றவர்கள் கேட்கவுமாயிருந்தபடியால் சுருதியென்று வழங்கிவந்தார்கள்.

இத்தகைய நீதிநெறிகளமைந்த சுருதிமொழிகளைக் கேட்டலும், அதின் அந்தரார்த்தங்களை சிந்தித்தலும், தான் சிந்தித்துணர்ந்தவற்றால் தெளிதலும், அத்தெளிவால் துக்கநிவர்த்தியடைதலுங்கொண்டு, வரிவடிவ அட்சரங்களுள்ள சகடபாஷையாம் சமஸ்கிருதமும், திராவிடபாஷையாந் தமிழும், புத்தபிரானால் இயற்றி அவர் போதித்துள்ள நீதிநெறிகள் யாவும் அட்சரவடிவிற் பதிந்துள்ள போதினும் செவிச்செல்வமாங் காதுகளினாற் கேட்டுணர்வதே தெளிவாதலின் ஞானத்தாயுங் கேள்விமுயல் என்று கூறியுள்ளாள்.

இவற்றை அநுசரித்தே நாயனாரும் தனது திரிக்குறளில் செவியால் கேட்டுணராத மக்கள் உலகில் இருந்தென்ன போயென்ன என்னும் பயனற்ற உலகின் நிலையை ஊட்டியுள்ளார்:

செவியிற்சுவையுணரா வாயுணர்வின் மாக்க
ளவியினும் வாழினு மென்.

இத்தகையக் கேள்வியில் புத்தாகமங்களை உணராதோரும், ஞான போதங்களைக் கேட்காதோரும், வினையின் பயன்களை உணராதோரும், சொல்லும்படியான போதகங்கள் யாவும் குருடனுக்குக் குருடன் வழிகாட்டுவன ஆதலின் தங்கள் வயிற்று சீவனத்திற்காயப் பொய்யைச் சொல்லித் திரிவோர் போதனைகளைச் செவிகளிற் கேளாது மெய்க்குருக்கள் போதகங்களை செவியாறக் கேட்டுத் தெளிவதே கேள்வியாம்.

பழமொழி விளக்கம்

அருண்மிகுத்த வாகமநூல் படித்தறியார் / கேள்வியொன்று மறியார் பின்னும்
இருவினையின் பயனறியார் குருக்களென்றே / யுபதேசம் எவர்க்குஞ் செய்வார்
வரமிகுத்த தண்டலைநீ நெறியாரே / யவர்க்கிரியை மார்க்கமெல்லாங்

பொருள் சம்பாதிக்கும் உபாயத்தைக் கருதிபொய்சொல்லி வஞ்சிக்கும் அஞ்ஞான குருக்களின் கேள்வியில் முயலாமல் பொருளாசையற்று கண்டிப்பான நீதிநெறிகளைப் புகட்டும் மெய்ஞ்ஞான குருக்களின் கேள்வியில் முயலவேண்டுமென்பது கருத்தாம்.

40. கைவினைகரவேல்

கைவினை - உனது கைத்தொழிலாஞ் செயலை, கரவேல் - கைசோர்ந்து பின்னிடையச் செய்யாதே என்பதாம்.

அதாவது - கைவினையாம் செய் தொழிலில் மேலும் மேலும் அறிவினை விருத்திசெய்து முன்செய்யும் பொருளினும் பின்செய்யும் பொருட்கள் சிறப்புக்குன்ற தோற்றுமாயின் அப்பொருள் நாளுக்குநாள் சிறப்புக் குன்றுவதுமன்றி செய்தொழிலால் கைவினையுங் கரந்து பாழடைந்துபோம்.