பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 485

அதாவது தான் வேறுதொழில் யாதுமின்றி மற்றொருவன் பொருளை வஞ்சக விளையாட்டையாடி பறிப்பதும், சூதென்னும் ஓர் தொழிலையே நெஞ்சிற் குடிகொளச்செய்வதுமாகிய அத்தீயவிளையாட்டையே மிக்க விரும்பி தானுங்கெடுவதுடன் மற்றவர்களையுங் கெடுத்து பாழ்படுத்துகிறபடியால் வஞ்சித்துக் கெடுக்கும் சூதை விரும்பேலென்பது கருத்தாம்.

காக்கைபாடியம்

கோதுட்டுளமே குலநல மழிக்கும் / வாதிட்டார்ப்ப வாழ்க்கையுங் குன்றும்
சூதுற்றாடல் சூழ்கிளை யழிக்கும் / போதித்தானப் பொக்கிடம்போற்றீர்.

49. செய்வன திருந்தச்செய்

செய்வன - நீ செய்ய வேண்டிய காரியங்களை, திருந்த - சீர்பெற, அதாவது தானெடுத்து முடிக்கவேண்டிய காரியாதிகள் யாவும் சகலருக்கும் உபயோகமாகக்கூடியதாகவும் சகலருங் கொண்டாடுவதாகவுமிருத்தல்வேண்டும்.

அங்ஙனமின்றி எடுத்தகாரியத்தை திருந்த முடிக்காது குறைந்தழியுமாயின் தனக்கு அதிகக் கஷ்டமுண்டாவதுடன் பொருளும் நஷ்டமுண்டாகிக் கெடும். ஆதலின் எத்தகைய காரியங்களைச் செய்ய முயன்றபோதினும் அவற்றைத் திருந்தச் செய்வதே அழகாகும்.

குமரேசசதகம் - செய்யத்தகாதவை

தானாசரித்துவரு தெய்வமிதுவென்று பொய் சத்தியஞ் செயில்
விடாது
தன்வீட்டி லேற்றிய விளக்கென்று முத்தந்தனைக்கொடுத்தா லது சுடும்
ஆனாலு மேலவர் மெத்தவுந் தனதென்றடாதுசெய்யிற் கெடுதியாம் யானைதான் மெத்தப் பழக்கமானாலுஞ் செய்யாதுசெய்தால்கொன்றிடும்
தீனானதினிதென்று மீதூண் விரும்பினாற்றேக பீடைகளே
தரும்
ஜகராஜ ரென்னினு மேலாத காரியஞ் செய்தான் மனம்பொறார்காண்
வாணாடு புகழுமொரு சோணாடழைக்கவே வந்தவதரித்த முதலே
மயிலேறிவிளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே.

செய்யத்தகுவனவை இன்னதென்றும், தகாதனவை இன்னதென்றும் விவேகமிகுத்த மேன்மக்களால் வகுத்துள்ளபடியால் ஒவ்வொருவரும் தாங்கள் செய்யவேண்டிய காரியங்களை முன்பின் யோசித்துத் திருந்தச் செய்யவேண்டு மென்பதேயாம்.

50. சேரிடமறிந்துசேர்

இடமறிந்து - இஃது நல்லோரிடமா, அன்று பொல்லாரிடமா வென்றறிந்து,

சேர் - கூடி வாழக்கடவாய் என்பதாம்.

தீயரென்றும், நியாயரென்றும், நல்லோரென்றும், பொல்லாரென்றும் வழங்கும்படியானக் கூட்டத்தோரைக் கண்டாராய்ந்து நல்லோருடன் சேர்தலே நன்மக்களென்பதற்கு ஆதாரமாதலின் தீயோர்களையும், பொய்யர்களையும், வஞ்சகர்களையும், குடிகெடுப்போரையும், பொறாமெயுள்ளோரையும் அடுக்காது,

நியாயர்களையும், அன்பு மிகுத்தோரையும், தன்னவர் அன்னியரென்னும் பேதமற்ற மேன்மக்களையும், ஈகை மிகுத்த தாதாக்களையும், அடுத்து வாழ வேண்டியதே விவேகமிகுக்கக் கோறுவோர் குணமாதலின் சேரிடமறிந்துச் சேரவேண்டியதே சிறப்பாகும்.

நீதிவெண்பா

நிந்தையிலா தூயவரும் நிந்தையரைச்சேரிலவர்ய / நிந்தையது தம்மிடத்தே நிற்குமே- நிந்தைமிகு
தாலநிழற் கீழிருந்தான் றன்பாலருந்திடினும் / பாலதனைச் சொல்லுவரோ பார்.

மக்களை ஒத்த ரூபமுற்றோராயினும் மிருகத்திற்கொற்ற செயல் மிகுத்தோர் மிக்கோராதலின் நல்லோரைக் கண்டிணங்கவேண்டியதும், பொல்லாரைக் கண்டோடவேண்டியதும் புதைப்பொருளாகும்.

நீதிவெண்பா

கொம்புளதற்கைந்து குதிரைக்குப்பத்து முழம் / வெம்பு கரிக்காயிரந்தான் வேண்டுமே-வம்புசெரி
தீங்கிளர்தன் கண்ணிற் றெரியாத தூரத்து / நீங்குவதே நல்லநெறி.