பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486 / அயோத்திதாசர் சிந்தனைகள்

51. சையெனத் திரியேல்

சையென - கியானியென்று உன்னை மெச்சும்படியான வேஷம் பூண்டு, திரியேல் - நீயுலாவாதே என்பதாம்.

பாலி பாஷையில் ஸை என்னு மொழிக்கு ஞானமென்றும், ஸைலமென்னு மொழிக்கு ஞானக்குன்றென்றும், ஸைவமென்னு மொழிக்குத் தன்னை அறிதலென்றும், ஸையோகமென்னு மொழிக்கு ஞானபாக்கியம் அல்லது கியானவதிர்ஷ்டமென்றுங் கூறியுள்ளபடியால் (ஸை) யெனக்கூறும் ஞானவான் போலும், மெளனி போலும் வேஷமிட்டுக் கொண்டு மற்றவர்களை வஞ்சித்தும், பொருள் பரித்து, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையற்றவர்போல் நடித்து மூவாசையும் முற்றப்பெருக்கி ஞானியெனத் திரிதல் யதார்த்த ஞானிகளை இழிவுபடுத்துவதற் கேதுவாகத் தோற்றலால் ஸை யெனத் திரியேலென்று சத்திய நிலையை விளக்கியுள்ளாள்.

மேருமந்திர புராணம்

யீற்றிலாராதனை விதியிலேந்தறா / னாற்றலுக்கேற்றவா றன்னபானமும்
சாற்றியவகையினாற் சுருக்கிச் சையமே / லேற்றினான்றன்னைநின்றிலங்குஞ்சிந்தையான்
சித்தமெய் மொழிகளிற் செரிந்துயிர்க் கெலா / மித்திரனாய பின் வேதனாதியி
லொத்தெழு மனத்தனா யுவகையுள்ளுலாயத் / தத்துவத் தினாற் றனுவைவாட்டினான்.

52. சொற் சோர்வுபடேல்

சொல் - ஒருவருக்குச் சொல்லிய வுருதிவாக்கியத்தில், சோர்வு - தவறுதல் வுண்டாகும்படி, படேல் - செய்துக்கொள்ளாதே.

ஒருவருக்குப் பொருளளிப்பேன் வாவென்று கூறியும், அன்னமளிப்பேன் வாவென்று கூறியும், அவன் வந்த பின்பு சொல்லிய சொல் தவருமாயின் மிக்க அவாவால் நாடிவந்தவன் மனதுகுன்றி நாணடைந்து போவான். அவ்வகையா லவன் மனம்குன்றிப் போவதினாலும் அவனுக்குக் கொடுப்பேனென்று சொல்லியவாக்கைச் சொல்லாமலிருப்பது அழகாகும். ஒருவனுக்கு அவா மிக்கச் சொல்லி அச்சொல் சோர்வுபடுமாயின் அதனினும் வாய்ப்பொய் வேறில்லை யெனவுணர்ந்த ஞானத்தாய் தேகசோர்வினும் சொற்சோர்வுபடேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

53. சோம்பித் திரியேல்

சோம்பி - ஒரு தொழிலுஞ் செய்வதற் கியலாதவனாய், திரியேல் - உலாவாதே என்பதாம்.

அதாவது ஓர்தொழிலுக்கு உதவாதவனாகவும், ஓர் வித்தைக்கு உதவாதவனாகவும் சோம்பேறி திரிவானாயின் விவேகிகள் அவனை சீவ அசீவ மிரண்டினுங் கடையாக மதிப்பர்.

மாடு, குதிரை, கழுதையாயினும் சுமைசுமந்தும், வண்டியிழுத்தும், உழவு செய்தும் மக்களுக்கு உபகாரிகளாகும். மண்ணேனும் ஓர் பலனைக் கொடுக்கும், கல்லேனும் ஓர் கட்டிடத்திற்காகும். மரமேனும் நிழலைக் கொடுக்கும். இத்தகையப் பிரயோசனங்கள் யாதுமன்றி மனிதரூபியாய் உலாவுவானாயின், அவனை மனிதனில் மாடு, மனிதனில் கழுதை, மனிதனில் மண், மனிதனில் கல் என்று கூறலாமோ. அவ்வகைக் கூறுதற்கும் ஆதாரமில்லாதவனா யிருக்கின்றான். ஆதலின் சகலவற்றினுங் கடையனென்றே கழிக்கப்படுவதினும் ஓர் தொழிலைப் பற்றுவதே அழகெனக் கண்ட ஞானத்தாய் சோம்பித்திரியே லெனக் கூறியுள்ளாள்.

விவேகசிந்தாமணி

கருதிய நூல் கல்லாதான் கசடனாகும் / கணக்கறிந்து பேசாதான் மூடனாகும்
ஒருதொழிலு மில்லாதான் முகடியாகும் / வொன்றுக்கு முதவாதான் சோம்பனாகும்
பெரியோர்கண்முன்னின்றுமரத்தைப்போல / பேசாம லிருப்பவனே பேயனாகும்
பரிவுசொல்லி தழுவுபவன் பசப்பனாகும் / பசிப்பவருக் கிட்டுண்ணான் பாவியாமே.

54. தக்கோனெனத்திரு

தக்கோன் - எடுக்குங்காரியங்களை முடிக்கத்தக்கவன், என - சொல்லும்படியாக, இரு - நீ வீற்றிருக்கக்கடவா யென்பதாம்.