பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 / அயோத்திதாசர் சிந்தனைகள்

காதன் மடந்தையர் கையறுங்கலையு மெய்யகலா
மேதகு நாணு மெலியவன்றோ விழிபோலு நெய்தற்லா
போதவிழ் மென் மலர்ப் புன்னையங்கானல் பொருந்துமிந்த
மாதவிபெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே.

புத்ததன்மத்தைச் சார்ந்து துறவடைந்து நிருவாணதிசையடைந்த ஆண்மக்களை தேவர்கள் என்றும் பெண்மக்களை தேவிகள் என்றும் கொண்டாடிவந்தார்கள்.

சிலப்பதிகாரம்

போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதானம் புரிந்த
மாதவிதன்றுறவுங் கேட்டாயோ தோழி
மணிமேகலைதுறவுங் கேட்டாயோ தோழி.

கோவிலன் மனைவி கன்னகை என்பவளுக்குண்டான கோபாவேஷத்தை அடக்குதற்கு ஆயிரங் கொல்லரை பலிகொடுத்துவிட்டு மதுரையில் கண்ணகி பீடம் அமைத்து மனிதர் பலிக்கு பதிலாக ஆடு மாடு கோழி முதலியவைகளை பலி கொடுத்து வந்தார்கள்.

சீவக சிந்தாமணி

ஊன்சுவைத்துடம்புவீக்கி நரகத்தி லுரைதனன்றோ .
யூன்றுனா துடம்புவாட்டி தேவராயுரைதனன்

சிலப்பதிகாரம்

கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் / பொற்றொழிற் கொல்ல ரீரைஞ் நூற்றுவ
ரொருமுலை குறைத்த திருமாபத்தினிக் / கொருபகலெல்லை யுயிர்பலியூட்டி
யுரை செல வெறுத்த மதுரை முதூர்.

கிராமதேவதையாய் இருந்து ஊர்க்குடிகளைக் காப்பாற்றும் வாக்களித்தவள், கன்னகை அன்று.

கிராமதேவதையாகவும், குலதேவதையாகவும், ஊர்க்காவற்காரியாகவும், காவலூர் அம்மனாகவும், இருப்பதாய் வாக்களித்து ஊழியாற்றோன்றுங் கொடுமாறியை அகற்றி ஆரோக்கியம் பெறச் செய்தவள் அம்பிகை என்னும் அவ்வையாதலின் அவளை சிந்திப்பவர்கள் சுத்தசீலத்தினின்று பொய், கொலை, களவு, கள்ளருந்தல், காம முதலிய பஞ்சபாதகங்களை அகற்றி தன்மசிந்தையைப் பெருக்கி சிந்திப்பதே சிந்தனையாகும்.

சாந்ததேவதையை சாந்தசீலத்தால் சிந்திப்போமானால் நமது கிராமங்கள் சிறப்படைவது இன்றி நாமும் சுகவாழ்க்கை அடையலாம்.

இதுவே சத்தியம். - 1:17; அக்டோபர் 9, 1907 –

6. மாளிய அமாவாசை என்னும் மாவலி அமாவாசி தன்ம விவரம்

ஆயிரத்தி இருநூறு வருடங்களுக்கு முன் தற்காலம் மாபலிபுறமென வழங்கும் பதியில் வீற்றிருந்த தென்பரதகண்ட முழுவதும் ஏகசக்கிராதிபதியாக ஆண்டுவந்த மாபலிச்சக்கிரவர்த்தி என்பவர் புத்ததன்ம சங்கம் என்னும் திரிரத்தினங்களைச் சிரமேற்கொண்டு தன் ஆளுகைக்கு உட்பட்ட தேசம் எங்கும் தன்ம சங்கங்களை நாட்டி நீதிகளையும், நெறிகளையும், வாய்மெகளையும், நிலைக்கச்செய்து குடிகள் யாவரையுஞ் சுத்தசீலத்தில் வைத்திருந்து தானுஞ் சங்கத்திற் சேர்ந்து சுத்தசாதனந் தழுவி புரட்டாசி மாத அமாவாசியிற் பூரணம் என்னும் நிருவாணதிசை அடைந்தார். இத்தென் பரத முழுமையுஞ் சங்கங்களை நாட்டி தன்மத்தைப் பரவச்செய்தப் பேறுபகாரத்தால் அனந்த மக்கள் ஹர அத்து நிலையுற்று நிருவாணதிசை அடைந்தபடியால் தென்பரதத்திலுள்ள சகல மக்களுக்கும் முக்த்திவழிக்கு முதன்மெயானவர் மாவலிச் சக்கிரவர்த்தியாதலின் அவர்நிருவணாதிசை அடைந்த புரட்டாசிமாதம் அமாவாசியில் சகலரும் ஏழைகளுக்கு தானஞ்செய்து தாங்களும் புத்ததன்மத்தைப் பரவச்செய்து வந்தார்கள்.