பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

490 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அசாரஞ்செய்யாராகி லறிவொடு புகழுமற்று
பேசார்போற் பேச்சுமாகி பிணியொடு நரகில் வீழ்வார்.

இவற்றுள் மெய்த்தேவர்களென்றும், பொய்த்தேவர்களென்றும் இருவகை பேதமுண்டு. அவர்களுள், மக்களென சீலமிகுத்து ஒழுக்கத்தினின்று விவேகமிகுத்தோர்களை சருவ மக்களுந் தேவர்களென்று கொண்டாடி வருவதியல்பாகும் இவர்களே மெய்த் தேவர்களாவர்.

பொய்வேதப் புலம்பலாலும், பொய்ப்புராணக் கட்டுக்கதைகளாலும், ஆகாயத்தினின்று பூமியில் வந்து தோன்றினாரென்னும் பொய்த்தேவக்கதைகளையும் ஆகாயத்திலிருந்த தேவர் பெண் வயிற்றிற் பிறந்தாரென்னும், பொய்தேவக் கதைகளையும், அவனைக்கொல்ல அவதரித்தான், இவனைக் கொல்ல அவதரித்தானென்னும் பொய்தேவர்களையும், அந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தான், இந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தா னென்னும் பொய் தேவர்களையும், விசாரணைப் புருஷர் இழிவு கூறுவதில் ஓரிடுக்கணுமில்லை, புகழ்ச்சி செய்வதால் ஓர் பிரயோசனமுமில்லை.

மக்களினின்று தேவரெனத் தோன்றியவர்கள் பிறப்பிறப்பற்று மறுபடியுங் கருவில்வந்து தோன்றார்களென்பது சாத்தியமாம்.

சீவகசிந்தாமணி - தேவர்கள் லட்சணம்

திருவிற் பொற்குலத்திற் றேர்ந்த தேவர்தன் தண்மெய் செப்பிற்
கருவற்று சென்று தோன்றார் கானிலந் தோய்தல் செல்லா
ருருவமே லெழு தலாகா வொளியுமிழ்ந் திலகுமேனி
பருதியி னியன்றதொக்கும் பன்மலர் கண்ணிவாடா.

பொய்க்குருக்களின் கற்பனா வேதங்களிலும் புராணங்களிலும் வரைந்துள்ள பொய்த் தேவர்கள் கதைகளிலும், அவர்கள் நம்பிக்கைகளையும் ஒழித்து மெய்த் தேவர்களும், எக்காலுந் தோற்றக்கூடிய ஏழாவது தோற்ற முடையவர்களுமாகிய மகா ஞானிகளை இகழலாகா தென்னும் பெரு நோக்கங் கொண்டு தெய்வமிகழேலென்னுந் தெளிவுபடக் கூறியுள்ளாள்.

சொரூபசாரம்

எங்கும் பொதுவா யிருக்குமொரு சீவன்முத்தர் / தங்கு மிடந்தானே தலவாச-மங்கவர்கள்
பார்வையே தீர்த்தமவர் பாதார விந்தமலர்ச் / சேவையே சாயுச்சியம்.

61. தேசத்தோடொத்துவாழ்

தேசத்தோடு - தேசத்துள்ளோர் சீலத்துடனும் ஒழுக்கத்துடனும், ஒத்து - மனமுவந்து, வாழ் - நீவாழக் கடவாய் என்பதாம்.

அதாவது, தேகத்துடன், ஒத்துவாழ்தலும் தேசத்துடன் ஒத்துவாழ்தலும், ஒரு பொருளைத் தரும். தேகத்துடன் ஒத்துவாழ்தலாவது மிகு புசிப்பால் மந்தவேதனையுண்டு, மிகு போகத்தால் தாதுகெட்டு நஞ்சடைதலுண்டு, மிகு அவாவால் பெருந்துக்கமுண்டு, இவற்றை நிதானித்து மிதபுசிப்பு, மித போகம், மித அவாவினின்று வாழ்தலே தேகத்தோ டொத்துவாழ்த லென்னப்படும்.

அவைபோல், தேசத்தோருக்குள்ள பொய்யாவிரத சீலத்திலும், கொல்லாவிரத சீலத்திலும் களவாவிரத சீலத்திலும் காமமிகா விரத சீலத்திலும், மதுவால் மயங்காவிரத சீலத்திலும் ஒத்து வாழ்க வேண்டுமென்பது கருத்தாம்.

இத்தகைய பஞ்சசீலத்தோருடன் ஒத்து வாழாது பஞ்சபாதகச் செயலாம் சீலங்கெட்டு ஒத்து வாழ்வானாயின் சீலமிகுத்தோர் யாவரும் சீ சீ என்றிகழ்ந்து சேரவிடாது அகற்றுவார்கள்.

அத்தகைய வாழ்க்கைத் துணையற்று வாழ்வதினும் மடிவது மேலாம்.

இத்தகைய சீலத்தோருடன் ஒத்துவாழ்க வேண்டுமென்பது அம்மன் கருத்தேயன்றி நீதிநெறி கெட்டு அவன் பெரிய சாதி, இவன் சிறிய சாதியென்போருடனும் அவன் சாமி பெரியசாமி, இவன் சாமி சின்ன சாமியென்போருடனும் ஒத்துவாழ்க வேண்டுமென்னுங் கருத்தன்று. நீதியும் நெறியுமற்ற தேசம் ஒருகாலும் சீரும், சிறப்புமடையப் போகிறதில்லை . ஆதலின் சீலமாம் நீதிநெறியமைந்த தேசத்தோருடன் ஒத்து வாழ்க வேண்டுமென்பது துணிபு.