பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 491

பழமொழி விளக்கம்

தேரோடு மணிவீதி தண்டலையார்த்திருவமைந்த தேசமெல்லாம்
பேரோடும் புகழ்படைத்த வீராதிவீரனெனும் பெரியோனேனும்
நேரோடும் உலகத்தோ டொன்றுபட்டு நடப்பதுவே நீதியாகும்
ஊரோடு வுடனோடி நாடோட நடுவோடலுறுதிதானே.

நீதிநெறியாம் நேர்வழியில் ஊரோட வுடனோடலும், நாடோடநடுவோடலும் சுகநிலையுறுதி தருவதாகும்.

62. தையல் சொற்கேளேல்

தையல் - கொடூரமாம், சொல் - வார்த்தைகளை, கேளேல் - செவி கொடாதே என்பதாம்.

எதிரியால் உன்னைத் தைக்கக்கூறு மொழிக்கு, செவி கொடுப்பாயாயின் கோபமீண்டு அவனுடன் போர்செய்ய நேரும். அதனால் துக்கம் பெருகும். ஆதலின் எதிரி தையல் சொற்களுக்கு செவி கொடாதிருக்க வேண்டுமென்பது கருத்து.

அதாவது, குத்திக்குற்றி யிழுக்குங் கொடூரச் செயலுக்குத் தைத்தலென்றும், பனியின் கொடூரத்தால் இலையுதிரும் மாதத்திற்குத் தைமாதமென்றும்; கொடூர நெய் கலந்த வஸ்துக்களுக்குத் தைலமென்றும், புண்பட யிதயத்தில் தைக்கக்கூறும் கொடூர வார்த்தைக்குத் தையல் மொழியென்றுங் கூறப்படும்.

அன்னியனாற் புண்படக்கூறுந் தையல் மொழியாங் கொடூர வார்த்தையை செவியிற் கேட்டவுடன் கோபமீறும். அக்கோபத்தால் ஒருவருக்கொருவர் கைகலக்குந் தையலுண்டாம். அத்தையலால் துன்பம் பெருகிமாளா துக்கத்திற்கு ஆளாக்கிவிடும். ஆதலின் எதிரிகளாற் கூறுங்கொடூர சொற்களை கேளாதிருப்பதே சுகமென்றறிந்த ஞானத்தாய் தையல் சொற்கேளேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

63. தொன்மெய்மறவேல்

தொன் - பூர்வ, மெய் - தேகிகளாம் பழமெயாங் குடும்பத்தோரை, மறவேல் - என்றும் மறவாதே என்பதாம்.

வாழையடி வாழைபோல் தொன்றுதொட்டு தோன்றிவரும் பழமெய் தங்கியக் குடும்பத்தோரை மறவாதிருக்க வேண்டுமென்பது கருத்து.

தொன்றுதொட்டு வழங்கிவரும் பூர்வ குடும்பத்தோரை மறவாமலிருப்பதினா லுண்டாகும் விருத்தியும், மறப்பதினா லுண்டாகுங் கேடும் யாதென்பீரேல்:–

தொன்மெய் மறவாச் செயலால் குடும்பம் விருத்திடைந்து அவர்களுக்குள் விவேக விருத்தியடைந்தோர் சார்பால் முன் குடும்பத்தோர் சுகவிருத்தியும், ஞானமும் பெறுவதுடன் பின்குடும்பத்தோரும் விருத்தியினின்று சுகவாழ்க்கைப் பெறுவார்கள்.

தொன்மெயாம் பூர்வ சுற்றத்தோரை மறந்து பற்றற்றவரைப்போல் நடித்தல் முன் குடும்பத்தோர் தோற்றமும், சேர்க்கையும் மறைந்துபோவதுடன் பின் சந்ததிகளும் விருத்தியின்றி பாழடைந்துபோம்.

திரிக்குறள்

பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கமெற்றெற்றன் / றேதம் பலவுந் தரும்.

64. தோற்பனை தொடரேல்

தோற்பனை - உன்னால் முறியடிக்கப்பட்டோனை, தொடரேல் - பின்பற்றிச்செல்லாதே யென்பதாம்.

வில்லால் தோற்றவனுக்கும், வித்தையால்தோற்றவனுக்கும் உள்ள விரோதம் எதிரியை யெவ்வகையேனும் ஜெயிக்குமளவும் உள்ளனவாதலின் அத்தகைய தோற்பனைத் தொடர்ந்து செல்லுவதினால் எத்தகையுந் துன்பமுண்டாமென் றுணர்ந்த ஞானத்தாய் தோற்பனைத்தொடரேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

இவற்றுள் (தோற்பன தொடரே) லென்னும் பாடபேதமுமுண்டு. தோற்றவியாஜியத்தை தொடர்ந்தும் ஜெயித்ததனந்தமுண்டு. தோற்றயுத்தத்தை