பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492 / அயோத்திதாசர் சிந்தனைகள்

விடாமுயற்சியால் தொடுத்து ஜெயித்த யுத்தங்களும் அனந்தமுண்டு.

ஆதலின் தோற்பனைதொடரேலென்னும் வாசகமேயன்றி தோற்பன தொடரேலென்னும் வாசகமன்று.

ஓர் வியாஜியத்திலேனும், யுத்தத்திலேனும் வாக்குவாதத்திலேனும், சுபஜெயமடைந்தோனின் உள்ள வஞ்சினத்தையும் பொறாமெயையுமுணராது மித்துரு வென்றெண்ணி தோற்றவனைத் தொடர்வதாயின் கேடுண்டென்பது கருத்தாம்.

65. நன்மெய்க் கடைபிடி

நன் - நல்ல, மெய் - தேகி, நற்றேகி, நல்லவன் என உலகோர் சொல்லுஞ் செயலை, கடைபிடி - முடிவாய பாக்கியமென்று பற்று மென்பதாம்.

உலகத்தோரால் நல் அவன், நன்மார்க்கன், நற்குலத்தோன், நற்புத்திரன், என்று செல்லுவதற் கேதுவாம் நன்மெய்யைத் தோற்றிவைப்பான்வேண்டி நன்மெய்க்கடைபிடியென்று இரண்டாவது பேதவாக்கியத்தைக் கூறியுள்ளாள். அதாவது, பொய்சொல்லாமெய், பிறர்மனை நயவாமெய், களவு செய்யாமெய், கள்ளருந்தாமெய், கொலைசெய்யாமெய், ஆகிய சுத்ததேகிகளாக வாழ்தலே நன்மெய்க் கடைபிடித்தலென்று கூறத்தகும்.

நல்வாய்மெய், நல்லூக்கம், நற்காட்சியுடைய நன்மெயாம் சுத்ததேகியாக வாழ்தலே நிருவாணத்தின் சுருக்கபாதையுமாகும்.

66. நாடொப்பன செய்

நாட்டோர் - நஞ்சை புஞ்சை பூமியின் செயலுக்குரியோர், ஒப்ப - அவர்கள் சம்மதிக்கும்படியான செயலை, செய் - நீ செய்யக்கடவாய் என்பதாம்.

அதாவது நாடென்றும், நகரமென்றும் பிரித்துள்ள இருவகுப்பாருக்குள், நகரவாசிகள் யாவரும் அரசனது செங்கோலுக்குள் அடங்கிவாழ்தல்போல் நாட்டுவாசிகள் யாவரும் வேளாளத் தொழிலாம் ஏறடிக்குங்கோலுக்கு ஒப்பி வாழ்கவேண்டுமென்பது கருத்தாம்.

அஃது யாதென்பீரேல், பூமியை உழுதுண்போனாம் வேளாளனுக்கு ஏறும், மாடும் இல்லாவிடில் மற்றவனிடம் ஒப்பி உதவிபுரிதலும், நீர் வாய்க்காலின் ஒழுங்குகளை ஒருவன் பூமிக்குப் பாய்ந்தபின் மற்றவன் பூமிக்கு ஒப்பிப் பாயவிடுதலும் ஆகிய சருவ மேழிச்செயலையுங் கோழைப்படாது செய்தற்கு நாடொப்பச் செய்தலே நலமாகும்.

நாடொப்பாது ஒருவன் ஏறிக்கால் நீர் பாய்ச்சுமுன் மற்றொருவன் பாய்ச்சுதலும், ஒருவன் மேழிமுடியுமுன் மற்றொருவன் ஏறைப் பறித்தலுமாகிய ஒப்பாச்செயலைச் செய்தல் நாட்டுக்குக் கேட்டை விளைவிக்குஞ் செயலாதலின் உழவோராம், நாட்டோர் நாடொப்பனச் செயல் வேண்டுமென அம்மன் வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

67. நிலையிற் பிரியேல்

நிலையில் - கியானவிழிப்பினின்று, பிரியேல் - நீ நழுவாதே என்பதாம்.

அதாவது தோற்றும் பொருட்கள் யாவும் கெடுவது இயல்பாதலின் அத்தோற்ற நிலையிலும் அதன் அவா நிலையிலும் நில்லாது உண்மெய் உணருந் சுழிமுனை நிலையைப் பிரியேலென்பது கருத்தாம். குருவருளாற் காட்டிடுநிலையும் அந்நிலையேயாம்.

அகஸ்தியர்

விழித்து மிக பார்த்திடவே பொறிதான் வீசும் முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும்
சுழித்தியிலே போகாது வொருமனதாய் நின்றால் சுத்தமென்ற நாதவொலிக் காதிற்கேழ்க்கும்
இழுத்ததென்று நீகூடத்தொடர்ந்தாயானால் எண்ணெண்ணா பிறப்பிறப்பு எய்தும் பாரும்
அழுத்திமன கேசரத்தில் நின்று மைந்தா அப்பனே லலாடத்தில் தூங்கு வாயே.

ஞானக்குறள்

ஈரொளி யீதென றிறைவ னுரைத்தனன் / நீரொளி மீது நிலை.

மயிர்முனையிற் பாதி
மனத்தறி வுண்டேல் / அயிர்ப்புண்டங் காதி நிலை.