பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 495


அதினால் நல்லமழைப் பெய்தும் நெற்பயிர் விளைவிக்காது குடிகள் இன்னும் பஞ்சத்துக்குள்ளாயதை நாம் கண்டுள்ளது அனுபவமாதலின் முக்காலமுமுணர்ந்த ஞானத்தாய் மற்பயிர் யாதையுங் கருதாது நெற்பயிர்விளை என்று கூறியுள்ளாள்.

72. நேர்பட வொழுகு

நேர் - சகலருக்கும் நல்லவன் நேரானவனென்று, பட - காணும்படி, ஒழுகு - நீ வாழக்கடவா யென்பதாம்.

நஞ்சுள்ளப் பாம்புகள் யாவும் சகலர் கண்களுக்கும் புலப்படாமல் உலாவும், நஞ்சில்லா நீர்ப்பாம்புகளோ சகலர் கண்களுக்கும் நேர்பட உலாவும், அதுபோல் நன்மெய் கடைபிடித்து சகலர் கண்களுக்கும் நேர்பட ஒழுகவேண்டு மென்பது கருத்தாம்.

73. நைவன நணு கேல்

நைவன - வாக்கால் நையவுரைக்குஞ் கூட்டத்தாரும், தேகத்தால் நையப் புடைக்குங் கூட்டத்தாருமாகிய தீயரை, நணுகேல் - நெருங்கிய வாழ்க்கையை புரியாதே யென்பதாம்.

சுகதேகமும், சுகுணமும், தீயர் சேர்க்கையால் நைவது அனுபவமாதலின் அத்தகையச்செயலோரால் நைவன நணுகேலென்று கூறியுள்ளாள். தன்னிற்றானே கேட்டை வருவித்துக் கொள்ளுஞ் செயலுக்கு நையலென்றும் நைவன மென்றுங் கூறப்படும்.

74. நொய்ய வுரையேல்

நொய்ய - அன்புமிகுத்தோர் மனமுடைய, உரையேல் - ஓர் வார்த்தையையும் பேசாதே என்பதாம்.

அதாவது குடும்பத்தில் அன்புதிரண்டு வாழ்பவர்களையும், சிநேகிதத்தில் அன்பு திரண்டு நேசிப்பவர்களையும் அடுத்து அவர்களுக்குள் திரண்டுள்ள அன்பை நொய்ய உடைப்பதாயின் குடும்பமென்னுங் கூடிவாழும் வாழ்க்கையும் மற்று சிநயிதமென்னும் அன்புமற்று சேர்க்கை பிரிந்துபோம். அத்தகைய பிரிவினால் ‘வாழ்க்கைக்கு அனந்தங் கேடுண்டாவதை உணர்ந்த ஞானத்தாய் வார்த்தைப் பேசுவதில் நொய்யவுரையேலென்று கூறியுள்ளாள்.

75. நோய்க் கிடங் கொடேல்

நோய் - தேகத்தில் வியாதி தோன்றற்கு, இடம் - ஓராதாரத்தைக், கொடேல் - என்றுஞ்செய்துக்கொள்ளாதே என்பதாம்.

மிதமிகுத்தப் புசிப்புக்கு இடங்கொடுத்த விடத்திலும், பலதேக போகத்திற் கிடங்கொடுத்தவிடத்திலும் வியாதிதோன்றி உடலை வதைப்பது உள்ள சுவாபமாதலின் இன்னின்னக் கொறூரச் செயல்களால் இன்னின்னான் இன்னினியநோய் கண்டு உபாதைப்படுகின்றானென் றுணர்ந்தும், அதனை மறந்தும் வாதைப்படுவது மக்கள் இயல்பாதலின் விழிப்பான்வேண்டி நோய்க்கிடங்கொடேலென்று கூறியுள்ளாள்.

76. பழிப்பனபகரேல்

பழிப்பன - மற்றவர்களைப் பழித்தலும் இழிவுகூறுதலுமாகிய மொழிகளை, பகரேல் - மறந்தும் பேசாதே யென்பதாம்.

தனது குற்றங்களையுந் தனது குடும்பத்தோரிழிவுகளையும், தான் செய்யும் இழிய தொழிலாம் செயலையுங் கருதாது ஏனையோர் குற்றங்களையும், ஏனையோர் குடும்ப இழிவையும், ஏனையோர் தொழிலிழிவையும் எடுத்துக் கூறுவதாயின் ஏனையோர் இவனிழிவையும் பழியையுமெடுத்துக் கூறியேௗனந் செய்வதுடன் எல்லார்க்கும் விரோதியாய் சகலராலுந் சீ சீ யென்று இகழப் படுவான் ஆதலின் பகருமொழிகளில் பழிப்பனபகரேல் என்று கூறியுள்ளாள்.

77. பாம்பொடு பழகேல்

பாம்பை - விஷப்பற் பையையுடைய, ஓடு - ஜெந்தினொடு, பழகேல் - எப்போதும் நேசிக்காதே என்பதாம்.