பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அகற்றி நற்செயல்களைப் பெருக்கி சுகநிலையாம் உண்மெய்ப்பொரு ளுணர்ந்துநிற்றலே நித்திய வாழ்க்கைக்கு ஆதாரமாதலின் க்ஷணத்திற்கு க்ஷணம் அழிந்து கொண்டேபோகும் பொய்ப்பொருளை போற்றாது நித்திய ஒழுக்கமாம் நீடுவாழ்க்கையைத்தரும் மெய்ப்பொருளைப் போற்றி வாழென்று கூறியுள்ளாள்.

திரிக்குறள்

பொருளல்ல வற்றைப்பொருளென் றுணரு / மருளானா மாணாப் பிறப்பு.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினு மப்பொருள் / மெய்ப்பொருள் காண்ப தறிவு.

சீவகசிந்தாமணி

உள்பொரு ளிதுவென வுணர்தன் ஞானமாந் / தெள்ளிதி னப்பொரு டெளிதல் காட்சியாம்
விள்ளற விருமெயும் விளங்கத் தன்னுளே / யொள்ளிதிற்றரித்தலை யொழுக்கமென்பவே.

86. போர்த்தொழில்புரியேல்

போர் - எக்காலும் வாதுவழக்குக் கேதுவாம், தொழில் - கன்மங்களை, புரியேல் - நீ செய்யாதே என்பதாம்.

ஓர் தொழிலை ஆரம்பிக்குங்கால் அதனேது கொண்டு எக்காலமும் வாதுவழக்கை உண்டுசெய்யுங் கன்மத்தைப் புரியாதேயென்று கூறியுள்ளாள்.

87. மனந்தடுமாறேல்

மனம் - ஒன்றை யெண்ணி, தடு - மற்றொன்றை, மாறேல் - பிறழாதே என்பதாம்.

ஊனக்கண் பார்வையுறாது நடக்கில் உடல் தடுமாறுவது போல், உள்விழிபார்வையாம் கியான நிலை தவறி மனந்தடுமாறுவது இயல்பாதலின், எக்காலும் விழிப்பினின்று மனந்தடுமாறும் செயலாலுண்டாகும் துக்கவிருத்திகளையும், மனந்தடுமாறாச் செயலாலுண்டாகும் சுகவிர்த்திகளையும், காட்சியின் அநுபவத்தாலுணர்ந்து கியானக் கண் நிலைப்பதற்காய் மனந்தடுமாறேல் என்று கூறியுள்ளாள்.

88. மாற்றானுக் கிடங்கொடேல்

மாற்றானுக்கு - வாக்கிலொன்று மனதிலொன்றுமுள்ள வன்னெஞ்சனுக்கு, இடம் - நெருங்கி இல்லத்தைக், கொடேல் - நீ கொடுக்காதே யென்தாம்.

அதாவது உள்ளத்தில் மாறுபட்டவனும் மனதில் மாறுபட்டவனும் செய்கையில் மாறுபட்டவனுமாகிய வன்னெஞ்ச சத்துருக்களுக்கு இடங்கொடே லென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். மாற்றானென்பது - கூற்றன் என்பவனுக்கும் பொருளாதலின், காலனுக்கிடங்கொடேலென்பதும் மற்றோர் பாடபேதமாகும். காலனுக் கிடங்கொடுக்கும் வழிகள் இராகத்துவேஷ மோகங்களேயாகும். இம்மூவழிகளிலும் இடந்தராது அகற்றி ஆள்வதே ஜாக்ரதையாம்.

89. மிகைபடச்சொல்லேல்

மிகை - துன்பத்தை, பட - உண்டாக்கத்தக்க வார்த்தையை, சொல்லேல் - மறந்தும் பேசாதே என்பதாம்.

அதாவது உன் பிள்ளை குளத்தில் முழுகிவிட்டான், உன் கணவனை அடித்துவிட்டார்களென்று வேடிக்கையாக சொல்லும் வார்த்தைகள் கொடும் வினையாக முடிந்து பலவகை துன்பத்திற்கு ஆளாக்கிவிடுகிறபடியால் திடீரென்று மக்களுக்குக் கேட்டையுண்டாக்கத்தக்க வார்த்தையைப் பேசலாகாதென்னுந் தன்மநோக்கத்தால் ஞானத்தாய் மிகைபடச் சொல்லேலென்று கூறியுள்ளாள்.

திரிக்குறள்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி / னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

நீதி வெண்பா

வெய்யோன் கிரணமிகச்சுடுமே வெய்யவனில் / செய்யோன் கிரணமிகத் தீதாமே-வெய்யகதிர்
எல்லோன்கிரணத் தெரியினிலுமெண்ணமிலார் / சொல்லே மிகவுஞ் சுடும்.