பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 501

அனற்கண்ணனே படிக சங்கநிகர் வண்ணனே ஐயனே யருமெய் மதவேள் அநுதினமு மனதிநினை தருசதுர கிரிவள ரறப்பளீசுரதேவனே.

99. வாதுமுற்கூறேல்

வாது - தருக்கம்புரிவதில், முன் - முன்பு, கூறேல் - யோசியாது பேசாதே என்பதாம்.

அதாவது, குற்றங்கூறுதலும், கூறும்பொருள் விளங்காது கூறுதலும், கூறியதை கூறுதலும், மிகப்படக் கூறுதலும், முன்கூறிய பொருளுக்கு மாறுகொளப் பொருள் கூறுதலும், முன்மொழிக்குப் பின்மொழி விரோதிக்கக் கூறுதலும், நூலுக்குக் குற்றமாதல்போல் வாதாகுந்தருக்கத்தில் யோசியாது முன் பேசலாகாதென்பது கருத்து.

துரிதத்தில் முன் பேசுவதினால் எதிரி கொணர்ந்தவை இலக்கிய தருக்கமா, இலக்கணதருக்கமா, மதோ தருக்கமாவென்பது வீணே விளங்காது விரிந்துபோம் அவற்றால் எடுத்தவாது முடிவு பெறாது என்றறிந்துள்ள ஞானத்தாய் வாது முற்கூறேலென்று கூறியுள்ளாள்.

தருக்கக் கௌமுகி

வாதுமுற்கூறி வழுவுற விடுத்தல் ஏது பயனின் றிழிவது மாகும்.

100. வித்தை விரும்பு

வித்தை - கைத்தொழிலை, விரும்பு - நீ கற்பதற்கு ஆசைக்கொள்ளு மென்பதாம்.

அதாவது, வித்தையை விரும்பி கற்றுக்கொள்ளுவதில் ஓர் பாஷையைக் கற்பதே வித்தையென்று கூறுவாறு முண்டு. அஃது பொருந்தாவாம். எவ்வகையிலென்பீரேல், “கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்னும் முதுமொழியை சிரமேற்கொண்டு தமிழ் பாஷையைத் தெளிவுறக் கற்றவன் கன்னடதேசம் போவானாயின் சிறப்படைவனோ. கன்னட பாஷையைத் தெளிவுறக் கற்றவன் மராடதேசம் போவானாயின் சிறப்படைவனோ, ஒருகாலுஞ் சிறப்படையான்.

ஓடதிவித்தை, மரவினைவித்தை, தையல்வித்தை, பொன்வினை வித்தை, பயிரிடும் வித்தை, நெய்யும் வித்தை, உலோக பொருத்த வித்தை, காந்தவித்தை, இரசவித்தை முதலியவற்றுள் ஒன்றைத் தேறக்கற்று எத்தேசம்போயினும் சிறப்படைவான்.

அதற்குப் பகரமாய் நமது ஐரோப்பியர், அமேரிக்கர், சீனர், ஜப்பானியர் முதலிய மேன்மக்கள் மற்றதேசத்தோர் பாஷைகளைக் கற்காதிருப்பினும் தங்களிடமுள்ள வித்தைகளின் தைரியத்தால் எங்கும் உலாவி சுகம் பெற்றிருக்கின்றார்கள்.

நமது தேயத்தோர் சாதிவித்தை ஒன்று, சமயவித்தை ரண்டு, கொட்டை கட்டும்வித்தை மூன்று, கொழையல்வித்தை நான்கு, குறுக்குபூசுவித்தை ஐந்து, நெடுக்குபூசுவித்தை ஆறு, மற்றும் இதற்காதாரவித்தைகளை கற்றுக்கொண்டு பிள்ளைகொடுக்குஞ் சாமியார், பொன்கொடுக்குஞ் சாமியார், புதையலெடுக்குஞ் சாமியார், பூமியைவிட்டு ஒருமுழ உயரம் எழும்புவேனென்னுஞ் சாமியார், காணாத மோட்சத்திற்குக் கையோடு இட்டுக்கொண்டுசெல்லுஞ் சாமியார் களென்னும் வேஷமிட்டு பொருள் பறித்துத்தின்னும் பொய்யும், பொறாமெயும், வஞ்சகமும் நிறைந்த நெஞ்சினர்களே குருக்களாகத் தோன்றி, பேதைமக்களை மயக்கிப் பாழாக்கிவிடுவார்களென்னும் பூர்வக்கியான முணர்ந்த ஞானத்தாய் வருங்கால சம்பவமறிந்து வித்தையை விரும்புங்கோளென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

101. வீடுபெற நில்

வீடு - முத்தி, நிருவாண மென்னும் நிலையை, பெற - அடைவதற்கு, நில் - ஞானவரம்பில்நிற்கக்கடவா யென்பதாம்.

வீடுபேறாம் நிருவாணமாகும் பிறவியற்ற நிலையே துக்கத்தை ஒழித்த இடமாதலின் அவற்றிற்கு கேடிலா பருவம், மோட்சம், கேவலம், சித்தி,