506 / அயோத்திதாசர் சிந்தனைகள்
கெடுவார்களென்றுணர்ந்த ஞானத்தாய் ஊராரெல்லோருடனும் விரோதித்துக் கொள்ளாதீர்களென்று கூறியுள்ளாள்.
7. எண்ணு மெழுத்துங் கண்ணெனத்தகும்
எண்ணும் - கணிதத்தில் (அ) எட்டென்னும் வரி வடிவும், எழுத்தும் - அட்சரத்தில் (அ) அகரமென்னும் வரிவடிவும் உண்மெய்ப் புறமெய்யென்னு மிரண்டையுங்கூடியக், கண்ணென - அருட்கண்ணாம் ஞானவிழியென, தகும் - கூறுதலொக்கும் என்பதாம்.
அதாவது (அ) அகரமா முதலெழுத்தின் சுழியே ஞானசாதகர்க்கு உள்விழி பார்வை நிலையாதலின் எண்ணுக்கு (அ) எட்டாகவும் எழுத்தில் அகரமாகவும் விளங்கும் வரி வடிவே ஞானக்கண்ணென்று விளக்கியுள்ளாள்.
திரிக்குறள்
எண்ணென்பவேனை யெழுத்தென்பவிவ்விரண்டுங் / கண்ணென்ப வாழு முயிர்க்கு.
ஞானக்கும்மி
கட்டுப்படாதந்த வச்சுமட்டம் - அதன் காலே பன்னிரண்டாகையினால்
எட்டுக்கயிற்றினால் கட்டிக்கொண்டால் - அது மட்டுப்படுமடி ஞானப்பெண்ணே.
அறநெறிச்சாரம்
தன்னோக்குந் தெய்வம் பிறிதில்லை தானதன்னைப்
பின்னை மனமறப் பெற்றானேல் - என்னை
எழுத் தெண்ணே நோக்கி யிருமெயுங் கண்டாங்
கருட் கண்ணே நிற்பதறிவு.
8. ஏவாமக்கள் மூவாமருந்து
ஏவா - பெரியோரேனும், தாய்தந்தையரேனும் ஒன்றை நோக்கி யேவல் கூறுவதற்கு முன்பு, மக்கள் - மநுக்களவற்றையுணர்ந்து செய்யுஞ் செயலானது, மூவா - என்றுங்கெடாது சுகந்தரும், மருந்து - அவுடதத்தை யொக்கு மென்பதாம்.
எஜமானனாயினுந் தாய்தந்தையராயினும் இன்னதைக் கேட்கின்றார்கள் இனியதைத் தேடுகின்றார்களென்றுணர்ந்து அவ்வேவலைப் புரிவோர் தேவாமிர்தத்திற்கு ஒப்பானவரென்பது கருத்து.
9. ஐயம்புகினுஞ் செய்வினைசெய்
ஐயம்புகினும் - பிச்சையேற்றுண்ணுங் காலம் வரினும் அச்சோம் பேரிச்செயலைக் கருதாது, செய்வினை - உனக்குத்தெரிந்த தொழிலை விடாமுயற்சியுடன், செய் - செய்து சீவிக்கக்கடவா யென்பதாம்.
அதாவது கால ஏதுக்களாலும், வியாதிகளினாலும் செய்தொழில் முயற்சி குன்றி பயந்து ஒருவரை இரந்துகேட்க நேரிடும். அவ்வகை இரந்துண்ணுந் தொழிலையே கடைபிடிப்பதாயின் பிச்சை கிடையாவிடத்து களவு, சூது, வஞ்சக முதலிய துற்கிருத்தியங்களுக்கு ஆளாக்கிவிடும். ஆதலின் இரந்துண்ணுங் காலம் வரினும் அவனவன் செய்தொழிலில் முயற்சி குன்றாதிருந்து செய்யக்கூடிய வினையை செய்து சீவிக்கவேண்டுமென்பது கருத்து.
10. ஒருவனைப்பற்றி யோரகத்திரு
ஒருவனை - தன்மெய்தானே, பற்றி - யுணரப்பிடித்து, ஓரகத்து - உள்ளத்தின்கண், இரு - நிலைத்திருமென்பதாம்.
தன் தொழிலால் தனக்கு போஷிப்பும், தன்னை உணர்ந்து ஒடுங்கலால் தனக்கு சுகமும் உண்டாவதன்றி ஏனைய மக்களால் சுகங்காண்டல் அறிதாதலின் தன்னொருவனைப்பற்றி தன்னகத்து ஒடுங்கவேண்டுமென்பது கருத்தாம்.
அறநெறிச்சாரம்
செய்வினையல்லாற் சிறந்தார் பிறிதில்லை
பொய்வினைமற்றைப் பொருளெல்லா - மெய்வினவில்
தாயார் மனைவியார் தந்தையார்மக்களார்
நீயார் நினைவாழி நெஞ்சு.
தானே தனக்குப் பகைவனு நட்டானும் / தானே தனக்கு மறுமெயு
மிம்மெயும்
தானே தான் செய்தவினைப் பயன்றுய்த்தலால் / தானே தனக்குக் கரி.