பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 507

ஒற்றுமெய் நயத்தால் ஒன்றெனத் தோன்றுமொருவன் தன்னைத்தான் உணர்ந்து மனத்தை வணக்கலென்னும் நன்மெய்க் கடைப்பிடித்து ஒருவனைப் பற்றி உடலுயிரென்னுமோரக திருவென்று கூறியுள்ளாள்.

சூளாமணி

அருந்தவ மமையும் பார மிரண்டையு மறிந்து தம்மெய்.
வருந்தியு முயிரையோம்பி மனத்தினை வணக்கல்வேண்டும்
திருந்திய விரண்டு தத்தஞ் செய்கையிற்றிரியுமாயின்
பெருந்துயர் விளைக்குமன்றே பிறங்குதார் நிறங்கொள்வேலோய்.

இவற்றை அநுசரித்தே சமணமுநிவர்கள் யாவரும் தாங்கள் இயற்றியுள்ள இலக்கணநூற்கள் யாவிலும் தன்மெய், முன்னிலை, படர்க்கை என்றும்; ஒருமெய், பன்மெயென்றும்; ஒருமெயென்னும் ஒருவனாய் தன் தேகத்தை சுட்டியும்; பன்மெயான பலதேகத்தைச் சுட்டியும் தனக்குள்ள பஞ்சஸ்கந்தங்களை விளக்கி தன்னகத்தடங்கும் நிலையை ஊட்டியுள்ளார்கள்.

11. ஓதலினன்றே வேதியர்க்கொழுக்கம்

வேதியர் - சமணமுநிவர்களின், ஒழுக்கம் - நற்கிருத்தியம் யாதெனில், ஓதல் - வேதவாக்கியங்களாம் நீதிமொழிகளை சகலருந் தெளிவுற போதித்தலே, நன்றாகும் - சுகந்தரு மென்பதாம்.

அதாவது புத்தபிரானால் ஓதியுள்ள சௌப்பாபஸ்ஸ அகரணம், குஸலஸ வுபஸம்பதா, ஸசித்த பரியோதபனம் பாபஞ் செய்யாதிருங்கோள் என்னும் கன்மபாகைகளையும், நன்மெய்க் கடைபிடியுங்கோள் என்னும் அர்த்தபாகைகளையும், இதயத்தை சுத்திசெய்யுங்கோள் என்னும் ஞானபாகைகளையும் அடக்கியுள்ள திரிபேத வாக்கியங்களை உணர்ந்தும் அதன்மேறை ஒழுகி சாதனைபுரியும் வேதியர்களாம் சமணமுநிவர்கள், தாங்கள் கண்டடைந்த திரிவேதவாக்கியங்களாம் நீதிமார்க்கங்களை சகலமக்களுக்கும் ஊட்டி அவ்வழியில் நடைபெறச்செய்வதே வேதியர்களாம் சமணமுநிவர்களின் ஒழுக்கமாகும்.

ஆதியில் மூன்று நீதிமார்க்கங்களை திரிபேதமாக சுருதியாய் போதித்த வரும், மாதம் மும்மாரி பெய்யும் ஒழுக்கங்களையூட்டி சருவசீவர்களுக்குஞ் சுகத்தையளித்தவரும் புத்தபிரானேயாகும்.

சீவகசிந்தாமணி

ஆதிவேதம் பயந்தோய் நீ, யலர்பெய் மாரியமர்ந்தோய் நீ.
நீதி நெறியை யுணர்ந்தோய் நி, நிகரில் காட்சிக் கிறையோய் நீ.
நாத னென்னப்படுவோய் நீ, நவைசெய் பிறவிக் கடலகத்துன்
பாதகமலந் தொழவெங்கள் பசையாப்பவிழ பணிவாயே.

சூளாமணி

ஆதியங்கடவுளை யரு மறை பயந்தனை / போதியங்கிழவனை பூமிசை யொதிங்கினை
போதியங்கிழவனை பூமிசை யொதிங்கிய / சேதியென்செல்வநின் திருவடி வணங்கினம்.

நெஞ்சறி விளக்கம்

அரியதோ ரரசன் மைந்தன் அவனியிற் பிறந்து முன்னாள்
பெரியபே ரின்பஞானம் பெறுவதே பெரிதென்றெண்ணி
உரிய வேதாந்த வுண்மெய்யுரைக்கு மாசானுமான
தெரிவுறு நாகைநாதர் சீர்பதம் போற்று நெஞ்சே

அறநெறிச்சாரம்

குற்றங்குறைத்து குறைவின்றி மூவுலகில் / நற்ற மறைத் தாங்க ருள்பரப்பு - முற்ற
உணர்ந்தானைப் பாடாத நாவல்லவல்ல / சிறந்தோன்றாள் சாராத்தலை

அறவாழியான் போதித்துள்ள அருமறையாம் வேதவாக்கியங்களை ஓதுவோர் பால்போன்ற ஒழுக்கத்தால் சாந்தம் பெருகியும் ஈகைசிறந்தும், அன்பு நிறைந்துமுள்ளவர்களாதலின் தாங்களடைந்த சுகத்தை ஏனையோரும் அடைய வேண்டுமென்னும் நன்னோக்கத்தால் வேதவாக்கியங்களை வாசித் தடங்கிய வேதியர்களாம் சமண முனிவர்கள் ஏனையோருக்கு வோதுபவற்றையே ஒழுக்க மென்னப்படும்.