பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அறநெறித்தீபம்

ஐயெனத்தான் பெருகுவதும் அறிவினால் விளங்குவதும்
உய்தவங் கேட்டுணர்வதுவும் உணர்ந்தவற்றைப் பிறருளத்திற்
செய்தவர் நன்றாக்குதலும் சிறந்தார்சொற்றேருதலும்
மெய்யன்பை யுள்ளத்தில் மேவியவன் பயனாகும்

அஞ்ஞான இருளையகற்றி மெய்ஞ்ஞான விளக்கைத் தூண்டிக் கொண்டிருப்பதே வேதவாக்கியங்களாம் நீதிவாக்கியங்களை உணர்ந்த வேதியர்களின் ஒழுக்கமாதலின் ஞானத்தாய் ஓதல் நன்றே வேதியர் ஒழுக்கமென்று கூறியுள்ளாள்.

அறநெறிச்சாரம்

இருளே யுலகத்தியற்கை இருளகற்றுங்
கைவிளக்கேகற்ற வறிவுடைமெய் - கைவிளக்கு
நெய்யேதன்னெஞ்சத் தருளுடைமெய் நெய்ய பயந்த
பால்போலொழுக்கத்தவரே புரிவில்லா மேலுலக மெய்து பவர்.

யாப்பருங்கலைக்காரிகை

ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம் / ஓதலி நன்றே வொழுக்கமுடைமெய்

ஓதுதலிலும், உணர்தலிலும், அரும்பொருளுரைத்தலிலும், வல்லமெயுற்று அவ்வழியில் தானடங்கி நடவானாயின் வேதமோதும் நீதிமார்க்கக் குடியிற் பிறந்தும் அநீதிமார்க்கமாம் அஞ்ஞானக்குடியிற் பிறந்தவனென்று கூறப்படும்.

அதாவது நல்லொழுக்கமென்னும் தன்னைப் போல் பிறரைநேசித்தல் தன்னுயிரைப்போல் மன்னுயிரைக் காத்தல், பொய்யகற்றி மெய்பேசுதல், பொய்ப்பொரு ளாசையை அகற்றி மெய்ப்பொருளாசையைப் பெருக்கல், உலகத்தைப் பார்க்குஞ் சிந்தையை அகற்றி தன்னைப்பார்த்தல் ஆகிய மேன்மக்கள் குடியிற்பிறந்தும், களவு, சூது, வஞ்சினம், பொருளாசையாம் சுயப்பிரயோசனங் கருதி நீதிநெறி ஒழுக்கங்களை வழூவுவனேல் தீயக்குடியிற் பிறந்த கீழ்மகனென்றே சொல்ல நேரிடும்.

திரிக்குறள்

ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப் / பேதையிற் பேதையாரில்.
மறப்பினு மோத்துக்கொளலாகும் பார்ப்பான் / பிறப்பொழுக்கங் குன்றக்கெடும்.

நீதியொழுக்கமாம் தன்னைப்பார்க்கும் பார்ப்பாரக் குடியில் பிறந்தும், தன்னை பாராமலும், தன்மெய் உணராமலும், அநீதியாம் தீயவொழுக்கங்களைப் பின்பற்றுவானாயின் அவன் நல்லொழுக்க நற்குடியிற்பிறந்தும் அவன் தன்மெய்யைப் பார்க்காது மறந்த தீயச்செயலால் தன் மெய்யறியா தம்மெய்ப் பார்க்கா தீயப் பிறப்பாங் குடியிற் பிறந்தவனென்றே கூறலாகும். ஆதலின் சமணருள் வேதவாக்கியங்களாம் நீதி வாக்கியங்களை உணர்ந்த ஒவ்வோர் வேதியனும் அவ்வொழுக்கத்தினின்று ஓதுதலே நன்றென்பது கருத்தாம்.

திரிக்குறள்

ஒ ஓதல் வேண்டு மொழி மாழ்குந் செய்வினை / யா அது மென்னு மவர்.

பாரதம்

நீதியும் நெறியும் வாய்மெயு முலகில் நிறுத்தினோன் வேதியன் அன்றி
வேதியனேனும் இழுக்குறிலவனை விளம்பும் சூத்திரனென வேத
மாதவர் புகன்றா ராதலாலுடல மாய்ந்தபின்பாவதோர் பொருளோ
தோதிலாவிந்தப் பிறவியில் வேதக் குரவனீ யல்லையோ குறியாய்.

12. ஒளவியம்பேசுத லாக்கத் திற்கழிவு

ஒளவியம் பேசுதல் - ஒருவனைக் கெடுக்கத்தக்க வாலோசினையைப் பேசுதல், ஆக்கத்திற்கு - தன் தேகத்திற்கே, அழிவு - கெடுதியை யுண்டாக்கு மென்பதாம்.

தங்கள் வாக்கினாலும், செயலினாலும் நற்கிரித்தியஞ்செய்வோர் சுகபலனை அடைவதுபோல் தங்கள் வாக்கினாலுஞ் செயலினாலும் துற்கிரித்தியங்களைப் பேசினும், செய்யினும் துக்கத்தையடைவார்கள் என்பது அநுபவமாதலின் ஞானத்தாய் ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவென்று கூறியுள்ளாள்.