பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 513

திருமூலர் - திருமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டென்ப ரறிவிலார் / அன்பே சிவமாவதி யாருமறிகிலார்
அன்பே சிவமாவதி யாரு மறிந்தபின் / அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே.

கோபமென்னுங் குன்றின்மீதேறி யவித்து அன்பே ஓருருகொண்ட சாந்தரூபியாம் புத்தபிரானை குணகாரணத்தால் சிவனென்றும், சதா சிவனென்றுங் கொண்டாடிவந்தார்கள்.

அறநெறித்தீபம்

அவன்கொ லிவன்கொலென்றையப்படாதே
சிவன்கண்ணே செய்ம்மின்கண்சிந்தை - சிவன்றானும் நின்றுக்கால்சீக்கு நிழறிகழும்பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான் வேந்து.

சூளாமணி

மணிமலர்ந் துமிழொளி வனப்புஞ் சந்தனத் / துணிமலர்ந்துமிழ் தருந்தண்மெய்தோற்றமும்
நணிமலர் நாற்ற மென்னவன்ன தா / லணிவரு சிவகதி யாவதின்பமே.

மேருமந்திரபுராணம்

அவதியா னரகமா றாவதாய்ந்திடா / வுவதியால் வரும் பயன் ஒன்றுமின்றியே
சிவகதி யவர்க்குப் போலிவர்க்கு நல்வினை / யவதியி னுதையத்தா லாகு மின்பமே.

29. சீரைத்தேடி னேரைத் தேடு

சீரை - சுக வாழ்க்கையை, தேடில் - ஆராய்வதில், ஏரை - உழுதுண்ணுஞ் செயலை, தேடு - கண்டறிந்துக்கொள் என்பதாம்.

அதாவது உலகத்தில் சுகவாழ்க்கையைத் தேடுபவன் பூமியைத் திருத்தியுண்ணும் வேளாளத் தொழிலை நாடுவானாயின் சகலருக்கும் உபகாரியாக விளங்குவதுமன்றி தானும் சுகவாழ்க்கையைப் பெறுவான்.

திரிக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் / தொழுதுண்டு பின்செல் பவர்.

30. சுற்றத்திற்கழகு சூழவிருத்தல்

சுற்றத்திற்கு - உறவின்முறையா ரென்போருக்கு அழகு - சிறப்பு யாதெனில், சூழவிருத்தல் - ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து சேர்ந்து வாழ்தலேயாம்.

என் சகோதிரன், என் மாமன், என் மைத்துனியென்று சொல்லுங் குடும்பிகளுக்கு சிறப்பும், வாழ்க்கையும் சுகமும் யாதெனில், ஒருவருக்கொருவர் நெருங்கி வாழ்வதுடன் ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்குவதே. என் குடும்பத்தோர், என் சுற்றத்தோர் என்பதற்கு அழகாகும் சேர்ந்த வாழ்க்கைப்பெற்றும் உபகாரமற்றிருப்போருக்கு வாழ்க்கைக்கு அழகாகாவாம்.

திரிக்குறள்

சுற்றத்தாற் சுற்றப்படவொழுகல் செல்வந்தான் / பெற்றத்தார் பெற்ற பயன்.

31. சூதும் வாதும் வேதனைசெய்யும்

சூதும் - ஒருவரை வஞ்சினத்தாலும், வாதும் - ஒருவர் வாக்குக்கு யெதிர்வாக் குரைத்தலாலும், வேதனை - துன்பத்தை, செய்யும் - அநுபவிக்க நேரிடு மென்பதாம்.

சூதாகும் வஞ்சகக் கிரியைகளையும், வாதாகுங் குதர்க்க வாதங்களையுஞ் செய்துக்கொண்டே வருவதினால், விவேகமிகுத்தோர் இவனை புறம்பே அகற்றுவதுடன் அதிகாரிகளால் வேதனையும் அடைவானென்பதுங் கருத்து.

32. செய்தவ மறந்தாற் கைதவ மாளும்

செய் - தான் செய்துவரும், தவம் - நல்லொழுக்கத்தை, மறந்தால் - செய்யானாயின், கைதவம் - அநுபவத்திற்கைகண்ட சுகங்களானது, மாளும் - கெட்டுப்போமென்பதாம்.

தான் விடாமுயற்சியாய் சாதித்துவந்த நற்காட்சி, நல்வாய்மெயாகுந் தபோபலங்குறையின் துற்காட்சி மிகுத்து முன்செய்த தவமும் மாய்ந்து போமென்பது கருத்து.