பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 515

போமோ, ஒருக்காலும் ஏற்கலாகாவென்பதாம். ஆதலின் ஞானத்தாய் நீதிநெறி ஒழுக்கங்களை அநுசரித் தோது முதுமொழிகளையே மந்திரங்களென்று கூறியுள்ளாள்.

38. தாய்சொற்றுறந்தால் வாசகமில்லை

தாய் - தன்னையீன்ற தாயாரும், வாசகநெறியோதியுள்ள ஞானத்தாயாரும், சொல் - சொல்லியுள்ளவற்றை, துறந்தால் - அவற்றிற்கு மாறுகொள நடந்தால், வாசகமில்லை - ஞானத்தால் ஓதியுள்ள திரிவாசகமுமில்லை, அவற்றை அநுசரித்துவந்த ஈன்ற தாயாரின் ஒழுக்கமுமில்லை என்பது கருத்தாம்.

பெரும்பாலும் நமது ஞானத்தாய் ஓதியுள்ள திரிவாசகங்களை எளிதிலும், வாசகநடையிலு முணர்ந்து அம்மார்க்கத்தில் நடந்துவரும் தன்னை ஈன்றத் தயானவள் ஓதுஞ் சொற்களைக் கடந்து நடப்பதாயின் ஞானத்தாய் ஓதியுள்ள திரிவாசகத்தையே மீறிநடந்ததற்கொக்கும். ஆதலின் நீதிமார்க்கத்தில் நடக்கும் தன்னை ஈன்ற தாயின் சொற்களை மீறலாகாதென்று கூறியுள்ளாள். கொலையிலும், களவிலும், பொய்யிலும், விபச்சாரத்திலும், குடியிலு மிகுத்தவளைக் கூறாது திரிவாசகங்களை ஏற்று நடந்ததாயின் மொழிகளையே இவ்விடம் வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

39. திரைகடலோடியுந் திரவியந்தேடு

திரை - அலைபெருக்கில், கடலோடியுந் - கடன்மடை திரண்டோடும் வோடத்திற் சென்றும், திரவியஞ் - செல்வத்தை, தேடு - சம்பாதிக்க முயற்சிச்செய்யு மென்பதாம்.

யாதாமொரு களங்கமும் பயமுமின்றி கடல் மீது கப்பல் யாத்திரைச் செய்து புறதேசங்களுக்குச் சென்று தனது நீதிநெறியாம் ஒழுக்கங்களினால் அத்தேசத்தோருக்கு மேலானவனென விளக்கி தனது முயற்சியினாலும், தேககஷ்டத்தினாலும், வித்தியா விருத்திகளினாலும் திரவியத்தை சேகரித்து தான் சுகிப்பதுடன் தனது குடும்பத்தோரையும், தன்னையடுத்துள்ள ஏழைகளையும் ஆதரிக்கவேண்டுமென்னுங் கருத்தால் திரவியந்தேடும் உபாயத்தைக் கூறியுள்ளாள்,

40. தீராக்கோபம் போராய் முடியும்

தீராக்கோபம் - தன்னாலாற்றமுடியாக்கோபம், போராய் - பெருஞ்சண்டை கேதுவாய், முடியுந் - தீருமென்பதாம்.

தனக்குள் எழுங் கோபாக்கினியை சாந்தமென்னும் நீரினால் அவிக்காமற் போவானாயின் தன துள்ளுருப்புக்கள் யாவுங் கொதிப் பேறி நடுக்குற்று நாசமடைவதுடன் எதிரிகளால் தனது தேகமும் நையப் புடைக்கப்பட்டு நசிந்துபோவானென்பதாம்.

திரிக்குறள்

தன்னைத்தான் காக்கிற் சினங்காக்காவாக்கால் / தன்னையே கொல்லுஞ் சினம்.

41. துடியாப்பெண்டீர்மடி நெருப்பு

துடியா - தனது கணவனுக்கு ஆபத்து நேரிட்டகாலத்து பதரா, பெண்டீர் - இஸ்திரீயானவளிருப்பளேல், நெருப்பு - அக்கினியைக் கட்டியுள்ளானென்பதற் கொக்கும் என்பதாம்.

புருடனுக் கோர் ஆபத்து நேரிட்டதென்று கேழ்விப்பட்ட மனைவியின் தேகந் துடியாமலும், மனம் பதராமலும் இருக்குமாயின் அவளது எண்ணம் பரபுருடனை நாடிநிற்பதுமன்றி தனது கணவன் சீக்கிரந் துலையவேண்டும் என்னும் நோக்கமுடையவளேயாவள். அத்தகையத் தீயகுணமுள்ளாளைச் சேர்ந்து வாழ்தல் தனது மடியில் நெருப்பைக் கட்டிவைத்திருப்பதற்கு ஒக்கும். தன்கணவன்மீது வெறுப்பும், அன்னியபுருடன்மீது விருப்புமுள்ள பெண்டீர் வாழ்க்கைக்குத் துணைநலமாகாதது கண்டுள்ள ஞானத்தாய் துடியா பெண்டீர் மடியில் நெருப்பென்று கூறியுள்ளாள்.