பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அஞ்சலியஸ்தராய் ஆதரிப்பவர்களாதலின் அவர்களிடத்துத் தங்கள் வல்லபக் குறைவை சொல்லுவதாயின் மதிப்பற்று ஆபத்துக்குதவாரென்பது கருத்து.

48. நல்லிணக்கமல்ல தல்லற்படுத்தும்

நல் - நல்ல, இணக்கம் - நேயர் சேர்க்கை , அல்லது - இல்லாமற் போமாயின், அல்லல் - துன்பத்திற்கு, படுத்தும் - ஆளாக்குமென்பதாம்.

நல்லவர்களை அடுத்திருத்தலும், நல்லவர்களின் வார்த்தையைக் கேட்குதலும் நன்றாகும். அத்தகைய நல்லோர்களை அடுக்காமலும், அவர்கள் வார்த்தையைக் கேளாமலும் இருப்பதாயின் எவ்விதத்துங் கேடுபெருகி மாளாதுக்கத்துக்கு ஆளாக்குமென்றுணர்ந்த ஞானத்தாய் நல்லோரிணக்கம் வேண்டுமென்றும் அஃதல்லாதார் அல்லற்படுவரென்றும் வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

49. நாடெங்கும் வாழ்க கேடொன்று மில்லை

நாடு - நஞ்சை புஞ்சை பூமிகளில், எங்கும் - எங்குமுள்ளவர்கள், வாழ்க - சுகவாழ்க்கையி லிருப்பார்களாயின், கேடு - சுகக்கேடுகள், ஒன்றும் - ஒன்றாயினும், இல்லை - இராது யென்பதாம்.

நஞ்சை புஞ்சை பூமிகளைத் திருத்தி பயிரிட்டு மக்கள் வாழ்க்கை புரியுமிடத்தை நாடென்றும், அரசனும் அரசவங்கத்தோரும் வாழுமிடத்தை நகரமென்றும் வழங்கிவருபவற்றுள் நஞ்சை புஞ்சை தானியங்கள் செழித்திருக்குமாயின் நாட்டார் யாவருஞ் செழித்திருப்பார்கள். நாட்டார்கள் செழிப்புற்றிருப்பார்களாயின் நகரவாசிகள் யாவரும் சுகமுற்றுவாழ்வது அநுபவமாதலின் பயிரிடுங் குடிகளின் சுகத்தைக் கண்டு எங்கும் சுகமுண்டென்பதை விளக்கியுள்ளாள்.

50. நிற்கக்கற்றல் சொற்றிரமாகும்

நிற்க - மனதில் நிலைக்க, கற்றல் - வாசித்த, சொல் - வார்த்தைகளாவது, திரம் - உறுதியாக, ஆகும் - முடையுமென்பதாம்.

கற்குங் கல்வியை நிலைபெறக் கற்று தான்கற்ற கல்வியினளவாய் ஒன்றைக் கூறுவானாயின் அஃது உறுதிபெற்றே நிற்கும். தான் கற்ற கல்வியை நிலைக்க வைக்காமலும், கற்றக் கல்வியினளவே நில்லாமலும் ஒன்றைக் கூறுவானாயின் சேற்றில்நாட்டியக் கம்பம்போல் தன்னிற்றானே திறம்பெறா தாதலின் கற்போர் யாவருந் தாங்கள் கற்றக் கல்வியை தங்களுள்ளத்தில் பதியக் கற்றல்வேண்டு மென்பது கருத்தாம்.

51. நீரகம் பொருந்திய வூரகத்திரு

நீர் - லோகசலதாரையூற்றுக்கு, அகம் - இடம், பொருந்திய - அமைந்துள்ள, ஊரகத்து - தேசத்தின்கண், இரு - வீற்றிரு மென்பதாம்.

நீர்வளமானது நிலவளத்தூறிய வகத்து வாழ்தலே பஞ்சமற்ற வாழ்க்கைக்கு இடமாதலின், நீர் வளம்பொருந்தியவிடத்து வாழ்கவேண்டுமென்பது கருத்து.

நீர்வளம் நிறைந்தவிடம் மக்கள் தேகசுத்தத்திற்கும், சுகத்திற்கும், தானியவிருத்திக்குமிடமாதலின், மனோசுத்தம், வாக்குசுத்தம், தேகசுத்தமாம் திரிகரணசுத்தத்தை நாடும் ஞானத்தாய் முதல்வாசகத்திற் கூறியுள்ள சனி நீராடென்னும் வாசகத்துக்கு இணங்க இரண்டாம்வாசகத்தில், சனிக்கும் நீரூற்றுள்ள வூரகத்து வாழென்று கூறியுள்ளாள்.

52. நுண்ணியகருமமு மெண்ணித் துணி

நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலேயாயினும், எண்ணி - தேற வாராய்ந்து, துணி - செய்வதற்கு முயலுமென்பதாம்.

ஓர் சிறியகாரியமேயாயினும் அக்காரியத்தை சரிவர ஆராய்ந்து செய்தலே நன்று. அங்ஙனமின்றி காரியம் சிறிதென்று கவனமற்று செய்வதாயின் சிறுகாரியமே பெருநஷ்டத்திற் குள்ளாக்குமென்று உணர்ந்த ஞானத்தாய் நுட்பச்செயலாயினும் முன்பின் ஆராய்ந்துச் செய்யுமென்று கூறியுள்ளாள்.

திரிக்குறள்

எண்ணித் துணிக கருமந் துணிந்தபி / னெண்ணுவ தென்ப திழுக்கு.