பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 43

ணரிற் பெய்த மூரிவார்சிலை / மாவலிமருமான் சீர்கெழு திருமகள்
சிதாதகையென்னுந் திருத்தகுதேவியொடும் / போதவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக,

- 1:19; அக்டோபர் 23, 1907 – புத்தபிரான் மூதாதைக் கலிவாகுச் சக்கிரவர்த்தியின் காலக்கணிதமாகுங் கலியுலக திரியாங்கத்துள் (பாலி) புண்ணபட்சமென்றும் அமணபட்சமென்றும் வழங்கிய வார்த்தை வடமொழியில் பூரண சந்திரன், அமரச்சந்திரனென்றும் தென்மொழியில் பூரணகலை, அமரகலை என்றும், பூர்வவாசி, அமரவாசியென்று வழங்கி வந்த வார்த்தைகளை தற்காலப் பஞ்சாங்கம் என்று ஏற்படுத்திக் கொண்ட பாவலர்கள் அதனுட் பொருளறியாது ஓலைச்சுவடிகளில் அமரச்சந்திரன் அமரகலை, அமரவாசி என்று வரைந்திருக்கும் மொழியை (அமர) என்று அறியாது (அமா) என்று எண்ணி அமரவாசி என்பதை அமாவாசி என்று வழங்கி வருகின்றார்கள்.

காரணம் இலக்கியம் அறியா இலக்கண வித்துவான்களின் அந்தகாரமேயாம்.

சாக்கையர்கள் அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் வகுத்துள்ள கலை நூற்களில் தேகத்தின் நாசியினின்று வெளிவரும் சுவாசம் என்றும் கலை என்றும் வழங்கும் வாசியானது சுத்த இதயத்துடன் கலந்து பூரகம் என்னும் பூரணம் அடைந்த நிலையை நித்தியம் நிருவாணம் என்று கூறினார்.

சுவாசமானது ஆசாபாசஞ் கலந்த அசுத்த இதயத்துடன் கலந்து வெளிப்பட்டு தேய்வடையுமாயின் இருளென்னும் அமரமுற்று இறப்பா னென்றுங் கூறினர்.

அதுபோல் அண்டத்துள்ளக் கலை நாளுக்கு நாள் வளர்ந்து பூரணமுற்று உலகின் இருளை அகற்றி சருவ பொருளையும் விளக்குகின்றது.

பூரணமுற்ற கலை நாளுக்குநாள் தேய்ந்து அமரம் என்னும் இருளடைந்து சருவப் பொருட்களையும் மறைத்துவிடுகின்றது.

ஞானக்குறள்

மதிக்குள் கதிரவன் வந்துள்ளொடுங்கில் / உதிக்குமாம் பூரணச் சொல்.
தோற்றுங்கதிரவ லுண்மதி புக்கிடில் / சாற்று மமரம் தான்.

அமரபட்சம் - பூர்வபட்சம், அமரச்சந்திரன் - பூர்வச்சந்திரன், அமரகலை - பூர்வகலை, அமரவாசி - பூர்வவாசி என சுவாசத்தின் தேய்வுக்கும் வளர்ச்சிக்கும் பலனாகும் ஒளியை பூரணம் என்றும் இருளை அமரமென்றுங் கூறினார்கள்.

இருந்தும் ஓர் இமைப்பொழுது மறைந்து காணாச் சந்திரனை அமரச் சந்திரனென்றும், இருந்தும் மறைந்துக்காணா கோட்களுக்கு அமரக்கோட்களென்றும் இருந்தும் மறைந்துக்காணா தேவர்களுக்கு அமரர்களென்றும் வகுத்திருக்கின்றார்கள்.

கடைகாண்டம்

இடைகலையே சந்திரகலை மதிதேய்ந்தாப்போ
லிலங்கியதோர் பிங்கலையுந் தேய்ந்து போச்சு
தடையாளஞ் சொல்லக்கேள் பதினாறு மாத
மப்பனே சிவயோகத் திருந்துபாரு
விடையாதே சந்திரகலை தேய்ந்துபோச்சு
வேதாந்தனந்தியைப்போல் பேசலாச்சு
துடையாளிபோலிருந்த புரியபட்டந்தான்
தானேமுடிந்ததடா வுண்மெய்ப்பாரே.

பூர்வகாலத்தில் மெய்யந்தணர்களை அறஹத்தோ அறஹத்தோ என்று அழைத்து அன்னமிட்டு வணங்கி தாங்களும் புசித்து சுத்தசீல தன்மத்தைப் பெருக்குஞ் சாதனங்களை மறந்து அரகரோ - அரகரோ என்னும் பொருளற்ற வார்த்தையைக் கூறுவது போல் அமாவாசி என்னும் பொருளற்ற வார்த்தையை வழங்கி வருகின்றார்கள்.

இத்தகைய புதைப்பொருள் வாக்கியங்கள் பொருளறியாது மயங்குவது பொய்க்குருக்களின் அறியாமையாயினும் பூர்வ புத்ததன்ம அரசர்களைப் பறையர்களென்று தாழ்த்தி சைவசமயத்தோர் கோவிலில் நந்தனென்னும் ஓர் பறையனையும், வைணசமயத்தோர் கோவிலில் திருப்பாணரென்னும் ஓர் பறையனையுஞ் சேர்த்துக் கொண்ட காரணம் யாதெனில்:-