பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சகலரும் சுகமடைய விரும்பல் ஆகிய சீர்பெறும் ஒழுக்கங்களை நோக்கார்களென்பது கருத்து.

‘அப்பா திருடாதே, திருடனென்னும் பெயரை யெடுக்காதே, அது கீழ்மக்கட் செயலென்பாராயின்,’ எங்கள் குலமே திருட்டு குலம், ‘எங்கள் சீவனமே திருட்டுசீவனம்,’ எங்களைத் திருடனென்னாது வேறென்னப் பெயரால் அழைப்பதென்பான் சீரிய ஒழுக்கமற்றோன்.

‘அப்பா குடியாதே, கட்குடியனென்னும் பெயரை எடுக்காதே, அது கீழ்மக்கட் செயலெ’ன்பார்களாயின் 'ஆ! ஆ! எங்கள் குலமே குடிப்பது வழக்கம், குடிக்காவிட்டால் குடியனென்னும் பெயர் மறைந்துபோமோ, கள் குடியனென்னும் பெயர்சொல்லிக்கொண்டே ஏன் முன்னுக்கு வரப்படாதென்று தாங்கள் பிறந்த குலத்தளவின் குணத்தையே காட்டுவார்கள். ஆதலின் செயலாலுங் குணத்தாலுந்தோன்றுங் கீழ் மக்கள் மேன்மக்கள் என்போர்களின் குணாகுணங்களை நன்குணர்ந்த ஞானத்தாய் சீரியவொழுக்கங்கள் பூரியோரிடத்துக் காண்பது அரிதென்று கூறியுள்ளாள்.

சீவகசிந்தாமணி

கற்பூரப் பாத்திகட்டி கஸ்தூரி யெறுபோட்டு கமழ்நீர்ப் பாய்ச்சி
பொற்பூரமுள்ளரியை விதைத்தாலுமதின்குணத்தைப் பொருந்தக்காட்டும்
சொற்பேதையர்க்கறிவு யினிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராதங் கவர் குணமே மேலாக நடக்குந்தானே.

பழமொழிவிளக்கம்

சிறியவரா முழுமூடர் துரைத்தனமாயுலகாளத் திரம்பெற்றாலும்
அறிவுடையார் தங்களைப்போ லன்படையார் புகழுடையா ராகமாட்டார்
மறிதருமான் மழுவேந்துந் தண்டலைநீ நெறியாரே வாரி வாரி
குறுமணிதாளிட்டாலுங் குருடி கண்ணிற் கண்ணாகிக் குணங் கொடாதே.

65. பெற்றியார்க்கில்லை சுற்றமுஞ் சினமும்

பெற்றியார்க்கு - குணங்குடி கொண்டார்க்கு, சுற்றமும் உரவின் முறையாரும், சினமும் - கோபமும், இல்லை கிடையாதென்பதாம்.

பெற்றி என்னுங் குணத்தை குடிகொள்ள வைத்தவர்களுக்கு சுற்றத்தா ரென்னுங் குடும்பமென்பது இல்லை, சினமென்னுங் கோபமுமில்லையென்பது கருத்து.

பாம்பாட்டி சித்தர்

மனமென்னுங் குதிரையை வாகனமாக்கி / மதியென்னுங் கடிவாளம் வாயிற் பூட்டி
சினமென்னுஞ் சீனிமேற் சீராயேறி / தெளிவுடன் சாரிவிட் டாடாய் பாம்பே.

66. பேதமெ யென்பது மாதர்க் கொருபெயர்

பேதை - அறிவற்ற, மெய் - தேகமென்பது, மாதர்க்கு - பெண்களுக்கு, ஒருபெயர் - குறித்துள்ளவோர் பெயராகும் யென்பதாம்.

பெண்களுக்குரிய வாலை, தருணி, பிரவிடை, விருத்தை என்னும் நான்கு பருவத்துள் எழு வகைவயதின் பெயர்களுண்டு. அதாவது ஐந்துவயது முதல் ஏழு வயதளவும் பேதைப்பெண்ணென்றும், எட்டுவயது முதல் பதினோரு வயதளவும் பெதுமெய்ப்பெண்ணென்றும், பன்னிரண்டு முதல் பதின்மூன்று வயதளவும் மங்கைப்பெண்ணென்றும், பதினான்குவயது முதல் பத்தொன்பது வயதளவும் மடந்தைப்பெண்ணென்றும், இருவது வயது முதல் இருபத்தைந்து வயதளவும் அரிவைப் பெண்ணென்றும், இருபத்தாறு வயது முதல் முப்பத்தோரு, வயதளவும் தெரிவைப்பெண்ணென்றும், முப்பத்திரண்ட வயது முதல் நாற்பது வயதளவும் பேரிளம் பெண்ணென்றும் எழுவகைப் பெயர்களுண்டு.

இவ்வெழுவகைப்பெயருள் ஏழுவருஷத்துள் அறியா சிறியளாகும் பேதமெய்யென்பது பெண்களுக்குரிய ஓர் பெயராதலின் மாதருக்குரிய பெயர்களில் பேதமெ யென்பதுமோர் பெயரென்று குறிப்பிட்டுள்ளாள்.