பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 523

67. பையச் சென்றால் வையந் தாங்கும்

பைய - மெல்லெனச், சென்றால் - செல்லுவோமாயின், வையம் பூவுலகு, தாங்கும் - யேந்துமென்பதாம்.

உலகத்தின்கண் வார்த்தை மிருதுவாகவும் நடத்தை அமைதியாகவும், செயலை நிதானமாகவும் செய்துவருவோமாயின் வையத்துள்ள சகல மக்களாலும் ஏந்திப் புகழப்படுதல் அநுபவமாதலின் சகலகாரியங்களையும் நிதானித்துச் செய்வோர்களை வையந் தாங்குமென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

நீதிவெண்பா

சீலமில்லா னேதேனு செப்பிடினுந்தானந்தக் / கால மிடமறிந்து கட்டுரைத்தே - யேலவே
செப்பு மவனுந்தான் சிந்தை நோகாதகன்று / தப்புமவ னுத்தமனே தான்.

68. பொல்லாங்கென்பவை யெல்லாந் தவிர்

பொல்லா - கொடிய, ஆங்கு - அங்கம், யென்பவை - யென்று சொல்லும் படியான, எல்லா - சகல குற்றங்களையும், தவிர் - அகற்றிவிடு மென்பதாம்.

அதாவது தேக குற்றம், வாக்கு குற்றம், மனோகுற்றங்களாகும் முத்தோஷங்களமைந்த பொல்லா அங்கத்தோனென்னும் பெயரெடாது அக்குற்றங்களைத் தவிர்த்து வாழ்கவேண்டுமென்பது கருத்து.

69. போனக மென்பது வானவர் விருந்து

போனகம் - காமதேனு அல்லது கற்பக விருட்சம், என்பது - என்று கூறும்படியானது, வானவர் - மக்கள் நிலைகடந்து தெய்வநிலை யடைந்தவர்கள், விருந்து - தங்களை யண்டினோர்க் களிக்கும் அமுத மென்னப்படும் என்பதாம்.

தாயுமானவர் கூறியுள்ளபடி “போனகமமைந்ததென வக்காமதேனு னின் பொன்னடியினின்று தொழுமே" என்னுஞ் செய்யுளுக்குப் பகரமாய் காட்டிலும், குகைகளிலுந் தங்கி ஞான கருணாகர முகமமைந்த பெரியோர்களைக் காண வேண்டிவரும் அரசர்களுக்கும், குடிகளுக்கும் அக்காலுண்டாகும் பசிதாகத்தை நிவர்த்திக்கக் கூடிய ஓரமுதமென்னப்படும். காட்டில் தங்கியுள்ளவர்களுக்குக் கேட்டதை அளிக்கும் ஓர் சித்தின்நிலைக்குப் போனகமென்னும் பெயரை அளித்துள்ளார்கள்.

காக்கைபாடியம்

கேட்டவை யாவுங் கொடுக்கும் போனகம் / நாட்டுள் மாரியாய் நடக்கும் வானகம்
வீட்டினி லடங்கி யுள்ளொளி கண்டோர் / வாட்டமொன்றில்லா வாழ்க்கையதாமே.

புத்தசங்கத்தோர் பிட்சா பாத்திரத்திற்கும் போனகமென்னும் ஓர் பெயருமுண்டு. அதுகொண்டே பட்டினத்தார் வற்றாத பாத்திரமென்றுங் கூறியுள்ளார். அதற்குப் பகரமாய் மணிமேகலையிலுள்ள ஆபுத்திரன் காதையைக் காணலாம்.

அருங்கலைச்செப்பு

வானகத்துட் சென்றார் மாபாத்திரமெடுத்தார் / போனகத்தா லுண்ட பொருள்.
கரபாத்திரமெடுத்தார் காட்சி நிலைத்தார் / திரநேத்திர மமைந்த சீர்.

70. மருந்தும் விருந்தும் முக்குறை யகற்றும்

மருந்தும் - ஓடதியும், விருந்தும் - விரும்பியுண்போர் புசிப்பும், முக்குறை - மூன்று தோஷங்களை, யகற்றும் - நீக்குமென்தாம்.

அதாவது, மருந்துண்பதினால் வாததோஷம், பித்த தோஷம், சிலேத்தும தோஷம் ஆகிய முத்தோஷங்களையும், விருந்தளிப்பதினால் எதிரிக்குப் பொருளில்லா குறையும், பசியின் குறையும், பிராண துடிப்பின் குறையும் நீங்கி சுகமடைவதால் விருந்தினால் நீக்கும் முக்குற்றங்களையும் மருந்தினால் நீங்கும் மூக்குற்றங்களையும், ஏகபாவனையால் புசிப்பிற்சுட்டி பகர்ந்திருக்கின்றாள். விருந்துக்கு வருவோன் முக்குறையாவது இல்லாக்குறை, பசியின் குறை, காலக் குறையுமேயாம்.