பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 525

78. மைவிழியாடன் மனையகன் றொழுகு

மைவிழியாள - கண்களில் மைதீட்டும் விலைமகள், மனை - வீட்டிற்கு, அகன்று - விலகி, ஒழுகு - நன்மார்க்கத்தில் நடவென்பதாம்.

கண்ணால் விழித்து மயக்கி தனது வயப்படுத்தும் விலைமகளின் வீட்டினருகே வாழ்தல் எவ்விதத்துங் கேட்டைத்தரும் வாழ்க்கையாதலின் அவள்வீட்டின் அருகே வாழ்தல் ஒழுக்கத்திற்கு இழுக்கென்பது துணிபாம்.

79. மொழிவது மறக்கி னழிவது கருமம்

மொழிவது - தனது தாய் தந்தையாராலேனும், தன்னை ஆண்டு வருபவனாலேனுங் கூறிய வார்த்தையை, மறக்கின் - மறந்துவிடில், கருமம் - அத்தொழிலானது, அழியுங் - கெட்டுப்போமென்பதாம்.

தனது எஜமானனாகும் ஆண்டவன் ஏவிய மொழியை மறப்பானாயின் அக்கருமத்திற்கே கேடுண்டாயதென்பது கருத்து.

80. மோனமென்பது ஞானவரம்பு

மோனமென்பது - பற்றற்ற நிலையென்று கூறுவது, ஞானம் - அறிவினாற் கட்டப்பட்ட, வரம்பு - வரப்பு அல்லது எல்லையத்துவென்று கூறப்படும் யென்பதாம்.

விவேகவிருத்தியற்று வீணில் அலைந்து திரியும் மனதை அடக்கியாள்வ தென்னப்படும். அதாவது விவேகமென்னும் அறிவைக்கடந்து மனம் மலையாதுநிற்கும் சுகவாரிக்கு ஒப்பாய பற்றற்ற நிலையென்பது கருத்து.

81. வளவனாயினு மளவறிந்தெடுத் துண்

வளவன் - தானிய சம்பத்துள்ளவன், ஆயினும் - இருப்பினும், அளவறிந்து - தன்குடும்பத்துக்குப்போதுமான திட்டந்தெரிந்து, எடுத்து- பண்டியினின்று மொண்டு, உண்ணு - சமைத்துப் புசிக்கக் கடவா யென்பதாம்.

பூமிச் செல்வமாகும் தானிய சம்பத்து ஏராளமாக இருப்பினும் அவற்றை வீண்விரயஞ் செய்யாது தன் சிலவுக்குத் தக்கவாறு எடுத்து உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்னும் செட்டு நிலையை ஞானத்தாய் உழுதுண்ணும் வேளாளத் தொழிலாளருக்கு விளக்கியுள்ளாள்.

82. வானஞ்சுருங்கிற் றானஞ்சுருங்கும்

வானம் - காலமழை, சுருங்கிற் - குறைந்துபோமாயின், தானம் - பூமிவளம், சுருங்கும் - தானியவிளைவு குன்றுமென்பதாம்.

எத்தகைய பெருக்கதானியப் பண்டிகள் நிறைந்திருப்பினும் ஓராண்டு கால மழை தவறுமாயின் தானியவிருத்தி குன்றி குடிகள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி நேரிடுமாதலின் வளநாடனும் தானியசம்பத்து நிறைந்துள்ள வனாயினும் அளவறிந்து சிலவுசெய்யவேண்டுமென்று முன்வாசகத்திலும் மொழிந்துள்ளாள்.

83. விருந்திலோர்க்கில்லை பொருந்திய வொழுக்கம்

விருந்து - நிதம் ஒருவருடன் கலந்து புசிக்கும் புசிப்பு, இல்லார் அற்றிருப்போர்க்கு, பொருந்திய - சேர்ந்து வாழக்கூடிய, ஒழுக்கம் - நல்வாழ்க்கைத்துணை, இல்லை - அவர்களுக்குக் கிடையாதென்பதாம்.

அனவரதம் ஒருவருக்கு அன்னமிட்டு உண்ணும் அன்பில்லாமல் லோபம் நிறைந்திருக்குமாயின் அவனை நெருங்கி ஒருவனும் அணுகாது வாழ்க்கைத் துணை அற்றுபோமென்பது கருத்து.

84. வீரன்கேண்மெய் கூரம்பாகும்

வீரன் - யுத்தவல்லபனை, கேண்மெய் - நேசித்த தேகிக்கு, கூரம்பு - சாணைதீர்த்தவேலை, ஆகும் - கையிலேந்தியுள்ளதற் கொக்கும் யென்பதாம்.

யுத்தத்தில் வல்லமெய் யுடையோனை நேசித்துள்ளவன் கூரிய அம்பை எக்காலுங் கரத்திலேந்தி இருக்குங்கால் எவ்விதத்துந் தன்கரத்தைக் காயப் படுத்துவதுபோல் ஏதேனும் ஓர்நாளில் வீரனால் உபத்திரவமடைய நேரும் ஆதலின் வீரன் கேண்மெயை விரும்பாதே என்பது கருத்து.