பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526 / அயோத்திதாசர் சிந்தனைகள்

85. உரவோனென்கை யிரவா திருத்தல்

உரவோன் - தேகவுரம் பெற்றவன், என்கை - யென்போன், இரவாது - மற்றொருவர்பா லிரந்துண்ணாது, இருத்தல் - இருக்கவேண்டு மென்பதாம்.

அதாவது தேகத்தில் யாதாமோர் பழுதின்றி உரமாகும் பிலமுற்றிருப் போன் ஒருவரையடுத்து இரந்துண்ணாது தேகத்தை வருத்தி உழைத்துண்ண வேண்டுமென்பது கருத்து.

86. ஊக்கமுடைமெய் யாக்கத் திற் கழகு

ஊக்கம் - இடைவிடா முயற்சி, உடைமெய் - உடையவனின், யாக்கத்திற்கு - உருவிற்கு, அழகு - சிறப்பென்னப்படும்.

எத்தொழிலை எடுப்பினும் அவற்றை இடைவிடா முயற்சியினின்று சாதித்து முடிக்குந் தேகியை சிறப்பித்துக் கொண்டாடுவது இயல்பாதலின் முயற்சியின் அழகை சிறப்பித்துக் கூறியுள்ளாள்.

87. வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை

வெள்ளைக்கு - சுத்தவிதயமுள்ளார்க்கு, கள்ளச்சிந்தை - வஞ்சினம், கபடு, சூதுமுதலிய துற்குணங்கள், இல்லை - இராவென்பதாம்.

குணமென்னுங் குன்றேறிய சுத்தகுணமுள்ளோரிடத்து வஞ்சினம், கபடு, சூது முதலிய துற்குணங்கள் யாவும் அணுகாதென்பது கருத்து.

88. வேந்தன்சீறி னாந்துணையில்லை

வேந்தன் - ஆளும் அரசனானவன், சீறின் - சினந்துநிற்கின், ஆந்துணை - அவனைத் தடுத்தாளும் உதவி, இல்லை - வேறில்லை யென்பதாம்.

தேசத்தை ஆளும் அரயனுக்கு ஒருவன்மீது மீறியக் கோபமுண்டாயின் அவனது கோபத்தை அடக்கிக் கார்ப்போர் அங்கு ஒருவருமில்லை என்பது கருத்து.

89. வையந் தொடருந் தெய்வந் தொழு

வையம் - புடவி பாசமானது, தொடரும் - உன்னை யெக்காலும் பின்பற்றுமாதலின், தெய்வம் - தேய்வகமாம் உண்மெய்யைத், தொழு - உள்ளொளிகண் டொடுங்கு மென்பதாம்.

பாச அடவியின் பந்தப்பற்றானது வண்டி எறுதின் காலை சக்கரந் தொடர்ந்து செல்லுவது போல் மாறா பிறவிக்கும், மீளா துக்கத்திற்கும் கொண்டு போய்விடும். ஆதலின் தேய்வகமாம் உள்ளொளியில் அன்பை வளர்த்தி ஒடுக்கவேண்டுமென்பது கருத்து.

ஒளவைக்குறள்

அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கில் / பந்தப் பிறப்பறுக்கலாம்.

90. ஒத்தவிடத்து நித்திறைக்கொள்

ஒத்தவிடத்து - உன் சாதனத்திற்கு நேர்ந்தவிடத்து, நித்திறை - தூங்காமற்றூங்கும் நிலையில், கொள் - உழ்க்காருமென்பதாம்.

நேர்ந்தவிடத்து ஆனந்த நித்திறையாம் தூங்காமற்றூங்கும் நிலையை வற்புறுத்தியுள்ளாளன்றி தன்னை அறியாமற் தூங்கும் மரண தூக்கத்தைக் கூறினாளில்லை.

91. ஓதாதார்க்கில்லை வுண்மெயி லொடுக்கம்

ஓதாதார்க்கு - நற்கேள் வியில் முயலாதார்க்கு, உண்மெயிலொடுக்கம் - தன்னுட்டானே யொடுங்கி சுயம்பாம் நிலை, இல்லை - கிடையா தென்பதாம்.

ஆதலின் ஒவ்வோர் மக்களும் நீதி நூற்களை ஓதி உணர்ந்து உண்மெயில் அன்பை வளர்த்து புறமெய் வெறுத்து பிறவியறுத்து நிருவாணமடைய வேண்டுமென்பது கருத்து.

ஔவையார் அருளிச் செய்த இரண்டாம் வாசகம் முற்றிற்று

(இரண்டாம் வாசகம் மூன்றாமாண்டு 12ஆம் இலக்கத்தில் தொடங்கி மூன்றாமாண்டு 24ம் இலக்கத்தில் முடிவுறுகின்றது)