பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

528 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வீரசோழியம்

ஆலியனைத்துங் க,ச,த,ந,ப, மவ்வரியும் வவ்வி
லேவிய வெட்டும் யவ்வாறு ஞந்நான்கு மெல்லாவுலகு
மேவிய வெண்குடை செம்பியன் வீரரா ஜேந்திரன்றன்
நாவியல் செந்தமிழ் சொல்லின் மொழிமுத னண்ணுதலே.

மதத்திற் பொலியிம் வடசொற் கிடப்பும் தமிழ்மரபு
முதத்திற் பொலியேழை சொற்களின் குற்றமு மோங்குவினை பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்க பன்னூறாயிரம்,
விதத்திற் பொலியும் புக ழவலோகிதன் மெய்த்தமிழே.

சிலப்பதிகாரம்

தண்டமிழாசான் சாத்தனிஃதுரைக்கு.

முன்கலை திவாகரம்

ஒருவர்க் கொருவனாகி யுதவியும் / பரிசின் மாக்கள் பற்பலராயினுந்
தானொருவன்னே தரணிமாதவன் / செந்தமிழ் சேந்தன் தெரிந்த திவாகரம்.

சிவஞான யோகீசுவரர்

இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவரியல் வாய்ப்ப
இருமொழியும் வழிபடுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும்
இருமொழியு மான்றவரே தழீ இயினா ரென்றாலில்
இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ.

இத்தகைய இலக்கிய நூல் இலக்கண நூற்களின் ஆதாரங்களைக்கொண்டு தமிழட்சரங்களை இயற்றியளித்தவர் புத்தபிரானென்றே தெளிவாக விளங்குகிறபடியால் எழுத்தறிவித்தவன் சிறப்பைக்கூறி அன்னோர் தன்மத்தை விளக்கலுற்றாள்.

2. கல்விக்கழகு கசடறமொழிதல்

தான் கற்ற கல்விக்கு சிறப்பு யாதெனில், கூறும் வாக்கில் குற்றம் எழாமலும், மற்றவர்களிதயம் புண்படாமலும் முன்பின் யோசித்து பேசவேண்டுமென்பது கருத்து.

3. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

திரவிய சம்பத்தைப் பெற்றவர்களுக்கு சிறப்பு யாதெனில், தனது குடும்பம் ஓங்கி செழிக்கவும், தன்னை அடுத்தோர் குடும்பம் ஓங்கி செழிக்கவும் அன்புடன் உதவிபுரிந்துவருவானாயின் அதுவே தனவந்தன் அழகென்பது கருத்து.

4. வேதியர்க் கழகு வோதலு மொழுக்கமும்

சத்தியதன்மமாம் சதுர்பேத மொழிகளை ஓதுவோர்க்கு அழகு யாதெனில், எத்தேச எப்பாஷைக்காரனாயிருப்பினும் நீதியும், நெறியும், வாய்மெயும் நிறைந்து சகலருக்கும் நன்மெயை விளக்கவேண்டியவனாகவும் அன்றேல் ஓதியுணர்ந்த பயனால் சகலருக்கும் நல்லவனாகவும் விளங்குவோன் எவனோ அவனே வேதமோதும் சிறப்புடையானென்னுங் கருத்து.

நல்லாப்பிள்ளை பாரதம்

நீதியும் நெறியும் வாய்மெயு முலகில் நிறுத்தினோன் வேதியனன்றி
வேதியனேனு மிழிக்குறி லவனைவிளம்பும் சூத்திரனென வேத
மாதவர் புகன்றா ராதலாலுடல மாய்ந்தபின் பாவதோர் பொருளோ
கோதிலாவிந்தப் பிறவியில் வேதக் குரவனீ யல்லையோ குறியாய்.

5. மன்னவர்க்கழகு செங்கோ நடத்தல்

அரசர்களுக்கு அழகாவது யாதெனில், செவ்விய நீதியின் கோலேந்தி தன்னவரன்னிய ரென்னும் பட்சபாதமின்றி நீதியை செலுத்துவதுடன் குடிகள் யாவருந் தனது பாதுகாப்பிலிருக்கின்றபடியால் அவர்களுக்கு, யாதாமோர் தீங்குநேரிடாவண்ணம் ஆதரிப்பதே மன்னர்க்கு சிறப்பென்பது கருத்து.

குமரேச சதகம் - மன்னரியல்

குடிபடையி டபிமான மந்திராலோசனை குறிப்பரிதல் சத்யவசனம்
கொடைநித்தமவரவற்கேற்றமரியாதைபொறை கோடாத சதுருபாயம்
படிவிசாரிணை யொடுப் பிரதானிதளகர்த்தரை பண்பறிந்தே யமைத்தல்