பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அப்பழக்கமானது மத்திய பாதாளமென்னும் இரண்டிலும் வீழ்ந்துருகியுள்ள வேர்போல் பதிந்துள்ள கேண்மெயாம் என்பது கருத்து.

(அதனால்)

34. கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைபுகினுங் கற்கை நன்றே

மேற்கூறியக் கீழ்மக்கள் மேன்மக்களென்னும் பெயர்வாய்த்த வகையறிந்தோர் கலை நூற்களைக் கற்றல் நன்று. அவற்றுள் பிச்சைபுகும் வறியகாலம்வரினும் கலை நூற்களைக் கற்றுத் தெளியவேண்டுமென்பது ஞானத்தாயின் கருத்து.

35. கல்லானொருவன் குலநலம் பேசுதல்
நெல்லி னுட்பிறந்த பதராகும்மே

கலை நூற்களைக் கற்றுணராதவன் தனது குடும்பத்தை உயர்த்தியும் விசேஷித்தும் பேசுதல் பயனற்ற சொற்களாகி நெல்லினுட்டோன்றும் பதர்போ லொழியுமென்பது கருத்து. ஆதலின்,

36. நாற்பாற்குலத்தின் மேற்பாலொருவன்
கற்றிலனாயிற் கீழிருப்பவனே

அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் எனும் நான்குவகைத் தொழிலை நடாத்தும் நான்கு குடும்பத்தோருள் விவேகமிகுத்த மேற்குடும்பமாம் அந்தணர் குடும்பத்திற் பிறந்தும் கலை நூற்களை வாசித்துணராதவனா யிருப்பானாயின் அவனைக் கீழ்க்குடும்பமாம் கடைகுலத்தானென்றே அழைக்கப்படுவான்.

37. எக்குடிபிறப்பினும் யாவரேயாயினும்
அக்குடியிற்கற்றோ ரறவோராவர்

மேற்கூறியுள்ள நால்வகைத் தொழிலை நடாத்தும் நாற்குடும்பத்தோருள் எக்குடும்பத்திலாயினும் எவனொருவன் கலை நூற்களைக் கற்று பூரணமடைகின்றானோ அவனே அறவோனாம் அந்தணன் என்றழைக்கப் படுவான்.

38. அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்

கலைநூற் பயிற்சியால் நீதியும், நெறியும், வாய்மெயும் நிறைந்த அறிவுடையோனை அரசனாம் தேசத்தையாளும் மன்னனும் விரும்பி கொண்டாடுவான்.

39. அச்சமுள்ளடக்கி அறிவகத்தில்லா

கொச்சைமக்களை பெறுதலினக்குடி
எச்சமற்றென்று மிருக்கை நன்றே.

கலை நூற் கற்ற விவேகவிருத்தியால் மனுகுலத்தோனென வெளி தோன்றாது கல்லாக்குறையால் மநுக்களாம் விவேகிகளைக் கண்டவுடன் மிருகங்களச்சமுற்று ஒடுங்குதல்போல் அடங்கும் பேதைமக்களைப் பெறுவதினும் எச்சமாம் புத்திரபாக்கியம் அற்றிருப்பதே நன்றென்பது கருத்து.

40. யானைக்கில்லை தானமுந் தருமமும்

யானைக்கு ஈயுங்குணமும், நன்மார்க்கமும் இல்லையென்பது கருத்து.

41. பூனைக் கில்லை தவமுந் தயையும்

பூனைக்கு ஒழுக்கமும், பரோபகாரமும் இல்லையென்பது கருத்து.

42. ஞானிக்கில்லை யின்பமுந் துன்பமும்

விவேகமிகுத்தப் பெரியோர்களுக்கு பேராசையாம் அதியிச்சையும், உபத்திரவமாந் துக்கமும் இல்லையென்பது கருத்து.

43. சிதலைக்கில்லை செல்வமுஞ்செருக்கும்

சிதலென்னுங் கறையானுக்கு திரவியசம்பத்தும், அகங்காரமும் இல்லை யென்பது கருத்து.