பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 533

44. முதலைக்கில்லை நீச்சும் நிலையும்

முதலையாம் நீர் மிருகத்திற்கு நீரில் நீந்தும் செயலும், நிலைக்குஞ் செயலும் இல்லை என்பது கருத்து.

45. அச்சமும் நாணமும் அறிவிலார்க்கில்லை

விவேக விருத்தி இல்லாதவர்கள் பெரியோர்களிடத்தில் பயமும் கெட்ட செய்கைகளில் வெழ்க்கமுமடையார் என்பது கருத்து.

46. நாளுங் கிழமெயு நலிந்தோர்க்கில்லை

நல்லநாளைப் பார்ப்பதும், நற்பலன் வேண்டுமென வாரத்தைக் கருதிப்பார்ப்பதுமாகியச் செயல்களை வியாதியஸ்தருக்குப் பார்ப்பதில் பயனில்லை. நோய்க்கண்டவுடன் சிகிட்சை செய்வதைவிட்டு நாளையும், அதன் பலனையும் நோக்குவதானால் வியாதி அதிகரித்து நோயாளி துன்பமடைவானாதலின் அக்காலத்தில் யாதொரு நாளையுங் கருதாது நோயைக் கருதி உடனுக்குடன் பரிகாரஞ் செய்யவேண்டுமென்பது கருத்து.

47. கேளுங்கிளையுங் கெட்டோர்க்கில்லை

சுருதி விசாரிணையும், குடும்ப விசாரிணையும் சுகநிலை கெட்டு எழியநிலை அடைந்தோர்க்கு இல்லையென்பது கருத்து.

48. உடைமெயும்வருமெயு மொருவழிநில்லா

தற்காலந் தோன்றி உடைத்தாய தேகமும் மறு பிறவிக்கு ஆளாகுந் தேகமும் எண்ணிய மார்க்கத்திற் சென்று நிலைக்காது என்பது கருத்து.

49. குடைநிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர்
நடைமெலிந்தோரூர் நண்ணினுநண்ணுவர்

ஏகச்சக்கிராதிபதியாய் வெண்குடை நிழலில் யானையின் மீது சென்றவர்களும், ஒடுங்கிக் கால்நடையில் நடப்பினும் நடப்பர் என்பது கருத்து.

50. சிறப்புஞ் செல்வமும் பெருமெயு முடையோர்
அறக்கூழ்சாலை யடையினுமடைவர்

சிறந்த வாழ்க்கையும், திரவிய சம்பத்தும், பெரியோரென்னும் பெயரும் பெற்று வாழ்ந்தவர்கள் அன்னசத்திரத்திற் சேரினுஞ் சேருவர் என்பது கருத்து.

51. அறத்திடு பிச்சை கூறியிரப்போர்
அரசரோ டிருந்தரசாளினு மாளுவர்

தருமஞ் செய்வோரிடத்துக் கையேந்தி பிச்சை இரப்போர் ஓர் காலத்தில் அரசரோடு வீற்றிருந்து இராட்சியம் ஆளினும் ஆளுவர்.

52. குன்றத்தினைய நிதியைபடைத்தோர்
அன்றைப்பகலே யழியினுமழிவர்

மலைக்கொப்பாய திரவியக் குவியலை உடையவராயினும் அதே மத்தியானத்துள் இழந்தாலும் இழப்பர்.

53. எழுநிலைகூடங் கால்சாய்ந்துக்குக்
கழுதைமேய்ப்பா ழாகினுமாகும்

எழடுக்குகள் அமைந்த மாடமாளிகையும் கற்றூண்களமைந்த சபாமண்டபம் ஆயினும் ஓர் காலத்தில் கழுதைகள் வந்தடையும் குட்டிச்சுவராகத் தோன்றினுந் தோன்றும்.

54. நல்லஞானமும் - வானகநோக்கினும்
எல்லாமில்லை யில்லில்லோர்க்கே

விவேக விருத்தி பெற விரும்புவோருக்கும் வானமாகும் அகண்டத்துலாவ விரும்புவோருக்கும், நிலையாகத் தங்கியிருந்து ஆராய்ச்சிசெய்வதற்கு ஓரிருப்பிடம் இல்லாமற்போமாயின் விரும்பிய சுகம்யாதுங் கூடாவென்பது கருத்து.