பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534 / அயோத்திதாசர் சிந்தனைகள்

55. தறுகண்யானைத் தான்பெரிதாயினுஞ்
சிறுகண் மூங்கிற் கோற்கஞ்சும்மே

கணுமூட்டுகளும் பெரியதுமான யானையாயினும் சிறு கணுக்களமைந்த மூங்கிற்றடிக்கு அஞ்சுமென்பது கருத்து.

56. குன்றுடைநெடுங்கா டூடேவாழினும்
புன்றலைபுல்வாய் புலிக்கஞ்சும்மே

மலைச்சார்பாகுங் காட்டில் வாசஞ்செய்யினும் ஊனைக்கௌவும் நாவினையுடைய புலிக்கு அஞ்சவேண்டுமென்பது கருத்து.

57. ஆரையாம்பள்ளத் தூடேவாழினும்
தேரைபாம்பிற்கு மிகவஞ்சும்மே

கற்பிளவுகளுக்குள்ளே தேரையானது பயமற்ற வாழ்க்கையுற்றிருப்பினும் பாம்பிற்கு அஞ்சுமென்பது கருத்து. (அதுபோல்),

58. கொடுங்கோன்மன்னன் வாழும்நாட்டிற்
கடும்புலி வாழுங் காடுநன்றே

நீதியும், நெறியும், வாய்மெயுமற்று கொடிய வன்னெஞ்சமே குடிகொண்ட அரசனது நாட்டில் வாழ்வதினும் உயிரை வதைத்து ஊனைத்தின்னும் புலிவாழுங் காட்டில் வசிப்பது நன்றென்பது கருத்து.

59. சான்றோரில்லா தொல்பதி யிருத்தலின்
தேன்றேர்க்குறவர் தேயனன்றே

பஞ்சபாதகமற்ற மேன்மக்களாம் சாந்தரூபிகள் வாசஞ்செய்யாவிடத்தில் வாழ்க்கை பெற்றிருப்பதினும் தேனையும், மயிர்ப்பீலியையும் விற்று சீவிக்குங் குறிஞ்சிநிலவாசிகளாம் குறவருடன் கூடிவாழ்வது மேலென்பது கருத்து.

60. இல்லோரிரப்பது மியல்பே யியல்பே
இரந்தோர்க்கீவது முடையோர்க்கடனே

இல்லாத ஏழைகளாயிருப்போர் எங்கேனுஞ்சென்று இரந்துண்ண வேண்டியது இயல்பாகும். (ஆதலின் ) அவ்வகை இரப்போர்க்கு திரவிய சம்பத்துடையார் தங்களாலியன்ற உதவிபுரிவதே கடனென்பது கருத்து.

61. மணிவணியணிந்த மகளீராயினும்
பிணவணியணிந்துங்கொழுனரைத்தழூஇ

உடுத்தவாடை கோடியாக முடித்தகூந்தல் விரிப்பினும் விரிப்பர்.

நவரத்தின ஆபரணங்களை அணிந்து தங்கள் கணவர்பாற் கூடிக் குலாவி ஆனந்தத்திலிருக்கும் பெண்களும் சகல ஆபரணங்களையுங் கழற்றி எறிந்து வெள்ளையாடை, யுடுத்தி தலைவிரித்துநிற்குங்காலம் வரினும் வரும்.

62. பெற்ற முங்கழுதையும் மேய்ந்தவப்பாள்
பெற்றொடி மகளிரும் மைந்தருங்கூடி
நெற்பொலி நடுநக ராயினுமாகும்

பன்றியையுங் கழுதையையும் மேய்த்து சீவிப்பவள் ஓர்கால் இராணி யோடும், இராஜபுத்திரரோடுங் கூடிக் குலாவி நெல்வயற்சூழ்ந்த நாட்டினும், நகரினும் வசிப்பள்.

63. வித்துமேரு முளவாயிருப்ப
எய்த்தங்யிருக்கும் யேழையும்பதரே

விதைமுதலும், பூமியும், ஏருங் கையிருப்பிலிருக்க அவற்றை உழுது பயிர்செய்து சீவிக்காது தன்னை ஏழையாக்கி வெளிதோன்றிவருபவன் பதருக்கொப்பாவன். (யீதன்றி),